Monday, 28 August 2017

ஆமைவேக செயற்பாடுகள்


-     கருணாகரன்

மந்த நிலையில்தான் நாட்டின் நடவடிக்கைகள் உள்ளனவா? என்று பலரும் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். அரசியல் அமைப்புத்திருத்தமாக இருக்கட்டும். அபிவிருத்தித்திட்டங்களாக இருக்கRanil-maithriட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்கான நடவடிக்கைகளாக இருக்கட்டும் நாட்டில் நிலவுகின்ற முக்கியமான – முதன்மைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக இருக்கட்டும். எதையும் இந்த அரசாங்கம் வேகமாகவோ விரைவாகவோ செய்வதாகக் காணவில்லை. எல்லாமே மந்த நிலையில்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

சில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்கிறது எனச் சொல்லப்படுகிறது. அப்படிச்சொல்லப்படுகின்ற அளவுக்கு அவையெல்லாம் முன்னேற்றமாக நடந்து கொண்டிருக்கிறதா என்றே தெரியவில்லை. அப்படியென்றால், அரசாங்கம் தற்போது முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற தேசிய வேலைத்திட்டம் என்ன? பிராந்திய ரீதியான வேலைகள் என்ன? என்று யாருக்காவது தெரியுமா என்று கேட்டால் எல்லோரும் "தெரியவில்லை" என்றே சொல்கிறார்கள். "அரச தலைவர்களின் முக்கியமான நடவடிக்கைகள்" என்று எதைச் சொல்ல முடியும்? என்று கேட்கிறார் ஒரு மூத்த அரசியல் ஆய்வாளர். அந்தளவுக்கு எல்லாமே தெளிவற்றுப் புகை மூட்டமாக உள்ளன. ஏறக்குறைய மக்கள் நம்பிக்கையீனங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இந்த அரசாங்கம்தான் ஏனைய அரசாங்கங்களையும் விட வேகமாகச் செயற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகமாகக் கொண்டது. இந்த அரசாங்கத்துக்கு வலுவான எதிர்த்தரப்போ, எதிர்க்கட்சிகளோ கிடையாது. இந்த அரசாங்கத்துக்கே சிறுபான்மைச் சமூகங்கள் தொடக்கம் ஏனைய எல்லாத் தரப்புகளின் ஆதரவும் உள்ளது. இன்னொரு வகையில் சொன்னால், அனைத்துச் சமூகங்களும் பங்கேற்கும் ஒரு கூட்டரசாங்கம் இதுவாகும். எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் பின்னிப் பிணைந்திருக்கும் ஆட்சி இது.

ஆகவே எதையும் துணிச்சலாகச் செய்ய இந்த அரசாங்கத்தினால் முடியும். இப்படி எல்லா வாய்ப்புகள் இருக்கிறபோதும் ஏன் அரசாங்கம் எதையும் வேகமாகச் செய்வதற்குப் பின்னிற்கிறது?

இதற்கு முக்கியமான காரணம், இது ஒரு கூட்டரசாங்கமாகப் புற நிலையில் உள்ளபோதும் அகரீதியாகத் தன்னைத் தேசிய அரசாங்கம் என்று எண்ணிக் கொள்ளவில்லை என்பதேயாகும். தேசிய அரசாங்கமாகச் செயற்படும் எனச் சொல்லப்பட்டாலும் அல்லது அப்படிச் சொல்லிக் கொண்டு ஆட்சிக்கு வந்திருந்தாலும் நடைமுறையில் இது சராசரியான அரசாங்கமாக, அதற்கும் கீழானதாகவே உள்ளது. இந்தத் தடுமாற்றத்துக்கும் பின்னடைவுக்கும் காரணம், இந்த அரசாங்கம் முரண்நிலைப் பங்காளிகளை அதிகமாகக் கொண்டிருக்கிறது என்பதேயாகும். அத்துடன், ஐ.தே.கவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஆட்சியில் இணைந்திருந்தாலும் உள்ளே இரட்டுக்குமிடையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் போட்டிகளும் உள் மோதல்களும் எந்தத் தீர்மானத்தையும் உறுதியாக எடுக்க முடியாமல் தடுக்கின்றன. இன்னொரு புறத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நடந்து கொண்டிருக்கும் இழுபறிகளும் முரண்பாடுகளும் கூட தற்போதைய அரசாங்கத்தை வினைத்திறனோடு இயங்குவதற்குத் தடையாக உள்ளன. ஜனாதிபதி எந்தத் தீர்மானத்தையும் இரண்டு அணியாகப் பிரிந்து நிற்கும் தன்னுடைய கட்சியின் நிலைப்பாட்டுக்குக் கட்டுப்பட்டே எடுக்க வேண்டியுள்ளது.

