Monday, 5 June 2017

கொக்காவில்: அழிந்து கொண்டிருக்கும் நிலம்


சிக்மலிங்கம் றெஜினோல்ட்

"கொக்காவிலில் அப்படியொரு புயல் வீசும் என்று நாங்கள் யாருக்குத்தெரியும். ஏற்கனவே மிக மோசமான நிலையில் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரிந்திருந்தாலும் அது ஒkokkavilரு மீள முடியாத மரணக்குழியாக மாறி விடும் என்று நாங்கள் நம்பவேயில்லை. காட்டின் நடுவேயிருக்கும் ஒரு தொலைத் தொடர்புக் கோபுரத்தைக் காப்பாற்றுவதற்காக 80 பேர் ஆயுதங்களோடு நிறுத்தப்பட்டிருக்கிறோம். அதற்காக ஒரு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் எங்களுக்கு இப்போது பாதுகாப்பில்லாத ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சுற்றிவரக் காடு. காடு முழுவதும் புலிகள் போலவே தெரிகிறது. அப்படியென்றால் நாங்கள் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறோமா? ஆம். அதுதான் உண்மை. புலிகளிடமிருந்து தப்புவதற்கு வழி கிடைக்குமென்று தெரியவில்லை...."

இப்படியொரு குறிப்பு சிங்களத்தில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டெடுத்தான் அருள். இது நடந்தது 1990 இல். அப்போது கொக்காவிலில் இருந்த படைமுகாமைப் புலிகள் தாக்கியழித்திருந்தனர். 1990 இல் பிரேமதாசவுக்கும் புலிகளுக்குமிடையில் நடந்து கொண்டிருந்த தேன்நிலவு முடிவுக்கு வந்த பிறகு யாழ்ப்பாணக் கோட்டை, மாங்குளத்திலிருந்த படைமுகாம், கொக்காவில் படைமுகாம் என அடுத்தடுத்துப் படைமுகாம்கள் புலிகளின் கைகளில் வீழ்ந்தன. வீழ்ச்சியடைந்த படைமுகாம்களைப் புலிகள் கைப்பற்றினார்கள். போரிலே தோற்றவரின் உடமைகளும் கைப்பற்றும் பொருட்களும் வென்றவர்களுக்குப் பரிசு. அதில் ஒன்று இந்தக் குறிப்பு எழுதப்பட்ட Note Book. இதை ஒரு படையினன்தான் எழுதியிருக்கிறார். இன்னும் பல விசயங்கள் அந்த Note Book இல் எழுதப்பட்டிருந்தன.

அருளுக்குச் சிங்களமும் வாசித்துப் புரிந்து கொள்ளத் தெரியும் என்பதால், இதை வாசித்து மற்றவர்களுக்குச் சொன்னான். அந்த Note Book ஐ புலிகள் பிறகு மொழிபெயர்த்தனர். இப்படிப் போரிலே கைப்பற்றப்படும் பல டயறிகளையும் Note Book களையும் கடிதங்களையும் புலிகள் மொழிபெயர்த்ததுண்டு. அவற்றில் கிடைக்கும் தகவல்களும் ரகசியங்களும் கோடி பொன்னிலும் மேலானவை. வைரத்துக்கு நிகர்.

கொக்காவில் படைமுகாம் தாக்குதலுக்குத் தலைமை தாங்கியது பால்ராஜ். அப்போது பால்ராஜ் இளநிலைத்தளபதி. கொக்காவில், மாங்குளம் படைமுகாம்களை வெற்றி கொண்டதே பால்ராஜ்க்குப் பெரும் பேரைக் கொடுத்தது. அதற்குப் பிறகு பால்ராஜ் நினைத்ததை முடிப்பவன் ஆனார்.

கொக்காவில் படைமுகாமைப்பற்றி, அந்தத் தாக்குதலின் அனுபவங்களை வைத்து கப்டன் மலரவன் போர் உலா என்ற நாவலை எழுதினார். தமிழில் வெளியான போர்குறித்த நாவல்களில் அது முக்கியமான ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு  வெளியானது.

