Tuesday, 31 January 2017

தோழர் பசீரின் மறைக்கப்பட்ட மர்மங்கள்.

தோழர் பசீரின் மறைக்கப்பட்ட மர்மங்கள்.

 முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது

 

4 வது தொடர்...........

 

தோழர் பசீரின் மறைக்கப்பட்ட மர்மங்கள்.

 

முஸ்லிம் காங்கிரசின் தலைவர் பதவியினை கைப்பெற்றும் நோக்கில் தலைவர் ஹக்கீமுக்கு எதிராக மக்கள் மத்தியில் விமர்சனங்களை உண்டுபண்ணும் பொருட்டு அவ்வப்போது மேற்கொள்கின்ற அரசியல் நகர்வுகள் அனைத்தும் இறுதியில் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.

அந்தவகையில் 2௦11 இல் கல்முனை மாநகரசபை தேர்தலுக்கான சாய்ந்தமருதில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கட்சி தலைவர் இல்லாத மேடையில், கட்சியின் தீர்மானங்களை "சாச்சாவினால்" மேற்கொள்ள முடியாது என்றும், அதிகூடிய விருப்புவாக்குகள் எடுக்கின்றவர்களே மாநகர முதல்வராக நியமிக்கப்படுவார்கள் என்றும் தலைவர் போன்று தோழர் பசீர் அவர்கள் உரையாற்றியிருந்தார்.

இவரது இந்த உரை பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அதாவது நிசாம் காரியப்பர் அரசியல் அதிகாரத்தினை அடைந்தால் அது எதிர்காலங்களில் தமது தலைமைத்துவ இலக்கை அடைவதற்கு தடையாக அமைந்துவிடும். எனவே நிசாமை அதிகாரத்துக்கு வரக்கூடாது என்ற காரணத்தினாலேயே அவ்வாறு கூறியிருந்தார்.

இங்கே தலைவர் ஹக்கீம் கட்சிக்கு "சாச்சா" என்றால், இக்கட்சியின் "வாப்பா" தோழர் பசீர் என்பதனை மறைமுகமாக கூறியுள்ளாரா என்றும், கட்சியினால் தீர்மானிக்கப்படாத ஒரு கருத்தினை இவரால் எப்படி பகிரங்கமாக கூற முடியும் என்ற கேள்விகளும் அப்போது எழுந்தது.  இறுதியில் சாய்ந்தமருது, கல்முனைக்குடியில் ஹக்கீம் அணி என்றும், பசீர் அணியென்றும் உருவாக்கி சாய்ந்தமருது மக்களை தலைவர் ஹக்கீமுக்கு எதிராக தூண்டுவதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியில் அனைத்தும் தோல்வியடைந்தது.    

கடந்த மார்ச் மாதம் பாலமுனையில் நடைபெற்ற தேசிய மாநாட்டுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அதனை தடுத்து நிறுத்துவதற்காக பலவிதமான சூழ்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் தலைவருக்கு இருக்கின்ற கட்சியின் அதிகாரங்களை குறைக்கச் செய்யும்படி வலியுறுத்தி அதிஉயர் பீட உறுப்பினர்கள் தூண்டப்பட்டனர்.     

தலைவரை மாற்ற வேண்டுமென்றால் அது வெற்றியடையாது என்ற காரணத்தினால், அதிகாரக் குறைப்பு என்ற புதிய கோசத்தினை முன்வைத்திருந்தார். அதிகாரத்துடன் ஹக்கீம் அவர்கள் இருக்கின்றபோதே தீர்மானங்கள் எடுப்பதில் பாரிய தடைகளை எதிர்கொள்கின்ற நிலையில், அதிகாரமில்லாத தலைவராக இருந்துகொண்டு எதனை சாதிக்க முடியும்? பேரினவாதிகளுக்கு ஏற்றால்போல் கட்சியை வழிநடத்துவதற்கும், பதவிகளை அடைந்து கொள்ளுவதற்கும் ஏதுவானதே இந்த தந்திரமாகும்.  

அதிகாரக்குறைப்பு என்ற கோசமும் வெற்றியளிக்காததனால் இறுதியில் கிழக்கு என்ற பிரதேசவாதம் தூண்டப்பட்டு, கிழக்கின் எழுட்சி என்ற புதிய முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் பின்னணி செயல்பாட்டாளர்களில் ஒருவராக தோழர் அவர்களும் செயல்பட்டதாகவும் அறிய கிடைக்கின்றது.  

இந்த கிழக்கின் எழுட்சிக்கு ஆதரவு கிடைக்காத காரணத்தினால் கட்சியின் எதிரிகளான ரிசாத் பதியுதீன், அதாஉல்லாஹ் மற்றும் இன்னும் பல உதிரிகளையும் இணைத்துக்கொண்டு செயல்பட முற்பட்டபோது, அவர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாத காரணத்தினாலும், இதற்கும் மக்கள் ஆதரவு கிடைக்காததனாலும் இறுதியில் இதுவும் கைவிடப்பட்டுள்ளது.   

