Thursday, 23 March 2017

இன்றைய தமிழ் அரசியல் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும்


வி.சிவலிங்கம்

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியலில் தற்போது பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அவதானிக்கிறோம். நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை ஏற்படுத்தியுள்ள தாக்கங்களும், கsivalingam2ூடவே ஆயுதப் போராட்டம் ஏற்படுத்திய விளைவுகள் என்பன இலங்கை முழுவதற்குமான அரசியலில் ஏற்படுத்திய மாற்றங்களால் தமிழ் அரசியலும் தம்மை மாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இம் மாற்றங்கள் நிரந்தர சமாதானத்தை அல்லது நீடித்த அமைதியை ஏற்படுத்துமா? என்பது சந்தேகமாக உள்ளது. இம் மாற்றங்களுக்கான அடித்தளங்கள் இப்போதுதான் போடப்படுவதால் அதன் எதிர்மறைத் தாக்குதல்களின் பலம், பலவீனத்தில்தான் எதிர்காலம் தங்கியுள்ளது. தமிழ் அரசியல் என்பது தனியாக இயங்கவில்லை என்பதும், அது சிங்கள அரசியலில் சார்ந்து இயங்குவதும் தற்போது தெளிவாக புலப்படுகிறது. தமிழ் அரசியலில் உள்ள ஸ்தாபன வடிவமற்று இயங்கும் தனிநபர்களும், பெயரளவில் இயங்கும் ஜனநாயகமற்ற அமைப்பு வடிவங்களும் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளும் சக்திகளாக உள்ளமை காத்திரமான அரசியலைத் தருமா? மக்கள் தமது ஜனநாயக அபிலாஷைகளை தடையில்லாமல் வெளிப்படுத்துவதற்கு வழி என்ன? தமிழ் அரசியலில் காணப்படும் தனிமனித ஆதிக்கம் கலைய நீண்ட காலம் எடுக்கும் எனில் மாற்று ஏற்பாடுகள் எவ்வாறு அமையலாம்? தனி மனித செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்துவது, குழப்ப அணுகுமுறைகளை அம்பலப்படுத்துவது, அவர்களை கூட்டுச் செயற்பாடுகளை நோக்கித் தள்ளுவது ஓரளவாவது பரிகாரத்தைத் தருமா?

இலங்கையில் 'நல்லாட்சி' என்ற பெயரில் 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ஆரம்பித்த பயணம் பல மேடு பள்ளங்களைத் தாண்டி வருகிறது. 30 வருட காலத்திற்கு மேற்பட்ட ஆயுத வன்முறை கலந்த அரசியல், சுமார் 40 வருடகால நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை ஆகியன தமிழ் அரசியலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆட்சிப் பொறிமுறையையும் அக் கொடுமை நிறைந்த பயணத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறது. ஜனநாயகத்தின் வேராக உள்ள கட்சி ஆட்சிமுறை சின்னாபின்னமாகியுள்ளது. ராணுவ சிந்தனை, அதன் சிங்கள பௌத்த தேசியவாத அரசியல் என்பன  ஜனநாயக அரச யந்திரத்திற்குள் வெகுவாக ஊடுருவி உள்ளது. நாட்டின் சிறுபான்மையினர் தேசத்தின் வளர்ச்சிக்குக் குந்தகமாக இருப்பதாக அல்லது எதிரிகள் எனக் கருதும் அளவிற்கு உரையாடல்கள் அமைந்து வருகின்றன.

கடந்த 30 ஆண்டுகால ஆயுத வன்முறையும், அதனைப் பின்புலமாக்கொண்டு அமைந்து வரும் ராணுவ உத்திகளின் அடிப்படையிலான அரச கட்டுமானமும் இன்று அதிகார வர்க்கத்தினர் மத்தியில் பிளவுகளைத் தோற்றுவித்திருக்கிறது. ஒரு சாரார் நல்லாட்சி எனவும், மறு சாரார் சிங்கள பௌத்த தேசிய பாதுகாப்பு எனவும் பிரிந்துள்ளனர். ஆனால் இரு சாராரும் தமது இலக்குகளை எட்டுவதற்கு தற்போதைய அரச கட்டுமானம் இடையூறாக இருப்பதாக கருதுகின்றனர். இதில் நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்கள் எப் பக்கத்தை நோக்கிச் செல்வது? நல்லாட்சி என்பவர்கள் இனவாதக் கூறுகளோடு போராட முடியாத நிலையில் உள்ளனர். பாராளுமன்ற தேர்தல் முறை அரசியலை வைத்துக்கொண்டு, தீவிர தேசியவாத அரசியலுக்கு முகம் கொடுக்க முடியவில்லை.