ஆகவே இவற்றைச் சீர்ப்படுத்தாமல் இந்த அரசாங்கம் முன்னகர முடியாது. ஆனால், இதைச் சீர் செய்வதற்குரிய திடசங்கற்பமான முடிவுகள் தலைவர்களால் எடுக்கப்படவில்லை. சில சந்தர்ப்பங்களில் அப்படி அதிரடியான முடிவுகளை எடுக்கக்கூடிய தகமையும் ஆற்றலும் தங்களுக்குண்டு என ஜனாதிபதியும் பிரதமரும் வெளிப்படுத்திக் காட்டினாலும் தேசியக் கொள்கை, தேசிய அளவிலான நடைமுறை, தேசியப்பிரச்சினைகளாக இருப்பவற்றுக்கான தீர்வு என்பவற்றில் நிறையத் தடுமாற்றங்களே உள்ளன. இதற்கொரு எளிய உதாரணத்தைச் சொல்லி அப்பாலே செல்லலாம்.

ஊழல் குற்றச்சாட்டுகளின் நெருக்கடியினால் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அமைச்சுப் பதவியிலிருந்து விலகியிருக்குமாறு அழுத்தம் கொடுத்துச் செயற்படுத்திய பிரதமரும் ஜனாதிபதியும் அரசியலமைப்புத் திருத்தத்தை விரைவுபடுத்திச் சபைக்குக் கொண்டு வரவோ, வடக்குக் கிழக்கில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கோ முன்வரவில்லை. அல்லது காணாமலாக்கப்பட்டோரின் விவகாரத்தைப்பற்றிப் பேசுவதற்குத் தயாராகவில்லை. அல்லது, நாட்டின் வேலையில்லாப் பிரச்சினைக்கு ஒரு பொருத்தமான தீர்வை எட்டுவதைப்பற்றிச் சிந்திக்கவில்லை. குறைந்த பட்சம் தேசிய அரசாங்கமாக இந்த அரசாங்கத்தின் ஆட்சியை நடத்த வேண்டும் என்று தங்கள் தங்கள் கட்சியினருக்கும் அமைச்சரவைக்கும் கூட இவர்கள் தெளிவுபடுத்தவில்லை.

எனவேதான் மந்த நிலையும் தடுமாற்றங்களும் குழப்பங்களும் இந்த ஆட்சியில் நீடிக்கின்றன. இதையே தமக்கான வாய்ப்பாக எதிர்கட்சிகளின் கூட்டுமுன்னணியினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். ஏறக்குறைய இதில் அவர்கள் கணிசனமான அளவுக்கு வெற்றியுமடைந்திருக்கின்றனர். எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியும் ஜே.வி.பியும் சொல்வதில் நியாயமுண்டு என்று தென்பகுதி மக்களில் கணிசமான தொகையினர் நம்புகின்றனர். இதைப்போல இந்த அரசாங்கமும் தங்களை ஏமாற்றுகின்றது என்ற உணர்வு வடக்குக் கிழக்கில் உள்ள மக்களுக்கும் உண்டாகியிருக்கிறது. இதனுடைய வெளிப்பாடுகளே முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தை நம்புவதால் பயனில்லை. முஸ்லிம்கள் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது அடிமைத்தனத்திலேயே போய் முடியும் என முஸ்லிம் சமூகத்தின் ஊடகங்களும் சிந்தனையாளர்களும் பகிரங்கமாகக் குரலெழுப்பி வருவதுமாகும்.

