Thursday, 30 March 2017

இலங்கையே அண்ணாந்து பார்த்த நிகழ்வில் பட்டதாரிகளின் கோரிக்கையின் நியாயத்தை முழங்கிய கிழக்கு முதலமைச்சர்,

கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகள் முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தார்மீக ரீதியானவை எனவும் அவை அவசரமாக தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  தெரிவித்தார்,

 

மாகாணங்களுக்கிடையில் வளங்களை பகிர்ந்தளிப்பதில் சமனிலைத்தன்மை இல்லாமையினாலேயே   கிழக்கு மாகாணத்தில்  இன்று வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

திருகோணமலையின் மெக்கெய்சர் அரங்கில் பிரமாண்ட கோலகலத்துடன் ஆரம்பமான யொவுன்புர நிகழ்வில் கலந்து  கொண்டு திரண்டிருந்த ஆறாயிரத்துக்கும்  மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் சர்வதேச மற்றும் உள்நாட்டு பிரதானிகளுக்கு மத்தியில் உரையாற்றும்  போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.

 

கிழக்கு முதலமைச்சர்  தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இன ரீதியான  மொழிரீதியான சமநிலைத்தன்மை இலங்கையின் தொழில்வாய்ப்புக்கள் மற்றும் வளப்பங்கீட்டின் போது பேணப்படுவது அத்தியவசியமானது,இதனூடாக இளம் தலைமுறைக்கு மத்தியில் புதிய நம்பிக்கைகளை கட்டியெழுப்ப முடியும்,

 

அதுமாத்திரமன்றி பல்லின மொழிகளைப் பேசும் பல்லினக்கலாசாரங்களைப் பேசும் மக்கள் வாழும் நாட்டில் சமமான வளப்பங்கீடு அத்தியவசியமானது என்பதுடன் அதனூடாக மாத்திரமே நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை சாத்தியப்படுத்த முடியும்,

 

கிழக்கில்   உள்ள வெற்றிடங்கள் உரிய வகையில்  தீர்ப்பதற்கு  நாம் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமையின் காரணமாக இன்று நமது  மாகாணம் கல்வியில் பின் தங்கிய மாகாணமாக உள்ளதுடன் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கையும் அதிகளவில் காணப்படுகின்றது,

 

விசேடமாக படித்த இளைஞர் யுவதிகள் பலர் இன்று  தொழில்வாய்ப்பின்றி போராட்டங்களை நடத்த வேண்டிய நிரப்பந்த்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்,

 

இந்நிலையிலேயே  கௌரவ  பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களை  சந்தித்து  எமது மாகாணத்தின்  வெற்றிடங்கள்  தொடர்பில் எடுத்துரைத்து தற்போது அது  தொடர்பான விபரங்கள் அடங்கிய  ஆவணங்களை  நாம் திறைசேரியில் கையளித்திருக்கின்றோம்.

கௌரவப் பிரதமர் அவர்கள் வழங்கிய  வாக்குறுதியின்  பிரகாரம் தற்போது சாதகமான  நடவடிக்கைகள் முன்னெடுக்கபடபட்டு வருகின்றன என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்,

 

எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தில் இருந்து  வௌிவரும்  பட்டதாரிகளுக்கு இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கக் கூடிய நிலை வரக் கூடாது,அதற்காக இந்த நாட்டின் கல்விமுறைமை மாற்றப்பட வேண்டும்.நவீன தொழிற்சந்தைக்கு ஏற்ற விதத்திலான ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பக் கல்வியறிவை இளைஞர்களுக்கு வழங்கும் விதத்தில் கல்வி முறைமை மாற்றப்பட  வேண்டும்,

இதனூடாக  எமது  இளைஞர் யுவதிகளுக்கு உள்நாட்டில்  மாத்திரமன்றி வௌிநாட்டிலும் சிறந்த  தொழில்வாய்ப்புக்களை  பெற்றுக் கொள்ள முடியும் என்பதை  நான் மிகத் தௌிவாக கூறிவைக்க விரும்புகின்றேன்.

 

இங்குள்ளே  இளைஞர்களே  நீங்கள் தான்  இந்த நாட்டை  வழிநடத்தப் போகின்றீர்கள்,உங்கள் கையில்  தான் இந்த நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது,எனவே  அதற்கு நீங்கள்  உங்களை  தயார்ப்படுத்திக் கொள்வது  அவசியமாகின்றது,

இன மொழி மத பிரதேச வேறுபாடுகளை  களைந்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற ஒரே  எண்ணத்துடன் நாம் முன்னோக்கிச்  செல்ல வேண்டிய காலகட்டம் பிறந்துள்ளது,அதற்கு  இந்த யொவுன்புரய உங்களுக்கு மிகச் சிறந்த  பயிற்சியை  வழங்கும் என நம்புகின்றேன்.


உங்களுடைய  எதிர்காலத்தை தீர்மானிக்கும் வல்லமை இறைவனிடமும் உங்களிடமும் தான் உள்ளது,எனவே நீங்கள்  என்னவாக ஆகவேண்டும் என்பதை இன்றே தீர்மானித்துக் கொள்ளுங்கள் .தீர்மானத்துக்கமைய உங்கள் திட்டங்களை இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள் என்றார்,


இதன் போது  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ நசீர் அஹமட் அங்கு கூடியிருந்த  அனைவரையும் உள்ளடக்கிய வண்ணம் மூன்று மொழிகளிலும் உரையாற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Loading...