இந்த இறுக்கமான அரசியல் புறச் சூழலில் தேசிய சிறுபான்மை இனங்களின் அரசியலில் மாற்றங்கள் ஏற்படின் புதிய புறச் சூழலை அவை தூண்டுமா? புதிய சமன்பாட்டைத் தோற்றுவிக்கலாமா? அதனை நோக்கிப் பார்வையைச் செலுத்துவதே இக் கட்டுரையின் நோக்கங்களில் ஒன்றாகும்.

நாட்டில் நிலவி வரும் தாராளவாத திறந்த பொருளாதார அமைப்பு அல்லது கட்டுப்பாடற்ற பொருளாதார கட்டமைப்பு இத்தனை பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக உள்ளதாக சர்வதேச அரசியல் நிகழ்வுகளுடன் ஒப்பீடு செய்பவர்கள் கருதுகின்றனர். நவ தாராளவாத அரசியல் பொருளாதாரக் கோட்பாடுகளைப் பின்பற்றிய பாரிய பொருளாதாரக் கட்டமைப்புகளையுடைய அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றிலும் அமைதியற்ற நிலமைகளும், ஆட்சி மாற்றங்களும், தீவிர தேசிய வாதமும் ஏற்பட்டுள்ளன. இந் நாடுகளில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டமும், உற்பத்தித் துறை முதலீடு குறைந்திருப்பதும். மலிந்த கூலி கிடைக்கும் நாடுகளில் உற்பத்திக்கான முதலீடு அதிகரித்திருப்பதும் பிரச்சனைகளாக மாற்றமடைந்து மனித உரிமை, பன்மைத்துவ ஜனநாயகம் எனப் பீத்தி வந்த இந் நாடுகளில் தீவிர தேசியவாதம் ஆட்சிகளைக் கவிழ்க்கும் அளவிற்கு பலமடைந்து வருகிறது.

இலங்கைத் தமிழர் அரசியல் குறித்து பேச விழையும் நாம்,இன்று தமிழர் பிரச்சனை ஐ நா வரை சென்று சர்வதேச பிரச்சனையாக மாறியுள்ளமையையும், இதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற பாரிய நாடுகளின் தலையீடுகளுக்கு ஆட்பட்டுள்ள நிலையிலும் தமிழ் அரசியலைத் தனியான, சுயாதீனமான அம்சமாக பேச முடியாது. சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துள்ள தமிழ் அரசியல் தனது வீட்டுப் பிரச்னையை உரிய விதத்தில் ஒழுங்குக்குக் கொண்டு வராவிடில் அப் பலவீனங்கள் எடுப்பார் கைப் பிள்ளையாக மாறும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளி விடும்.

தமிழ் அரசியலில் தற்போது காணப்படும் முரண்பாடுகளை அவதானிக்கும்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளின் வெளிப்பாடுகளாகவே அவை உள்ளன. இவற்றைப் பரந்த அடிப்படையில் பார்ப்பதற்கு முன்னர், தமிழ் அரசியலில் ஏற்பட்டு வரும் உள்ளக மாற்றங்களை அல்லது முரண்பாடுகளை ஆராய்வது அவசியமானது. இவற்றின் உட்கூறுகளின் செயற்பாடுகளின் சூட்சுமங்களைப் புரிந்துகொண்டால் மட்டுமே மாற்றங்களுக்கான பாதைகளைத் திறக்க முடியும்.