ஏறக்குறைய இதை ஒத்த நிலையே தமிழர்களிடத்திலும் ஏற்பட்டுள்ளது. ஏராளம் எதிர்பார்ப்புகளோடு தமிழர்கள் மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்தை ஆதரித்தனர். மைத்திரி – ரணில் ஆட்சி உருவாகியபோது சிங்கள மக்கள் அதைக் கொண்டாடியதை விடப் பெரும்பான்மையான தமிழர்கள் அதைக் கொண்டாடினார்கள். தங்களின் மீதான அச்சுறுத்தல் இனிப்போய்விடும் என நம்பினார்கள். குறிப்பாகப் புலம் பெயர் தமிழர்கள் இதை முழு அளவில் கொண்டாடினார்கள் எனலாம். அப்படிக் கொண்டாடிய அளவுக்கும் நம்பிய அளவுக்கும் நாட்டிலுள்ள தமிழர்களுக்கு மைத்திரி – ரணில் அரசாங்கம் இனிக்கவில்லை. புலம்பெயர் தமிழர்களுக்குச் சற்று உவப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்பது உண்மையே. குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் தற்போது அச்சமற்ற நிலையில் நாட்டுக்கு வந்து திரும்பக்கூடிய நிலை உருவாகியுள்ளது. அதாவது அவர்கள் அச்ச உணர்வோடு பயந்து பயந்து வரவேண்டியதில்லை. கடந்த ஆட்கசியின்போது கட்டாயமாக நாடு கடத்தப்பட்டிருந்த முக்கியமான ஒரு தமிழ்க்கவிஞர் தற்போது வெற்றிகரமாக நாட்டுக்கு வந்து சுற்றித்திரிந்து விட்டுத் திரும்பியிருக்கிறார். இதைவிடப் புலம்பெயர் தமிழர்களுககு இரட்டைக் குடியுரிமை வேறு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை இந்த அரசாங்கம் இலகுவாகச் செய்து முடித்துள்ளது. இது தனியே புலம்பெயர் தமிழர்களுக்கான விசேட ஏற்பாடில்லை. சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் இந்த நன்மைகளைப் பெறுகிறார்கள் என்றாலும் தமிழர்களைப் பொறுத்தவரையில் இது தமக்காக இந்த ஆட்சியினால் செய்யப்பட்டதாகவே நம்பப்படுகிறது.

ஆகவே இந்த மாதிரிச் சின்னச் சின்ன விடயங்களைத் தவிர, நாட்டின் தேசியப் பிரச்சினைகளான பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்புப் பிரச்சினை, இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்புத்திருத்தம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோரின் விவகாரம், சிவில் சமுக வெளியில் இராணுவத்தலையீடு அல்லது இராணுவ அதிகாரம், நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான அபிவிருத்தித்திட்டங்கள் போன்றவற்றைப் பற்றிய அரசாங்கத்தின் செயற்பாட்டு முறைபற்றி எதையும் அறிய முடியவில்லை.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த இரண்டு ஆண்டுகளிலும் இவற்றில் எட்டப்பட்ட முன்னேற்றங்களைக் குறித்து ஆட்சியாளர்களினால் மீள் பார்வைகளும் மதிப்பீடுகளும் செய்யப்பட்டுள்ளனவா? கூட்டாட்சியில் பங்கேற்கும் தரப்பினரோடு இவற்றைப்பற்றி அரச தலைவர்கள் உரையாடியிருக்கிறார்களா? நாட்டு மக்களுக்கு இதைக் குறித்து ஏதாவது சொல்லப்பட்டுள்ளதா என்றால், எதற்கும் இல்லை என்பதே பதிலாக உள்ளது.

அப்படியென்றால், இந்த அரசாங்கம் எப்படித் தன்னுடைய ஆட்சிக்காலத்தை முடிக்கப்போகிறது? இப்படியே மெல்ல மெல்ல இழுத்துக் கொண்டு போய், ஆட்சிக்காலத்தை முடிவுறுத்தப்போகிறதா? அல்லது தனக்கு முன்னே உள்ள சவால்களை எதிர்கொண்டு, தனக்கான பொறுப்புகளை நிறைவேற்றப்போகிறதா?

இப்போதுள்ள சூழ்நிலையின்படி இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் பாதிக்குக் கிட்டவாக வந்துள்ளது. இதற்குள்ளேயே செய்யக்கூடிய வேலைகளைச் செய்திருக்க வேணும். குறைந்த பட்சம் பாதியளவுக்காவது முக்கியமான வேலைகளில் நகர்ந்திருக்க வேணும். அப்படி நடக்கவில்லை. இனி அது மெல்ல மெல்ல தேர்தல் காலத்தை நோக்கி நகரவேண்டியிருக்கும். தேர்தல் காலத்தை நோக்கி நகர்வதாக இருந்தால், இரண்டு பிரதான கட்சிகளும் தத்தமது கட்சி நலன் நோக்கின் அடிப்படையிலும் சிங்கள மக்களின் பாரம்பரிய மனநிலையின் அடிப்படையிலுமே செயற்பட வேண்டியிருக்கும். அப்படி நிகழ்ந்தால் எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படப்போவதில்லை.

