Tuesday, 31 January 2017

முஸ்லிம்கள் குடியேற்றத் தடை: அமெரிக்காவில் வலுக்கிறது எதிர்ப்பு

 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்குத் தடை விதித்து அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுக்குக் கண்டனம் தெரிவித்து, தலைநகர் வாஷிங்டனில் ஞாயிற்றுக்கிழமை

protest4ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமுஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்குத் தடை விதித்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிரான போராட்டங்கள் அமெரிக்கா முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மேலும் தீவிரமடைந்தன.
விமான நிலையங்கள், சாலைகள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கானோர் கூடி உத்தரவுக்கு எதிராகவும், டிரம்ப்புக்கு எதிராகவும் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசின் முடிவை எதிர்த்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் குவிந்து வருகின்றன.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:ஈரான், இராக், யேமன், சிரியா, சூடான், லிபியா, சோமாலியா ஆகிய நாடுகளிலிருந்து வருவோரை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க கடுமையான நிபந்தனைகள் விதித்தும், அகதிகளை ஏற்பதில் கட்டுப்பாடுகள் குறித்தும் புதிய ஆணையை அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

அதன்படி, பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள அந்த 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா நுழைய 30 நாள்களுக்கும், பொதுவாக அகதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க 120 நாள்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக அதிபரின் உத்தரவு தெரிவிக்கிறது. சிரியாவிலிருந்து அகதிகளை ஏற்பது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிபர் கையெழுத்திட்ட உடனேயே ஆணை நடைமுறைக்கு வந்தது. அதையடுத்து, பாதி வழிப் பயணத்தில் இருந்த பலர் அமெரிக்காவின் பல்வேறு விமான நிலையங்களில் வந்திறங்கியதும் திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்பட்டது. நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: தேர்தலின்போது டிரம்ப் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகவே இந்த குடியேற்றத் தடை உத்தரவு அமைந்திருந்தாலும், இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பியது. உத்தரவுக்கு எதிராக நாடு முழுவதும் சனிக்கிழமை தொடங்கிய போராட்டங்கள், ஞாயிற்றுக்கிழமை மேலும் தீவிரமடைந்தன.

வாஷிங்டனில் அதிபரின் வெள்ளை மாளிகை முன்பு ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி குடியேற்றத் தடை உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முடிவு அமெரிக்காவின் அடிப்படைத் தன்மைக்கு எதிரானது எனவும், நாட்டின் பன்முகத் தன்மையைப் பாழ்படுத்துவதாகவும் கோஷமெழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அகதிகளை வரவேற்கும் வகையிலான கோஷங்களையும் எழுப்பினர்.

இதேபோன்ற போராட்டங்கள் நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களிலும் நடைபெற்றன. ஏற்கெனவே, தடை செய்யப்பட்ட நாடுகளிலிருந்து இந்த விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை காவலில் எடுக்கக் கூடாது என்று நியூயார்க் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதா, வேண்டாமா என்ற குழப்பம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையங்கள் தவிர, மேன்ஹாட்டன் சுதந்திர தேவி சிலை, பாஸ்டன் காப்லீ சதுக்கம், சான் ஃபிரான்சிஸ்கோவின் முக்கிய இடங்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களில் வழக்கு: இதற்கிடையே, அரசாணைக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதவிர, ஜனநாயகக் கட்சி ஆளும் 16 மாகாணங்களின் தலைமை வழக்குரைஞர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், முஸ்லிம்கள் குடியேற்றத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, அரசமைப்புச் சட்டத்துக்கும், அமெரிக்காவின் அடிப்படைத் தன்மைக்கும் விரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப்புக்குத் தடை: பிரிட்டனில் 10 லட்சம் பேர் ஆதரவு

முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா நுழைவதற்குத் தடை விதித்துள்ள அதிபர் டிரம்ப், பிரிட்டனில் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்குமாறு வலியுறுத்தி பிரிட்டனின் நாடாளுமன்ற இணையதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளதையடுத்து இந்த விவகாரம் நாடாளுன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 31) விவாதத்துக்கு வருகிறது.

பாகிஸ்தானியர்களுக்கும் தடை?

அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளவர்களில், பாகிஸ்தானியர்கள் உள்ளிட்டோரையும் சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிபர் மாளிகை தலைமை அதிகாரி ரீன்ஸ் பிரீபஸ் கூறியதாவது:முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் கொண்ட நாடுகள் என்று அடையாளம் காணப்பட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை இணைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார் அவர்.

பயங்கரவாத அமைப்புகள் உற்சாகம்

முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு அதிபர் டிரம்ப் விதித்துள்ள தடை, பயங்கரவாத அமைப்புகளை உற்சாகமடையச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாத ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் மேற்கொண்டுள்ள பதிவுகளில், டொனால்ட் டிரம்ப்பின் இந்த முடிவால் அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்கள்அரசுக்கு எதிராகத் திரும்பி, தங்களது அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுவது அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத ஆதரவாளர் ஒருவர் மேற்கொண்டுள்ள பதிவில், "கூடிய விரைவில் மேற்கு ஆசிய நாடுகள் மீது அமெரிக்கா மீண்டும் ஒரு போரைத் துவக்கும். இது அமெரிக்காவுக்கு எதிரான உணர்வை உலக முஸ்லிம்களிடையே உருவாக்கும்' என்று உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.

Loading...