Monday, 1 October 2018

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாது என்பதற்கான வலுவான காரணங்கள் எம்மிடம் உண்டு ; செல்வம் அடைக்கலநாதன்

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாது என்பதை பல விட்டுக்கொடுப்புகளை செய்து சர்வதேசத்திற்கு நிருபித்துள்ளோம். சர்வதேசம் நாங்களே எங்களை ஆளக்கூடியதற்கான தீர்வினை தருவதற்கான முயற்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயமாக செய்யும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 10 வது தேசிய மாநாட்டின் நிறைவு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய மாநாடு நேற்று முன்தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் ஆரம்பமானது.

நேற்றைய தினம் கட்சியினால் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் அவை பொதுச்சபையின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

காணாமல்போனவர்களின் பிரச்சினை, அரசியலமைப்பு திட்டம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவற்றிற்கு எதிர்வரும் டிசம்பவர் 31ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வழங்கப்படாவிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேறு வழிகளை தெரிவுசெய்யவேண்டியதற்கான நிர்ப்பதங்களை வழங்கும் வகையிலான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் வடகிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,

கடந்த மூன்று ஆட்சிக்காலத்தில் சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு ஒன்றை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற முனைப்புடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டுவரும் நிலையில் அது ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.

இந்த அரசாங்கத்துடன் நாங்கள் இணைந்து செயற்பட்டுவரும் நிலையில் தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்துடன் இருந்து எதனைச்செய்யப்போகின்றீர்கள் என மக்கள் எங்களிடம் கேள்வியெழுப்புகின்றனர்.

இந்த அரசாங்கம் ஏமாற்றும் என்ற நிலை இருந்தாலும் கூட இது சர்வதேசத்திடம் நியாயம் கேட்கும் ஒரு சந்தர்ப்பமாக இதனை நாங்கள் கொள்ளமுடியும்.

நாங்கள் அரசாங்கத்தினை எதிர்த்து நின்றுகொண்டிருந்தால் ஒரு தீர்வு விடயத்தில் இவர்கள்தான் எதிராக நிற்கின்றார்கள் என்ற தோற்றப்பாட்டினை சர்வதேச சமூகத்திடம் அரசாங்கம் காட்டமுனையலாம்.

இந்த காலகட்டம் தமிழ் மக்களுக்கான விடுதலையினைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தமது கட்சியினை வளர்ப்பதற்குமான காலமாக இருப்பதனால் அதனை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் இந்த மண்ணிலேயே நடைபெற்றது. மறைந்த ஊடகவியலாளர் சிவராம் உட்பட இங்கிருந்த ஊடகவியலாளர்கள் எங்களிடம் விடுத்தகோரிக்கைக்கு அமைய ஒத்துழைப்பு வழங்கியதன் காரணமாகவே இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவானது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர்கள் விட்டுச்சென்ற பாதையில் நாங்கள் தொடர்ந்து பயணிக்கின்றோம், தொடர்ந்து பயணிப்போம்.

தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் முதன்முறையாக ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்பாக எங்களது தமிழீழ விடுதலை இயக்கமே இருந்தது என்பதை இங்கு பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன்.விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினராக இருந்து பிரிந்துசென்றே தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினை உருவாக்கினார் என்பது வரலாறாகும்.

எதற்காக நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடினோமோ அதனை அடைவதற்கு இன்று அரசியல் ரீதியாக போராடிவருகின்றோம். எந்த காலத்திலும் இந்த அரசாங்கத்திற்கோ வேறு யாருக்கோ அடிபணிகின்ற அடிவருடிகளாக எமது கட்சி இருக்கவில்லை.

இந்த அரசாங்கம் நாங்கள் முன்வைத்த எந்தகோரிக்கையினையும் இதுவரையில் நிறைவேற்றவில்லை. எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தில் மாற்று நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கின்றோம்.

கடந்த காலத்தில் சில கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் ஆதரவினை வழங்கிவந்தோம். ஆனால் இந்த முறை அதற்கான வாய்ப்பு இருக்காது.

அரசாங்கத்திற்கு ஓருபோதும் அடிவருடிகளாக தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் செயற்படவில்லை.

ஒரு சிலர் தமது நடவடிக்கைகளை வித்தியாசமாக செய்யும்போது அதனை வைத்துக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறாக செல்கின்றது என யாரும் தவறாக எண்ணிவிடக்கூடாது.


விளம்பரம்

விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் +94774111499


இந்தபோராட்ட காலத்தில் பல வரலாறுகளை படைத்த எமது கட்சி என்றைக்கும் சோரம்போகாது.எமது நிலைப்பாடுகள் ஒவ்வொன்றும் மக்கள்சார்ந்தவையாக மட்டுமே இருக்கவேண்டும்.

இன்று வெள்ளைவான் கடத்தல் இல்லை, காணாமல்போதல் இல்லை. ஆனால் இனப்பிரச்சினையென்பது அப்படியே இருக்கின்றது.

காணிகள் அபகரிக்கப்படுகின்றன, இராணுவ ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன, எல்லைப்புறம் அபகரிக்கப்படுகின்றது.

இந்த அரசாங்கம் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போன்று வன்முறையில்லாத இனப்பிரச்சினையினை தூண்டுகின்ற, இனப்பிரச்சினைக்கு வித்திடுகின்ற எமது மக்களை மூன்றாம் தரப்பாக பார்க்கின்ற அரசாங்கமாகவே இருந்துவருகின்றதே தவிர மக்கள் நலன் தொடர்பில் செயற்படவில்லை.

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாத நிலையில் அவர்களை தொடர்ச்சியாக ஆதரித்துவந்துள்ளோம் என்பதற்காக இந்த அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்துவிட்டோம் என யாரும் கருதிவிடக்கூடாது.

தென்னிலங்கையில் இந்த அரசாங்கம் தொடர்பில் விமர்சனங்கள் வருகின்றதோ இல்லையோ,வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினைத்தான் வசைபாடுகின்றனர். நாங்கள் தூய்மையான அரசியலை நடாத்துவதன் காரணமாக இவ்வாறான விமர்சனங்கள் தொடர்பில் கவலைகொள்ளவில்லை.

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாது என்பதற்கான வலுவான காரணங்களை நாங்கள் கொண்டிருக்கின்றோம்.இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாது என்பதை பல விட்டுக்கொடுப்புகளை செய்து சர்வதேசத்திற்கு நிருபித்துள்ளோம்.சர்வதேசம் நாங்களே எங்களை ஆளக்கூடியதற்கான தீர்வினை தருவதற்கான முயற்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயமாக செய்யும்.
Loading...