அந்த வகையில் தமிழ் அரசியலில் அதாவது தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள அரசியல் உள் நீரோட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், அவற்றின் பலம், பலவீனம் என்பவற்றையும் பார்ப்பது பொருத்தமாக அமையும். குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் உள்ள அமைப்புகளின் அரசியல் பணி சர்வதேச அரசியலுடன் சம்பந்தப்பட்டது. இதுவே தமிழ் அரசியலின் இயக்கு விசையாகவும் இருந்துள்ளது. இவை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந் நாடுகளின் உயர்மட்டங்களோடு உரையாடல் நடத்தும்போது சர்வதேச அரசுகளின் பூகோள அரசியல் நலன்கள் புரிந்து கொள்ள உதவுகின்றன. அந் நாடுகள் இலங்கைப் பிரச்சனையில் எவ்வாறான நலன்களை நோக்கித் திரும்புவார்கள் என்பதை இலங்கை அரசை விட மிக நுணுக்கமாக அறியும் வாய்ப்பும் உள்ளது. இதன் தாக்கங்களால் இவ் அமைப்புகளின் அரசியல் பார்வையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

தமிழ் அரசியலில் குறிப்பாக தாயகத்தில் தமிழர் தேசிய கூட்டமைப்பு பிரதான, தீர்மானகரமான சக்தியாக உள்ளதைப் பலரும் அறிவர். அது போலவே புலம்பெயர் தேசங்களில் பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழர் ஒன்றியம் (புவுகு) பிரதான பாத்திரத்தை வகிக்கிறது. இவ் அமைப்பு விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பிரிவாக இயங்கியது. ஆயுதப் போராட்ட காலத்தில் தமிழ் அரசியலின் மிதவாதத் தலைமை செயலூக்கமின்றி இருந்தது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தபோதிலும் பாராளுமன்ற அரசியல் வெறும் பிரச்சார மேடை என்ற அளவில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் தமிழ் தேசியவாதத்தின் மையம் விடுதலைப் புலிகளிடம் போய்ச் சேர்ந்தது. தமிழீழம், சுயநிர்ணய உரிமை, சுயாட்சி என்பன வற்புறுத்தப்பட்டன. வட்டுக்கோட்டைத் தீர்மானம் கைமாறியது. இது எவ்வாறு சாத்தியமாகியது? என்பது கேள்விக்குட்படுத்த வேண்டியது எனினும் எதிர்காலம் குறித்துச் செல்வதற்கு இது போதுமானது.

2009ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு அதன் அரசியலைத் தாயகத்தில் எடுத்துச் செல்ல முடியாத நிலை காணப்பட்டபோது அந்த அரசியலை எடுத்துச் செல்வதில்  புலம்பெயர் அமைப்புகளே செயற்பட்டன. இதில் புவுகு பிரதான பாத்திரத்தை வகிக்கிறது.வண. பிதா. இம்மானுவல் அவர்களின் தலைமையில் இவ் அமைப்பு இயங்குவதைப் பலரும் அறிவர்.

தாயகத்தில் செயற்படும் தமிழர் தேசிய கூட்டமைப்பிற்குள் எவ்வாறு ஜனநாயகம் பற்றாக்குறையாகவும், தனிநபர் ஆதிக்கம் அல்லது செல்வாக்கு அதிகரித்து காணப்படுகிறதோ அதே நிலை உலகத் தமிழர் ஒன்றியத்தினுள்ளும் உள்ளது. இது பல்வேறு அமைப்புகளின் கூட்டு வடிவமாக இருந்த நிலையில் போருக்குப் பின்னரான அரசியலுக்கான புதிய வழிமுறைகளை விவாதிக்கத் தயாராக இருக்கவில்லை. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்து கூட்டமைப்பிற்குள் கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும் பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு எட்டப்படவேண்டும் என்பது ஆதிக்கம் பெற்ற கருத்தாக மாற்றமடைந்துள்ளது.இன்று இம் முடிவை எட்டுவதற்கு எண்ணற்ற தோல்விகளும், உயிர்த் தியாகங்களும் விலையாக கொடுக்கப்பட்டுள்ளன என்பது வருந்தத்தக்க உண்மையாகும். இதுவே இன்றைய முடிவு எனில் இவ் இழப்புகள் இல்லாமலேயே இந்த இடத்தை வந்து சேர்ந்திருக்க முடியாதா?  இவ் அனுபவங்களே இன்றைய மாற்றங்களின் ஊக்கியாகவும் உள்ளது என்பதே தவிர்க்க முடியாத உண்மையாகும்.

