Wednesday, 22 February 2017

முஸ்லிம்களுக்கு ஓர் உறுதியான தலைமைத்துவம் ஏற்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். NDPHR இஸ்தாபகர்

இன்றைய நாளில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக இஸ்லாமிய தலைமைத்துவம் பற்றிய விளக்கங்களும், போதனைகளும் சரமாரியாக மக்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டு, பல்வேறு வடிவங்களில் பின்பற்றப்பட்டும் வருகின்றன. ஒவ்வொருவரும் தங்களுடைய கணிப்பின் அடிப்படையிலான இஸ்லாமிய தலைமைத்துவமே நிஜமான தலைமைத்துவ வழிமுறை என்று நம்புகிறார்கள். எனினும் பொது சமூகத்தின் மத்தியில் இஸ்லாமிய தலைமைத்துவம் குறித்த வேறுவிதமான மாற்றுக் கருத்துகள் உருவாகி இந்தத் தகுதியின் மதிப்பு கீழிறங்கி வருகிறது.

இன்றைய நாட்களில்முஸ்லிம்கள்  சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் சவால்களை தீரத்தோடு எதிர்கொண்டு மக்களை வழிநடத்தக்கூடிய தலைமை ஒன்று இல்லாமல் போனது துரதிருஷ்டவசமானதே.  முஸ்லிம்களுக்கு ஓர் உறுதியான  தலைமைத்துவம் ஏற்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அது குறித்து கவலையுடன் பல சமயங்களில் நம்மிடையே பேசப்பட்டும் வருகிறது. ஆனால் அப்படி விவாதிக்கப்படும் பல்வேறு சிந்தனைகள் யதார்த்தத்திற்கு வெகு தூரம் அப்பாற்பட்டவை. கிலாஃபத், இஸ்லாமிய ஆட்சி போன்ற சொற்பதங்கள் மக்களை அந்த இலக்கை நோக்கிய யதார்த்தமான நடைமுறைகளிலிருந்து திசைதிருப்பவே  இன்று பயன்படுத்தப்படுகின்றன. இன்று  முஸ்லிம்கள் பிரதேச மற்றும் பிராந்திய வாரியாக பல்வேறு வகையான அடக்குமுறைகளையும் பிரச்னைகளையும் சந்தித்து வருகிறார்கள். அவை எல்லாவற்றையும் ஒரே கண் கொண்டு பார்ப்பதும் அந்தப் பிரச்னைகளுக்கு ஒரே மாதிரியான ஒரே இரவில் கிடைக்கும் கற்பனைத் தீர்வுகளை சொல்வதும் முற்றிலும் பிழையான அணுகுமுறையாகும்.

எனவே பிராந்திய ரீதியாக அந்தந்தப் பகுதி முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு அவர்களைக் கொண்டே தீர்வுகளை வழங்கக்கூடிய தலைமைத்துவம் ஒன்று உருவாவதன் மூலம் குறுகிய கால இலக்குகள் மற்றும் நீண்ட கால இலக்குகள் எனப் பிரித்து இலகுவாக நமது இறுதி இலட்சியத்தை அடைய முடியும். இந்த அடிப்படையில்  முஸ்லிம்களிடையே இன்று இருக்கும் தலைமைத்துவ கோட்பாடுகள், இந்தப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்னைகள், அதனுடைய தீர்வுக்கான தேவையை ஒட்டி அமையும் தலைமைத்துவம் போன்றவை குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

இன்று   முஸ்லிம்களை வலிமைப்படுத்தும் மாபெரும் பணியை துவக்கும்போது சில நடைமுறைச் சிக்கல்களை காண முடிகிறது அது துவக்கமாக நீண்ட காலம் பாரம்பரியமாக இருந்து வரும் தலைமைத்துவத்தில் இருந்துதான் துவங்குகிறது. இங்கும் முஸ்லிம்கள் பிரதேச  ரீதியாக வேறுபட்ட கலாச்சாரத்திலும் தலைமைத்துவ வழிமுறைகளிலும் சிதறிக் கிடக்கின்றனர். அவர்களை ஒரு தலைமையின் கீழ் ஒன்றிணைப்பதே மிகவும் சவாலான காரியமாக பார்க்கப்படுகிறது.

 முஸ்லிம்களில் பெரும் ஜனத்திரள் இன்று நிறைந்திருப்பது  முஸ்லிம் கட்சிகளின் கீழ் தா ன்  , இது ஒரு வகையில் மிகவும் ஆரோக்கியமான நடைமுறையாக இருந்தாலும் அரசியல் மற்றும் மார்க்க ரீதியான அணிதிரட்டலுக்கு இன்று இவைதான் மிகப் பெரும் சவாலாக உள்ளது. இது போன்ற தலைமைத்துவ இடங்களுக்கு வருவதற்கு முன்னர் இருந்த சாதாரண அடிப்படை ஜனநாயக வழிமுறைகள் மருவி இன்று பொருளாதாரம் மற்றும் குலப்பெருமை போன்றவை தகுதிகளாக ஆக்கப்பட்டு விட்டது.