அப்படியென்றால் அடுத்து என்ன என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது உண்டாக்கிய எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் ஏராளம். அதிலும் இந்த அரசாங்கம் அமைவதற்குப் பின்னணியாக இருந்த மேற்குலகமும் இந்தியாவும் ஏற்படுத்திய நம்பிக்கைகள் பல. இலங்கையின் தேசிய நெருக்கடிகள் அத்தனைக்கும் ஒரு தீர்வாக கூட்டரசாங்கத்தின் ஆட்சி நடக்கும் என்ற உத்தரவாதத்தை எழுதப்படாமல், வாய்மொழி மூலமாக ஒவ்வொரு சமூகத்தின் அரசியல் தலைமைகளிடத்திலும் ஐ.தே.க மற்றும் சு.கவிடத்திலும் அளித்திருந்தன. இதை இலங்கையின் ஒரு தொகுதிப் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டியக்கங்களைச் சேர்ந்தோருக்கும் வழங்கியிருந்தன. இந்த உத்தரவாதத்தை நம்பியே "மாற்றத்துக்கான வழி" என்ற அடிப்படையில் புதிய ஆட்சியை உருவாக்குவதற்காக ஒவ்வொரு தரப்பும் உயிராகச் செயற்பட்டது. அப்படிச் செயற்பட்டே ராஜபக்ஸவினரின் ஆட்சி தூர விலக்கப்பட்டது.

ஆனால், ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு நடைமுறைகளில் மாற்றம் இல்லை என்றால் அதனுடைய அர்த்தம் என்ன? இதற்கு யார் பொறுப்புக் கூறுவது? யாருடைய விரலை யார் கடிப்பது?

உண்மையில் இந்த ஆட்சி மாற்றத்தின் மூலமாக இந்தியாவுக்கும் மேற்குலகத்துக்குமே அதிக நன்மைகள் – அனுகூலங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாகச் சீனாவின் அதிகரித்த செல்வாக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியச் செல்வாக்கும் மேற்குலகத்தின் விருப்பங்களும் கொஞ்சம் கூடுதலாக நிறைவேறியுள்ளன. பதிலாக இலங்கைச் சமூகத்தினருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பெரிய நன்மைகள் எதுவும் கிட்டியது என்று சொல்வதற்கில்லை. எனவேதான் இன்று நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தைச் சந்தேகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது மக்களுக்குண்டான கசப்பின் வழியான அனுபவ வெளிப்பாடாகும்.

இதை வளரவிடாமல் தடுத்துப் புதிய வழியைக் காண வேண்டிய பொறுப்பு அரச தலைவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உரியது. இப்போது ஆட்சியிலிருக்கும் தலைவர்கள் இந்த நாட்டின் பிரச்சினைகளையும் தேவைகளையும் நன்றாக அறிந்தவர்கள். இந்த நாட்டின் வலியை உணரக்கூடியவர்கள். கடந்த கால இலங்கையின் அத்தனை நெருக்கடிகளிலும் அரசியல் பயணத்திலும் கூட இருந்த அனுபவத்தைக் கொண்டவர்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்மந்தன், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணித்தலைவர் மனோ கணேசன் தொடக்கம் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு நிறைய அனுபவம் உண்டு. ஆகவே இவர்களுக்கு எதையும் புதிதாக யாரும் விளக்க வேண்டியதில்லை. நோயும் தெரியும். அதற்கான மருத்துவம் என்ன என்றும் தெரியும். அதைச் செய்யவேண்டியதே இவர்களுடைய இன்றைய பொறுப்பு. இன்றைய பொறுப்பை இன்றே செய்ய வேண்டும். அதை எந்தக் காரணம் கொண்டும் நாளைக்கு என்று தள்ளிப் போடக்கூடாது.

இதையே இன்றைய இலங்கை எதிர்பார்க்கிறது.

Loading...