கொக்காவிலில் 1990 க்குப் பிறகு படையினர் இருக்கவில்லை. அங்கே இருந்த தொலைத்தொடர்புக் கோபுரத்துக்கும் அவசியமில்லாமல் போய் விட்டது. அது இலங்கை அரச தொலைக்காட்சி அலைவரிசையைப் பரப்புவதற்கான கோபுரம். பின்னாளில் இலங்கை அரசாங்கத்தின் ஊடகங்களைத் தமிழ் மக்கள் நம்புவதில்லை. லங்கா புவத் அந்த நம்பிக்கையைக் கெடுத்ததில் முதல் பாத்திரத்தை வகித்தது. ஆகவே கொக்காவிலில் இருந்த கோபுரத்தை இழந்ததையிட்டு பெரும்பாலான தமிழர்கள் கவலைப்படவில்லை. ஆனால், அது ஒரு ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் என்பது மறுக்க முடியாத உண்மை. அதைச் சமன் செய்வதற்காகவோ என்னவோ தெரியாது, பிறகு புலிகள் அங்கே தங்களுடைய தொலைக்கோபுரத்தை நிர்மாணித்தனர். இது நடந்தது 1996 இல். புலிகளின் குரல் வானொலி இந்தக் கோபுரத்தின் வழியாகவே அஞ்சல் செய்யப்பட்டது.

இப்போது காட்சி மாற்றம். புலிகளின் கோபுரத்தை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படை தாக்குதல் kokkavil road-2நடத்தத் தொடங்கியது. அநேகமாகத் தினமும் தவறாமல் குண்டு வீச்சுகள் நடத்தப்பட்டன. இருந்தாலும் புலிகளின் கோபுரத்தைத் தகர்க்க முடியவில்லை. அந்த ஒலிபரப்புச் சேவையையும் நிறுத்தவியலாமல் போய்விட்டது. இதேவேளை இங்கே நடந்த ஒரு சங்கதியைக் குறிப்பிட வேணும். ஒருநாள் காலைச் செய்தியை இந்தக் கோபுரத்தின் கீழிருந்த ஒலிபரப்புக் கூடத்திலிருந்து வாசித்தளித்துக் கொண்டிருந்தார் அறிவிப்பாளர். அது நேரடி ஒலிபரப்பு. ஆச்சரியமென்னவென்றால், அவர் செய்தியை வாசித்தளித்துக் கொண்டிருக்கும் ஒலிவாங்கியில் ஏறிப்படமெடுத்தது நாகபாம்பு. அது காட்டுப்பகுதியில் என்பதால் பாம்பு இலகுவாக அங்கே நுழைந்து விட்டது. செய்தியை வாசித்தளித்துக் கொண்டிருந்த அறிவிப்பாளருக்கு அதிர்ச்சி. அந்தக் கணத்தில் "ஐயோ பாம்பு" என்று துள்ளிக் குதித்து ஓடி விடமுடியுமா? அவர் ஒரு கணம் தடுமாறிவிட்டார். ஆனாலும் சுதாகரித்துக் கொண்டு அருகிலிருந்த ஒலிச் சீராக்குநரைப் பார்த்தார். அவர் நிலமையைப் புரிந்து கொண்டு, "நீங்கள் தொடர்ந்து பயப்படாமல் செய்தியை வாசியுங்கள். இதற்கு மேல் பாம்பு அசைந்து உங்களை நோக்கி வருமாக இருந்தால் அதை நான் பார்த்துக் கொள்கிறேன்" எனத் தன்னுடைய கையில் இருந்த துப்பாக்கியைக் காண்பித்துச் சமிக்ஞை காட்டினார். செய்தி தடைப்படாமல் வாசிக்கப்பட்டது. எல்லாம் முடியப் பாம்பும் சுட்டுக் கொல்லப்பட்டது.