பாரம்பரியமாக செயல்படும் முஸ்லிம் கட்சிகள் தைரியமான அரசியல் முடிவுகள் எடுப்பதிலும், மக்களை போராட்ட ரீதியாக ஒருங்கிணைப்பதிலும் பெரும் தேக்க நிலையிலேயே இருக்கின்றன. அத்தகைய இயக்கங்களின் ஆரம்ப காலகட்டத்தில் சமூகம் அடைந்த அரசியல் பலன்களை இன்று அவை வழங்க முடியவில்லை. மாறி வரும் காலச் சூழ்நிலைகளுக்கு தக்கவாறு புதிய சிக்கல்களை தீர்க்கவல்ல ஒரு மாற்றத்தை அவர்கள் அடைந்து கொள்ளவில்லை.

இத்தகைய தலைமைகளைக் கொண்டு பிற அரசியல் தலைவர்கள் அடைந்த பலன்கள்தான் அதிகம். அவர்கள் முஸ்லிம் சமூகத்தை வெறும் ஓட்டு வங்கிகளாகவே பயன்படுத்திக்கொண்டு அந்தச் சமூக மக்களை பெரும் சமூகச் சிக்களுக்குள் எளிதாக விட்டுவிட்டார்கள். இவர்களிடம் அரசியல் பலனை எதிர்பார்த்த நம்முடைய சமூகத் தலைமைகளிடம் தூரநோக்கு திட்டம் என்று எதுவும் இல்லாமல் போனதால் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடமும் இவர்களுக்கு இருந்த மதிப்பு விட்டுப் போய் வேறு தலைமைத்துவ இடங்களைத் தேடி மக்கள் போய்விட்டனர். இது இன்று மக்களை ஒன்றிணைப்பதில் மிகப் பெரும் சவாலான காரியமாக இருக்கிறது. அரசியல் கட்சிகள் மாறி மாறி இந்தச் சமூகத்தை பயன்படுத்திய நிலைகளைப் பற்றி நிறையவே பேசலாம். அவ்வளவு நீண்ட துரோக வரலாறு அது, இன்றும் அதுவே தொடர்கிறது.

இஸ்லாமிய அடிப்படையில் கவனித்தால் இன்றைய பாரம்பரியமாக செயல்படும் ஜமாஅத் ரீதியான பலமான கட்டமைப்பு வேறுவிதமான வடிவத்திற்கு பரிணமித்திருக்கிறது. இதை உடனடியாக மீள்கொணர்வு செய்ய வேண்டும். அல்லது முஸ்லிம்களை இயக்க ரீதியாக இஸ்லாமிய அணிதிரட்டலுக்கு உட்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கு தலைமையேற்க வேண்டும் என்றால் அவர்கள் பெரும் செல்வந்தராகவும், கல்வி ஞானம் பெற்றவராகவும், பாரம்பரியமான குடும்பத்தையும் சேர்ந்திருக்க வேண்டும் என்ற அடிப்படைகள் யதார்த்தத்தில் உள்ளது. இது மிகவும் அசாதாரணமான நடைமுறை. இஸ்லாத்தினுடைய வராலற்று ரீதியான அமைப்பு முறைகளில் இவற்றை போன்ற நடைமுறைகளுக்கு அணுவளவும் இடமில்லை என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இன்று சமகாலத்தில் இன்னும் பிற வகையான இஸ்லாமிய தலைமைகளும் செயல்பட்டு வருகின்றன. இதை ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைத்தால் இவர்களை இப்படி வரையறுக்கலாம். அதாவது, "மார்க்கத் தலைமை வேறு, அரசியல் தலைமை வேறு"" என்று செயல்படுவோர். இவர்களுடைய செயல்பாடுகள் பல்வேறு வகையான வடிவங்களில் இருந்தாலும், ஒருவருக்கு ஒருவர் வேறுபட்ட அரசியல் பார்வைகள் இருந்தாலும் இறுதியான வடிவம் என்பது இதுதான். அதாவது, மார்க்கம் வேறு, சமூக அரசியல் வேறு என்று செயல்படுவோர், அதில் சிலர் அப்படியெல்லாம் இல்லை என்று வாயளவில் சொன்னாலும் நடைமுறையாக அப்படி நடந்து கொள்வோர் என்றும் உள்ளனர்.

இத்தகைய பல்வேறுபட்ட தலைமைத்துவ அமைப்புகளால் முஸ்லிம் சமூகம்  வழிபாட்டு பண்பாடுகள் ரீதியாக சில பலன்களை பெற்றிருந்தாலும் அரசியல் மற்றும் சமூக தளத்தில் மிகப் பெரும் வெற்றிடம் ஏற்பட்டு பெரும் சிக்கலான கட்டத்தை அடைந்திருக்கிறது. இன்று இஸ்லாமிய சமூகம் இலங்கையில்  சந்திக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் அவர்களிடம் ஏற்பட்ட இத்தகைய மனப்போக்குதான் முக்கியமான காரணம் எனக் கூறலாம். 