இதே போன்று விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் தொடர்ச்சி என ஆரம்பித்த புவுகு பல முரண்பட்ட கூறுகளின் சங்கமமாகவும், தனி நபர் ஆதிக்கம் நிறைந்ததாகவும், ஜனநாயக நெறிகள் அற்றதாகவும் செயற்படுகிறது. இது தமிழ் அரசியலின் தவிர்க்க முடியாத அங்கங்களாக உள்ள நிலையில் தனிநபர் செயற்பாடு, குழுக்களின் செயற்பாடு எனப் பகுத்து நோக்கவேண்டியள்ளது. 

தமிழர் தேசிய கூட்டமைப்பு,புவுகு என்பன தமது இலக்குகளிலும், அணுகுமுறைகளிலும் மாற்றங்களை அறிவித்துள்ள போதிலும் இவை அதாவது இம் முடிவுகள் புறச் சூழல்களினால் ஏற்பட்ட அழுத்தங்களால் எடுக்கப்பட்டனவா? அல்லது மிகவும் உய்த்துணர்ந்த காரணிகளால் எடுக்கப்பட்டனவா? என்பது தெளிவற்றதாக உள்ளது. ஏனெனில் இம் மாற்றங்களுக்கான நியாயங்கள் எதுவும் வெளிப்படையாக முன் வைக்கப்படவில்லை. உதாரணமாக பிரிவினைக் கோரிக்கை என்பது ஒத்திப்போடப்பட்ட ஒன்றா? அல்லது எதிர்காலத்திற்கான புதிய வழி ஐக்கிய இலங்கைக்குள்தான் என்ற புரிந்துணர்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதா? என்ற கேள்விகள் நியாயமாக எழுகின்றன. அரசியல் மற்றும் ஆயுத வன்முறை உச்சத்தில் இருந்தபோது அல்லது மரண அவலங்கள் அதிகரித்திருந்தபோது இவ்வாறான புரிதல்கள் ஏற்பட்டிருக்குமாயின் பேச்சுவார்த்தைகள் புதிய வழிகளைத் திறந்திருக்க முடியும். இழப்புகளைத் தவிர்த்திருக்க முடியும்.

எனவே அக் காலகட்டத்தில் ஏற்படாத மாற்றங்கள் தற்போது எழுவது தோல்வியின் அனுபவங்கள் உணர்த்திய விளைவுகளா? அல்லது இன்னனொரு புதிய அரசியல் தந்திரமா?ஏனெனில் சமீப காலமாக தமிழீழம், சுயநிர்ணய உரிமை, தாயகக் கோட்பாடு போன்ற அம்சங்கள் பிரதான வாதப்பொருளாக அமைவதில்லை. இவ்வாறான மாற்றங்களுக்கான காரணிகளைத் தேடும் முயற்சியே இதுவாகும்.

ஆயுதப் போராட்டம் மிக உக்கிர நிலையை அடைவதற்கு இரண்டு காரணிகள் பிரதானமாக அமைந்தன. ஒன்று இந்தியத் தலையீடு மற்றது புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு ஆகும். இந்தியத் தலையீடு குறித்த விபரங்கள் பலரும் அறிந்ததே. ஆனால் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு குறிப்பாக அரசியல் பங்களிப்புக் குறித்து ஆய்வுகள் அவசியமானது. அதற்கான ஓர் ஆரம்பமாக இதனைக் கொள்ளலாம்.

புலம்பெயர் தேசங்களில் ஆயுதப் போராட்டத்திற்குத் தேவையான அரசியலை பல்வேறு அமைப்புகள் கூட்டாகவும், தனியாகவும் மேற்கொண்ட போதிலும் தமிழ் அரசியலை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் புவுகு கணிசமான பங்கினை வகித்தது. இன்னமும் வகிக்கிறது.

