Thursday, 2 February 2017

மகிந்தவின் ஆட்சி நீடித்திருந்தால் தலைவர் ஹக்கீம் கொலை செய்யப்பட்டிருப்பார்

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது

 


முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பொறுப்பற்ற முறையில் மிகவும் கேவலமான அச்சுறுத்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவர் எப்படிப்பட்ட கீழ்த்தரமானவர் என்பதனை புரிந்துகொள்ள கூடியதாக இருக்கின்றது.

மனித நாகரீகங்கள் வளர்ச்சியடைந்த இந்த காலகட்டத்தில் இப்படியும் கீழ்த்தரமானவர்கள் எமது சமூகத்தின் அரசியலை வழிநடாத்துகிரார்கள் என்பதனை நினைக்கும்போது எமது சமூகம் வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டிய நிலையில் உள்ளது.

அரசியல் தலைவர்களை நெருங்குவதற்கும், அவர்கள் மூலமாக அதிக சலுகைகளை பெற்று தங்களது அரசியலை வளர்த்துக் கொள்வதற்கும் தலைவர்களுக்கு கூட்டிக்கொடுத்து அவர்களை வழிகெடுக்கின்ற செயல்பாடுகள் ஒன்றும் புதிதானதல்ல. இப்படிப்பட்டவர்கள் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களது காலத்திலும் இருந்தார்கள்.       

இவர்களையெல்லாம் தாண்டி இந்த தவிசாளர் கூட்டிக்கொடுத்தது மட்டுமல்லாது விளக்கும் பிடித்திருப்பதாகவும் அவரே வாக்குமூலம் வழங்கியுள்ளார். ஆனால் யாருக்கு விளக்கு பிடித்தார் என்று மட்டும் நேரடியாக கூறவில்லை.   

தன்னை கட்சியில் இருந்து இடைநிறுத்தம் செய்யாமல் இருப்பதற்காக இவ்வாறு கட்டுக்கதைகளை கூறி அச்சறுத்தல் ஒன்றினை விடுக்கின்றார் என்பது தெரிகின்றது. எந்த மனிதராக இருந்தாலும் அவரை இவ்வாறு கீழ்த்தரமாக அச்சுருத்துவதனை விட, கொலை செய்வது சிறந்தது.

இவரது கூற்றுப்படி தலைவர் அவ்வாறு நடந்திருந்தால் இவரை 2௦12 இல் கட்சியிலிருந்து இடைநிறுத்தம் செய்திருக்க மாட்டார். இவரை 2௦12 இல் தலைவர் முஸ்லிம் காங்கிரசிலிருந்து இடைநிறுத்தம் செய்து கடிதம் அனுப்பியிருந்தார். அதன்பின்பு செயலாளர் ஹசனலி அவர்கள் தலைவரிடம் மன்றாடிய பின்பு தலைவர் அவர்களால் தவிசாளருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.  

இங்கே கேள்வி என்னவென்றால் அப்போது இந்த இறுவட்டுக்கள் எங்கே? கோவைகள் எங்கே? அச்சுறுத்தல்கள் எங்கே?

தான் எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரசின் தலைவராக வரவேண்டும் என்பதற்காக நீண்டதூர திட்டத்தின் அடிப்படையில் அரசியல் காய்நகர்த்தலினை மேற்கொண்டு வந்திருக்கின்றார்.  கட்சியில் தன்னைவிட ஆளுமைகள் நிறைந்தவர்கள் பலர் அவ்வப்போது  தலைவருடன் முரண்பட்டபோது அவைகளை தனக்கு சாதகாமாக பயன்படுத்தி அவர்களை சமரசபடுத்தாது கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு இவரது பங்களிப்பு பிரதானமாக இருந்திருக்கின்றது.

தன்னை ஒவ்வொரு கட்டமாக கட்சி பதவிகளிலும், அரசியல் பதவிகளிலும் வளர்த்தபின்பு கட்சியின் அடுத்த தலைவராக தன்னையே ஸ்திரப்படுத்திகொள்ளும் நடவடிக்கைகளில் கட்டம் கட்டமாக செயலாற்றி வந்துள்ளார்.

சமூகம் சார்ந்து முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகளை தேசிய சிங்கள கட்சி தலைமைகளிடம் வலியுருத்துவதனாலும், சிங்கள தலைவர்களுக்கு அடிமையாக இல்லாததனாலும் தலைவர் ஹக்கீம் மீது வெறுப்புக்கொண்ட சிங்கள தலைவர்கள் அவ்வப்போது ஹக்கீம் அவர்களை தலைமை பதவியில் இருந்து அகற்றுவதற்கு முஸ்லிம் காங்கிரசின் அடுத்த தலைவர்களை தூண்டுவது ஒன்றும் புதிதான விடயமல்ல.

அந்த வகையில் ஹக்கீம் அவர்கள் உயிருடன் இருக்கும் வரைக்கும் தலைவர் பதவியிலிருந்து நீக்குவது என்பது இலகுவான காரியமல்ல என்பதனால் தவிசாளர் அவர்களை கட்சிக்குள் அரசியல் அதிகாரம் உள்ளவராக உருவாக்குவதற்காகத்தான் அவருக்கு அன்றய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் கட்சியின் தலைவருக்கு தெரியாமல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

தனது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குள்ளேயே எத்தனையோ பேர்கள் அமைச்சர் பதவிக்காக சண்டை பிடித்துக்கொண்டிருந்த சூழ்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டிய தேவை என்ன?    

எனவேதான் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் பதவியில் அதன் தவிசாளரை அமர்த்துவதற்கான அனைத்து ஒழுங்குகளும் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு காய்களை நகர்த்திக்கொண்டிருந்த சூழ்நிலையில்தான் அல்லாஹ்வின் உதவியோடு ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்படாது இருந்திருந்தால் ராஜபக்சாக்களின் அனுசரணையோடு முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக அதன் தவிசாளர் அமர்த்தப்பட்டிருப்பார். அதன் வெளிப்பாடுதான் நேற்றய அவரது கேவலம் கெட்ட அறிக்கையாகும்.       

Loading...