இவ்வாறான தலைமைத்துவத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தலைவரினால் பதவிகளும், சொகுசு வாகனங்களும் வழங்கப்படாத அதியுயர்பீட உறுப்பினர்களை தலைவருக்கு எதிராக திசைதிருப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது வழமை. இதற்காக பெருமளவு பணமும் அவ்வப்போது பரிமாறப்பட்டு வருகின்றது.

எனவேதான் தங்களது அனைத்து சூழ்ச்சிகளும் தோல்வியடைந்ததனால் இறுதியாக "தாருஸ்ஸலாம்" என்னும் மந்திரத்தை கையிலெடுத்து பல விடயங்களை சோடித்து துண்டுப்பிரசுரம் வெளியிட்டுள்ளார்கள்.  

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் முஸ்லிம் காங்கிரசின் எதிரிகள் ஏதோ பாரிய நிதி மோசடி நடைபெற்றது போன்றும், கட்சியின் சொத்துக்களை தலைவர் அபகரித்துள்ளார் என்ற ரீதியிலும் தங்களது ஊடக பலத்தினைக்கொண்டு பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.  

இவ்வாறான துண்டுப்பிரசுரங்களில் இருப்பது உண்மை என்றால் தங்களது உரிமை கோரலுடன் இதனை வெளியிட்டு இருக்கலாம். அல்லது கட்சியின் அதியுயர்பீட கூட்டங்களில் கேள்விகளை எழுப்பி இருக்கலாம். அதியுயர்பீட கூட்டங்களில் வாய்பொத்தி மௌனியாக இருந்துவிட்டு மக்களையும், கட்சி போராளிகளையும் குழப்ப நினைத்தால் அதில் வெற்றிபெற முடியாது.

தாருஸ்ஸலாம் ஆனது எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பது யாவரும் அறிந்த விடயமாகும். இவ்வாறான பாரிய கட்டடம் ஒன்றினை பராமரிப்பது என்பது சாதாரண விடயமல்ல. அதற்குரிய மின்சார கட்டணம், நீர் கட்டணம், அங்கு பணிபுரிகின்ற ஊழியர்களுக்கான சம்பளம், ஏனய பராமரிப்பு செலவுகள் என்று ஏராளமான செலவுகள் இருக்கின்றது.

இந்த செலவுகள் பற்றி யாரும் கேள்வி எழுப்புவதில்லை. அத்துடன் கட்சி கூட்டங்கள் அங்கு நடைபெறுவதுடன் வாரா வாரம் அல்குரான் விளக்க உரைகள் நடைபெற்று வருவதும் யாரும் அறியாத விடயமல்ல.

ஒரு அரசியல் கட்சியை நடாத்துவது என்பது சாதாரண விடயமல்ல. ஒவ்வொரு அசைவுகளுக்கும் பணத்தினை இறைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறான கட்சி நடவடிக்கைகளுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கின்றது என்று நாம் சிந்திக்க வேண்டும். அதாவது தாருஸ்ஸலாம் மூலம் வருமானத்தினை மட்டும் குறிப்பிட்டவர்கள், கட்சி நடவடிக்கைக்கான செலவுகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தால் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்திருக்கும்.

எனவே இவ்வாறான துண்டுப்பிரசுரங்களை முதலில் அதியுயர்பீட உறுப்பினர்களுக்கு வழங்கி கட்சிக்குள் ஒரு விவாதத்தினை மேற்கொண்டிருக்கலாம். அதைவிடுத்து முஸ்லிம் காங்கிரசின் எதிரிகளுக்கு இதனை விநியோகிப்பதன் மூலம் எதனை அடைந்துகொள்ள முடியும்?

கையாலாகாதவர்களின் இப்படியான ஆதாரமற்றதும், மக்களை குழப்பும் விதமாகவும் வெளியிடபட்டிருக்கும் இந்த அனாமதேய துன்டு பிரசுரத்துக்காக யாரும் அலட்டிக்கொள்ள தேவை இல்லை. அத்துடன் தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப தேசியபட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருந்தால் இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் வெளியாகி இருக்காது மாறாக தாருஸ்ஸலாம் சட்டப்படியே இருந்திருக்கும். எனவே தனக்கு பதவி வழங்கப்படாததன் பழி வாங்கும் ஓர் நடவடிக்கைதான் இந்த துண்டுப்பிரசுரமாகும்.  

குறிப்பு: இந்த கட்டுரையில் தோழர் பசீரின் அரசியல் விடயங்களை மட்டும் எழுதியுள்ளேனே தவிர அவரது தனிப்பட்ட நடவடிக்கைகளை அல்ல. இதனை விளங்கிக்கொள்ளாத சிலர் அவர்களது ஐந்தறிவுக்கு ஏற்றாற்போல் கருத்துக்கூறினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

முற்றும்.     

      

Loading...