2009ம் ஆண்டு மே மாதம் ஆயுதப் போர் முடிவுக்கு வரும் வரை விடுதலைப் புலிகளை பல தரப்பினர் ஆதரித்தார்கள். தமிழ் தேசியவாதிகள், புலி ஆதரவாளர்கள் என்போர் குறிப்பிடத்தக்க பிரிவினராகும். ஆயுதப் போராட்டத்தின் போக்கு, அதன் உள் முரண்பாடுகள், ஜனநாயக விரோதப் போக்கு,சர்வதேச வாய்ப்புகளைக் கையாண்ட முறைகள்,பேச்சுவார்த்தை முட்டுக்கட்டைகள் போன்றன பின்னடைவை ஏற்படுத்திய போதிலும் இவற்றைக் கேள்விக்குட்படுத்த யாரும் தயாராக இருக்கவில்லை.

போரின் பின்னர் புதிய நிலமைகள் ஏற்பட்டன. விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் தொடர்ச்சி என அடையாளப்படுத்தும் வகையில் 'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு தேர்தல் என்ற பெயரில் சில சடங்குகளை நடத்தி, பிரதமர், மந்திரிகள் என நிழல் அரசும் தோற்றம் பெற்றது. ஆனால் இம் முயற்சிகள் சுமுகமாக முன்னேற முடியவில்லை. பல நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டிருந்தது. தடைசெய்யப்பட்ட அமைப்பின் பிரதிநிதியாக தம்மை அடையாளப்படுத்த தமிழ்த் தேசியவாதிகள் தயங்கினார்கள். புலிக்கொடியினை வைபவங்களில் ஏற்றுவதைத் தடுத்தார்கள்.

இதன் விளைவாக புலம்பெயர் நாடுகளின் தமிழ் அரசியல் வர்க்க முரண்பாடுகளாக தோற்றமளித்தன. பணம், கல்வி, செல்வாக்கு மிக்க தேசியவாதிகள் ஒரு புறமும், போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டவர்கள், குடும்ப உறவுகளை இழந்தவர்கள், தலைமை விசுவாசிகள் என்போர் மறு புறமுமாக பிளவுபட, கூடவே உள் முரண்பாடுகளும் கூர்மை அடைந்தன. மேற்குலக அரசுகள் மீது தமது செல்வாக்குகளைப் பிரயோகிக்கும் ஆற்றல் மிக்க சக்திகளான தமிழ் தேசியவாதிகள் வண. பிதா. இம்மானுவல் தலைமையில் புவுகு என்ற பெயரில் இணைந்தார்கள். வண. பிதா அவர்கள் உட்பட பலர் பல்வேறு நாடுகளுக்கும் சென்று தமிழர்களையும், அரசுப் பிரதிநிதிகளையும் சந்தித்து வருகின்றனர். 2009ம் ஆண்டின் பின்னர் இவர்களுக்கு கிடைத்த அனுபவங்கள் தமிழீழம், சுயநிர்ணய உரிமை, தேசியம் பற்றிய உரையாடலைத் தவிர்த்துள்ளன. புதிய விதத்தில் பிரச்சனைகள் விளக்கப்படுகின்றன.

இம் மாற்றத்தின் அடித்தளங்கள் பலமானதாகவும், மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டனவாகவும் அதன் அடிப்படையில் இன்றைய புவுகு கட்டப்பட்டுள்ளதா?என்ற கேள்விகள் நியாயமாக எழுகின்றன. இதன் உண்மைத் தன்மையை அறிவதற்கு வண. பிதா. இம்மானுவல் அவர்களின் கடந்த கால அரசியல் விளக்கங்களுக்கும், அவரது இன்றைய நிலைப்பாட்டிற்குமிடையே காணப்படும் மாற்றங்களைக் கண்டறிவது அவசியமானது.