கிளிநொச்சியை சத்ஜெய நடவடிக்கை மூலமாகப் படையினர் கைப்பற்றித் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும் கொக்காவிலில்தான் புலிகளின் ஒலிபரப்பு நடந்தது சிலகாலம். ஜெயசிக்குறு நடவடிக்கையால் அது ஒட்டுசுட்டான் வெள்ளைமடுவுக்கு இடம்பெயர்ந்தது. ஓயாத அலைகள் நடவடிக்கை மூலமாக ஜெயசிக்குறுப் படைகளையும் விரட்டி, கிளிநொச்சியையும் மீட்டதற்குப் பிறகு, மீண்டும் கொக்காவிலில் புலிகளின் தொலைத்தொடர்புக் கோபுரம் உயர்ந்தது. விடாக்கண்டனும் கொடாக்கண்டனும் என்ற மாதிரி மறுபடியும் விமானத்தாக்குதல்கள். என்றாலும் இறுதிவரை அங்கேயே புலிகளின் ஒலிபரப்பு நடந்தது.

இறுதி யுத்தத்திற்குப் பிறகு இன்னொரு காட்சி மாற்றம். இப்போது கொக்காவிலில் இருப்பது இலங்கை அரசாங்கத்தின் தொலைத்தொடர்புக் கோபுரம். முன்னரை விட உயர்ந்த கோபுரம். அது அமைக்கப்பட்டிருக்கும் பரப்பளவும் அதிகம். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகமே. முன்பு அந்த இடத்தில் தொலைத் தொடர்புக் கோபுரத்தைப் பாதுகாப்பதற்கு என அங்கே இருந்து பலிகளிடம் பலியாகிய  படையினரின் பெயர்கள் அடங்கிய ஒரு நினைவுக் கல்லையும் அங்கே பதித்திருக்கிறார்கள். இப்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகளில் இரணைமடுக்காடு முழுவதும் படையினரால் நிரப்பப்பட்டுள்ளது. ஒரு காலம் காடு முழுவதும் புலிகள் என்றிருந்த நிலை போய், இப்போது காடு நிரம்பவும் சிங்கங்கள் என்றாகியுள்ளது. காட்டின் உள்ளே மிகப் பெரிய படைமுகாம்கள். அதற்கான பெருவீதிகள், மின்னிணைப்புகள் என அது ஒரு இராணுவ நகரம். எதிர்காலத்தில் ஒரு இராணுவக்குடியிருப்பாகக் கூட மாறலாம்.

கடல் மட்டத்திலிருந்து 300 அடிக்கும் மேல் உயரமான இடம் என்பதால் கொக்காவிலில் தொலைத்தொடர்புக் கோபுரத்தை அங்கே அமைத்தன புலிகளும் அரசாங்கமும். வன்னியில் இதுதான் மிக உயரமான இடம். அருகிலே உள்ளது பதினெட்டாம் போர். அதுவும் உயர்ந்த மேட்டுப்பகுதியே. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வன்னியில் நடந்த போரின்போது அந்த இடம் மிகப்பெரிய போர்க்களமாக இருந்ததாக வரலாற்றுக்குறிப்புகள் சொல்கின்றன. பதினெட்டாவது போர் நடந்த களம் அது என்பதால் அந்த இடத்தைப் பதினெட்டாம் போர் என்கிறார்கள் இப்போது.

கொக்காவில் புதிதாக ஒரு புகையிரத நிலையத்தையும் அமைத்திருக்கிறார்கள். இந்த நிலையம் எதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது? யார் இதிலே ஏறி, இறங்குகிறார்கள் என்று நானும் பார்த்துக் கொண்டிருக்கிkokkavil roadறேன். ஆசையாய், அபுர்வமாக மெயில் ரெயினில் யாராவது ஒன்றிரண்டு ஊர்வாசிகள் எப்போதாவது இருந்து விட்டு ஏறி இறங்குவார்கள். மற்றப்படி எல்லாமே படையினர்தான் போய் வருகிறார்கள். கொக்காவிலில் இந்த நிலையத்தை அமைத்ததை விட முறிகண்டியில் இதை அமைத்திருக்கலாம். அங்கே ஏராளம் குடும்பங்கள் இருக்கின்றன. அக்கராயன், ஸ்கந்தபுரம், வன்னேரி, ஜெயபுரம், கிராஞ்சி, வலைப்பாடு, இரணைமாதாநகர், முழங்காவில், கரியாலை நாகபடுவான், குமுழமுனை என்றெல்லாம் ஏராளம் ஊர்ச்சனங்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முறிகண்டி நிலையம் பயன்படும். ஆனால் இதை அரசாங்கம் பொருட்படுத்த வேண்டுமே. இராணுவவாதக் கண்களுக்குத் தெரிவதெல்லாம் வேறு காட்சிகள்தானே.