"சீஸருக்கு கொடுக்க வேண்டியதை சீஸருக்கு கொடுத்து விடுங்கள். ஜீஸஸுக்கு கொடுக்க வேண்டியதை ஜீஸஸுக்கு கொடுத்து விடுங்கள்" என்று ஒரு போக்கு மேற்கில் இருந்தது. இதை உருவாக்கி கிருஸ்தவ அரசியலில் பெரும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த கிருஸ்தவ மதகுருமார்களின் ஆதிக்கம் முழுவதுமாக தகர்க்கப்பட்டு அரசியல் வேறு, மதச் சம்பிரதாயங்கள் வேறு என்று உருவாக்கப்பட்டது, இதனால் பெரும் பலனடைந்தது அதிகார வர்க்கமும் ஆளும் மனிதர்களும்தான்.

முதலில் முஸ்லிம்கட்சிகளில் மத ஆதிக்கம் இருந்தபோது பின்பற்றப்பட்டு வந்த கொஞ்சமும் நேர்மையான அரசியல் நெறிமுறைகள் துடைக்கப்பட்டு அதிகாரம், பதவி, பணம், செல்வாக்கு போன்றவை முக்கியமாக ஆகப்பட்டது. இதன் அடிப்படையில் புரிந்து கொண்டால் இஸ்லாமிய சமூகத்திடம் ஏன் இப்படிப்பட்ட கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். மார்க்கம்-அரசியல் என்று பிரிப்பதன் மூலம் உறுதியான இஸ்லாமிய நடைமுறையை பின்பற்றும் மக்களை திசைதிருப்பி இஸ்லாம் என்னும் உயரிய அரசியல் சித்தாந்தத்தை அப்படியே வெற்றிகரமாக முடமாக்கிவிட துணிந்துள்ளனர். அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளனர்.

இஸ்லாமிய சமூகம் விடுதலை பெறுதல் மற்றும் சமூக மாற்றம் எல்லாம் வெறும் இபாதத்துகளில் முழுமையடைந்து மார்க்க வழிமுறைகளை பின்பற்றுவதால் மட்டும் நடந்து விடும் என்ற கற்பனை வழிமுறைகளில் இஸ்லாமிய கோட்பாட்டுக்கு உடன்பாடில்லை. அது மனிதர்களின் கடின முயற்சியாலும், கட்டுப்பாடான வாழ்க்கை முறைகளாலுமே இந்த பூமியில் வாழ முடியும் என்ற நியதிக்கு உட்பட்டது.

முஸ்லிம்களுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் எனில் முஸ்லிம் கட்சியின் போராளிகளாக  இருக்க வேண்டும் என்ற பிம்பம் பொது சமூகத்திடையே கட்டமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய கோட்பாடுகளையும் அதனுடைய சித்தாந்தங்களையும் தீரமாக நெஞ்சில் சுமந்த இளைஞர்களுக்கு முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் வாய்ப்புகளை இது மறைமுகமாக தடை செய்கிறது. இளைஞர்களால் வார்த்தெடுக்கப்பட்ட ஒரு மார்க்கத்தில் இருந்து கொண்டு சமூகத்தை இருள்களிலிருந்து வெளியேற்றும் ஆற்றல் கொண்ட மக்களை இளைஞர்கள் என்ற ஒரே காரணத்திற்காக முற்றிலுமாக புறக்கணித்து விடுகின்றனர்.அடிமைப்பட்ட ஒரு சமூகத்தில் போராட்ட சக்தியாக எஞ்சி நிற்கக் கூடியவர்கள் இளைஞர்கள் மட்டுமே என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

இவ்வாறாக உணர்ந்து இன்றைய முஸ்லிம் சமூகத்தை எதற்கும் சமரசம் செய்து கொள்ளாத ஓர் உறுதியான தலைமையின் கீழ் ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் இன்றியமையாததாக இருக்கிறது. அந்த தலைமை மார்க்க ரீதியாக உறுதியான போராட்ட குணத்துடனும், அரசியல் ரீதியாக பல்வேறு நுனுக்கங்கள் தெரிந்ததாகவும், மக்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையிலும் இருத்தல் வேண்டும்.

மாணவர்களையும், பெண்களையும் சிந்தனை ரீதியாக ஒருங்கிணைத்து அவர்களுடைய தளங்களில் ஏற்பட்டிருக்கும் சமூக சிக்கலுக்கு அவர்களைக் கொண்டே  தீர்வுகளை வழங்கிடும் மிகப் பெரும் சுமையை தாங்கக் கூடியதாகவும் இந்த இஸ்லாமியத் தலைமைத்துவம் இருக்க வேண்டும். என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா நீண்ட தனது கருத்தை வெளியிட்டார்  
Loading...