பிதா. இம்மானுவல் அவர்களின் சேமங்கள் அல்லது உரைகள் இயேசு பிரானின் போதனைகளை அவ்வப்போது மேற்கோள் காட்டினாலும், அவற்றின் உள்ளடக்கம் அல்லது கூறும் கதை முறை அரசியல் கலந்ததாகவே இருந்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளிலும் கிறிஸ்தவ பாதிரிமார் இவ்வாறான பணிகளில் ஈடுபட்ட போதிலும் அவர்கள் மனித உரிமை மீறல்களை கண்டிப்பதில் பாரபட்சம் காட்டுவதில்லை. இதனால் ஒடுக்குவோர்,ஒடுக்கு முறைக்கு எதிராக போராடுவோரின் பலமான எதிர்ப்புகளுக்கு முகம் கொடுத்து தமது உயிர்களையும் இழந்துள்ளனர்.

இவரது உரைகள் பிரதானமாக மூன்று அம்சங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அவை உண்மை, நீதி, சமாதானம் என்பவையாகும். இவற்றை உயர்த்திப் பிடிப்பதன் மூலமே சுய மரியாதையையும், சுதந்திரத்தையும் தேட முடியும் என்கிறார். 2009 இற்கு முற்பட்ட காலங்கள் முதல் இற்றை வரை உண்மை, நீதி, சமாதானம் என்பவற்றை தொடர்ந்து வற்புறுத்தும் அவர், இவற்றின் தேவையை போரின் போதும், பின்னரும் விபரித்த விதமே எமது கரிசனைக்குரியது.

1996ம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற சமாதான மாநாடு ஒன்றில் 'எனது மக்களைப் போக விடுங்கள்' என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார். இவ் உரை விவிலிய நூலிலே 'மோஸஸ்' எனப்படுபவர் அடிமைகளை மீட்டெடுக்கும் பயணத்தில் ஈடுபட்டிருந்த போது வெளியிட்ட சேமத்தை ஒட்டியதாகவே அவை இருந்தன. தமிழ் மக்களை அடிமை நிலையில் வாழ்பவர்களாக உருவகித்தே அவ் உரை அமைந்தது. தமிழ் மக்களை அடிமைகளாக முன்னிறுத்தி நியாயத்தை முன்வைத்த அவர், 16-02-2016 இல் ஜனாதிபதி மைத்திரி அவர்களை சந்தித்து பேசியிருந்தார். இலங்கை வெளிநாட்டமைச்சரின் உதவியுடன் இச் சந்திப்பு ஜேர்மனியில் இடம்பெற்றது. அதன் பின்னர் அவரது நியாயங்களும், அணுகுமுறைகளும் மாற்றமடைந்தன. அடிமைகளை மீட்டெடுக்கும் பயணத்தில் இறங்கியுள்ளதாக பேசிய அவர் இச் சந்திப்பை எந்த நம்பிக்கையில் மேற்கொண்டார்? அடிமை விலங்கை உடைக்க முடிந்ததா? நாம் இன்னமும் ஜெனீவாவில் காத்துக் கிடக்கிறோமே ஏன்?எனது மக்கள் கொடிய துன்பத்திலும், தமிழர் என்பதால் சுமக்கும் பாரங்களும், உயிர் வாழ்வதற்காக நடத்தும் போராட்டங்களும் இம் மனித நேயமற்ற போரின் விளைவுகளாகும். இம் மக்கள் மத்தியிலே உண்மை, நீதி, சமாதானத்தின் குரலாக எனது பங்கை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். கிறிஸ்தவ சாட்சியாக நின்று யதார்த்தத்தின் உண்மைகளைப் பேசுகிறேன் என்றார். எங்கே அந்த உண்மைகள்?

சமூகத்தின் மத்தியிலே உண்மையின் அனுபவங்களைப் பேசுபவராக அறிவிக்கும் அவர், நீடித்த நிலையான சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்த எடுக்கப்பட்ட விசுவாசமான முயற்சிகள் நியாயமற்ற அரசியல்வாதிகளாலும், சுயநலமிக்க ஊடகவாதிகளின் சுயநல நோக்கங்களினாலும் அவை திரிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தினார். இங்கு சமாதான முயற்சிகள் சீர்குலைக்கப்பட்டதற்கான காரணியாக ஊடகங்களையும், சுயநலமிக்க அரசியல்வாதிகளையும் சாடுகிறார். போர்ப் பிரதேசத்திற்கு வெளியில் வாழ்வோரின் போக்குப் பற்றித் தெரிவிக்கையில் சமாதானம் என்ற பெயரில் தமக்காக பேசும் இவர்கள் வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் சமாதான முயற்சிகள் மீது சந்தேகத்தை எழுப்புகிறார்கள் என விசனப்படுகிறார்.