கொக்காவிலில் இருந்து மேற்கே சென்றால் புத்துவெட்டுவான், ஐயங்கன் குளம், புதுக்குளம், தேராங்கண்டல், துணுக்காய் என கிராமங்கள் வரும். இதில் துணுக்காய் ஒரு நிர்வாக மையம். இடைப்பட்ட இடங்கள் முழுவதும் காடு. இந்தக் காட்டில் வேண்டிய அளவுக்கு கிறவல் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதியிலிருந்த செழிப்பான காடு அழிந்து விட்டது. எதிர்காலத்தில் இங்கே மிகப்  பெரிய மண்ணரிப்பு நடப்பதற்கான சாத்தியங்களே அதிகமுண்டு. இந்தப் பகுதியில் உள்ள ஆறுகளின் நிலையும் இதுதான். அக்கராயன்குளம், முறிப்புக்குளம், ஐயங்கன்குளம் போன்றவற்றுக்குத் தண்ணீரைக் கொண்டு போய்ச் சேர்க்கும் ஆற்றுப் படுக்கையிலிருந்து மணலை அகழ்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆற்றில் மணலை அள்ளி எடுக்க வேண்டுமே தவிர, அகழ்ந்தெடுக்கக்கூடாது. ஆனால், இங்கோ மணல் அகழ்ந்தே எடுக்கப்பட்டிருக்கிறது. இங்கு மட்டுமல்ல வன்னி முழுவதிலும் மணல் அகழ்தே எடுக்கப்படுகிறது. இது மிகத் தவறானதாகும். இதைக் கண்காணிப்பதற்கு கனிய வளங்களைப் பேணும் திணைக்களமும் சுற்றுச்சூழல் அமைச்சும் உள்ளன. ஆனால், அவர்களின் கண்களிலும் மண் தூவப்படுகிறது. அல்லது பணத்தினால் கண்ணும் வாயும் அடைக்கப்படுகிறது. போதாக்குறைக்கு இங்கிருந்த பாலை, முதிரை, தேக்கு, சமண்டலை, யாவறணை மரங்களும் வெட்டப்படுகின்றன. வீரப்பன்கள் பெருகி விட்டார்கள்.

படையினர் காடுகளில் நிரம்பிக் கிடக்கிறார்கள். அவர்கள் இதைக் கட்டுப்படுத்த மாட்டார்களா? என்று நீங்கள் கேட்கலாம். சில இடங்களில் சில சந்தர்ப்பங்களில் அப்படி நடப்பதுண்டு. அது அந்தப் பகுதிகளில் இருக்கின்ற இராணுவப் பொறுப்பதிகாரியின் குணம், மற்றும் மனநிலையைப் பொறுத்தது. சில இடங்களில் வேலியே பயிரை மேய்வதுமுண்டு.

கொக்காவிலைக் கடந்து போகும்போது அங்கே ஒரு தொலைத் தொடர்புக் கோபுரமும் ஒரு படைமுகாமும் இருக்கின்றன என்றே தெரியும். ஆனால் உள்ளே நடந்து கொண்டிருக்கும் அழிவுகளைப் பற்றி யாருக்கும் பெரிதாகத் தெரிவதில்லை. மேற்கே நிலம் அழிந்து கொண்டிருக்கிறது, மணல், கிறவல் அகழ்வோரால். கிழக்கே காடழிந்து கொண்டிருக்கிறது, படையினரால். நாளை இந்தப் பகுதிகளில் யாருமே எதிர்பார்த்திராத வகையில் ஒரு களமாற்றம், காட்சி மாற்றம் நிகழும். அதற்கான சாத்தியங்கள் அதிகமாகத் தென்படுகின்றன. இடையிலே ஒரு பிரமாண்டமான குடியிருப்பு முளைக்கும். அந்த நாள் வெகு தொலைவில் அல்ல.

இதை கொக்காவில் சந்தியில் பாலைப்பழம் விற்றுக் கொண்டிருக்கின்ற அந்த முதிய மனிதர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் வரலாற்றை எல்லாம் சொல்வார்கள்.

Loading...