சமாதான முன்னெடுப்புகளில் அதாவது சந்திரிகாவின் சமாதான நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டிருந்த வேளையை அடிப்படையாகக் கொண்டு அவை வடக்கு, கிழக்கு மக்களின் சமாதானத்திற்கான முயற்சியாக அதனை வர்ணிக்கிறார். அதனைத் தொடர்ந்து அப் பேச்சுவார்த்தைகள் 19-04-1995 இல் முறிந்தமைக்கான காரணங்கள் பற்றித் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளின் இறுக்கமான நிலைப்பாடும், சமாதான முயற்சிகளில் விசுவாசமாக இல்லமையுமே காரணம் எனக் கூறுவதை மறுத்தார். இலங்கை அரசு ராணுவ பயமுறுத்தல்களை அதிகரித்தபடி, தனது தீர்வுகளை திணிக்க முயற்சித்தமையை தமிழ் மக்களால் ஏற்க முடியவில்லை என்கிறார்.

இவை எதுவும் பிரச்சனைக்குரிய அம்சங்கள் அல்ல. ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது எங்கு வைக்கப்பட்டிருந்தார்கள்? ஏன் மௌனமாக்கப்பட்டார்கள்? ஏன் தம் உயிருக்கு அஞ்சினார்கள்? என்ற உண்மை புலப்படுத்தப்படவில்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் இருக்கையில் விடுதலைப்புலிகளை மக்கள் பிரதிநிதிகளாக போற்றுவது முரண்பட்ட நிலைப்பாட்டை உணர்த்தியது. மக்களின் பிரதிநிதிகள் யார்? என்பதில்  காணப்படும் மயக்கம் உண்மை குற்றுயிராக்கப்பட்டுள்ள ஆபத்தையே உணர்த்தியது. பாதி உண்மைகள் சமாதானத்தை ஏற்படுத்த உதவுமா?உதவியதா?

சந்திரிகா, பிரபா பேச்சுவார்த்தைகள்தோல்வி அடைந்தமைக்குக் காரணம் சந்திரிகாவின் அணுகுமுறைகளே எனக் குறிப்பிடும் அவர், சர்வதேச சக்திகள் தமது நலன்களைப் பலப்படுத்தும் பொருட்டு ராணுவ ஆக்கிரமிப்பின் விளைவுகளைச் சுமக்கும் மக்கள் குறித்து கவலை கொள்ளாமல் செயற்பட்டார்கள் எனவும், இன்னொரு தென்னிலங்கைத் தலைவர் சமாதானத்தைத் தருவதாக கூறினால், தமிழ் மக்கள் ஆயிரம் தடவைகள் சிந்தித்த பின்னரே ஈடுபடுவார்கள் என்றார். 

வண. பிதா. அவர்கள் 1995ம் ஆண்டு அதாவது போர் முடிவடைவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்னரேயே இரண்டு அம்சங்களில் தெளிவாக இருந்துள்ளார். அவை சர்வதேச அரசுகள் தமது நலன்களிலேயே குறியாக இருப்பதனையும், எதிர் காலத்தில் பேச்சுவார்த்தை என்பது மிகவும் சிந்திக்கத் தக்கது என்பதிலும் கவனமாக இருந்துள்ளார். அவ்வாறெனில் நோர்வே சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது அவரது கருத்து எவ்வாறிருந்தது? அம் முயற்சியில் சர்வதேச நலன்கள் பின்னியிருப்பதை அவர் அறியவில்லையா? அவரது எச்சரிக்கை காணப்பட்டதா? புலிகள் கவனத்தில் எடுத்தார்களா?

(தொடரும்)

Loading...