Tuesday, 10 January 2017

ஹிட்லர் இன்னமும் உயிரோடிருக்கிறார்,என்ற நம்பிக்கையில் குடும்பம் வாழ்கிறது


                                                 அருண் ஆரோக்கிய நாதன் - பள்ளிமுனை - மன்னார்

-கொடிய யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த யுத்த வலயத்தில் அந்த குடும்பம் வாழ்ந்தது. -காணாமற்போன நபர் ஒருவர் 23 வருடங்களின் பின்னர் தனது குடும்பத்துடன் மீளவும் ஒன்றிணைந்தார் என்கிற அறிவிப்பில் இருந்துதான் அவளது நம்பிக்கை உருவாகியுள்ளது.hitler pallimunai

-காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகம்தான் இறுதியாக பதில்களை வழங்கி இந்த மௌனத்தை கலைக்க வேண்டும் என உறவினர்கள் நம்புகிறார்கள். ஹிட்லர் என்கிற பெயரை நாஸி ஜேர்மனியின் அட்டூழியங்களுக்காக வரலாற்றில் இருந்து அழிக்க வேண்டும் என்று பலரும் விரும்பினார்கள். ஆனால் பதின்ம வயதுக்காரர்களாகிய ஜூட், அபிஷா மற்றும் அவர்களின் தாயான ஜெயகவிதா ஆகியோருக்கு அந்தப் பெயர் அவர்களின் ஆவல் நிறைந்த கண்களில் புதிய ஒளியை ஏற்றுகிறது.

ஜூட் மற்றும் அபிஷா ஆகிய இருவருக்கும் அவர்களின் தந்தையாகிய பிறிமில் றோசரி ஹிட்லரின் முகத்தை நினைவுகூர முடியவில்லை. 2006,டிசம்பர் 7ல் தலைநகர் கொழும்பிலிருந்து  வடக்கே 254 கி.மீ தொலைவிலுள்ள மன்னார் பட்டினத்தில் வைத்து அவர் காணாமற்போனதாக அறிவிக்கப்பட்டது.

இந்தக் குடும்பம் சிங்கள பெரும்பான்மையான ஸ்ரீலங்கா அரசாங்கப் படைகளுக்கும் மற்றும் தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கும்(எல்;.ரீ.ரீ.ஈ) இடையே நடைபெற்ற கொடிய போரின் யுத்த வலயத்தில் வாழ்ந்து வந்தது. தமிழின சமூகத்துக்கு தனியான ஒரு நாடு வேண்டி அரசாங்கத்துக்கு எதிராக எல்.ரீ.ரீ.ஈ நடத்திய போரில் சிறை பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரில் பிறிமில் றோசரி ஹிட்லரும் ஒருவர்.

அமைதியான ஒதுங்கிய சுபாவம் உள்ள ஜூட் 5 வயது நிரம்பிய பிள்ளையாகவும் மற்றும் அவரது சகோதரி அபிஷா 3 வயதுள்ள குழந்தையாகவும் இருந்தபோது, அவர்களின் 30 வயது நிரம்பிய தந்தையான மீனவர், அவர்களின் குடும்பம் வசித்த கிராமமான பள்ளிமுனையில் இருந்து ஒரு கிலோமீற்றருக்கும் குறைவான தூரத்தில் உள்ள மன்னார் பட்டினத்துக்குச் சென்றார். வரப்போகும் புதுவருடத்துக்காக தனது பிள்ளைகளுக்கு புத்தாடைகள் வாங்குவதற்காகவே அவர் சென்றார். அவர் ஒருபோதும் திரும்பி வரவில்லை.

பாதிக்கப்பட்ட பலரைப் போலவே அவரும் சிறுபான்மை இனமான ஸ்ரீலங்கா தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர். 26 வருடங்களாக நீண்ட உள்நாட்டு யுத்தம் (1983 - 2009) மற்றும் 1980ன் மார்க்ஸிஸ்ட்களின் கிளர்ச்சியின்போதும் மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல்களுக்காக ஸ்ரீலங்கா ஆயுதப்படைகள் மற்றும் அரசாங்க சார்பான இராணுவ குழுக்கள் மீது பரவலாக குற்றம் சாட்டப்பட்டது.

அந்த டிசம்பர் நாள் முதல் ஜெயகவிதா குடும்பச் சுமையை தனியாகவே சுமந்து வருகிறார். கவலைகள் மற்றும் வேதனைகள் தலைவலியை எற்படுத்துவதால் ஜெயகவிதா(35) அடிக்கடி அவரது தலையை சுற்றிக் கட்டப்பட்டுள்ள தென்னோலை துண்டுடன் காணப்படுகிறார், இது ஒரு வீட்டு வைத்திய முறையாகும். அவரது கணவன் காணாமற்போனது முதல் தனது வாழ்க்கை முற்றாக மாறிப்போய்விட்டது என ஜெயகவிதா சொல்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டம்தான். "அவர் இங்கு இருந்தால் ஒரு வேலையை செய்து எங்கள் குடும்பத்துக்கு உழைத்து தருவார். எனது ஒரே வேலை சமைப்பதற்கும் மேலதிகமாக குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதாகவே இருந்திருக்கும்".

இப்போது சிதைந்துபோன இந்த சிறிய கத்தோலிக்க குடும்பம், பாதி கட்டப்பட்ட வீட்டில் வசித்தபடி மற்றும் அவர்களது வீட்டுடன் இணைந்துள்ள சிறிய பலசரக்கு கடையில் கிடைக்கும் சிறிதளவு பணத்தைக்கொண்டு தம்மை தற்காத்துக்கொண்டு வறுமையில் வாடுகிறது.

ஜெயகவிதா ஒரு தாய், தந்தை மற்றும் வருமானத்துக்கான ஒரே ஆதாராமாக பல பாத்திரங்களை ஏற்றுள்ளார். அவர் கடையை நடத்துகிறார், சமையலைக் கவனிக்கிறார் மற்றும் பிள்ளைகளை பாடசாலைக்கும் மற்றும் பிரத்தியேக வகுப்பகளுக்கும் அழைத்துச் செல்கிறார். அவர் பிள்ளைகளின் ஒரு பாதுகாவல் மற்றும் அபிஷாவை தனியாக எங்குமே செல்ல விடுவதில்லை."இளம் பெண்கள் பாலியல் பலாத்தகாரம் புரிந்து கொலை செய்யப்படும் கதைகளை நான் அடிக்கடி படித்தும் கேட்டும் வருகிறேன். அது எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது"

"அப்பா ஒரு உயரமான மனிதர் கறுப்பு கண்ணாடி அணிந்து சிவப்பு நிற உந்துருளியை ஓட்டுவார்" அவர்களது குடும்ப செருகேட்டைப் பார்த்தவாறே அபிஷா சொல்கிறாள். "இப்படித்தான் எங்கள் அம்மா அப்பாவைப் பற்றி அடிக்கடி சொல்வார்".அவர் எங்களுடன் இருந்தால் அவர் என்னை பாடசாலையில் கொண்டு விட்டு பின்னர் அங்கிருந்து கூட்டியும் வருவார்" அபிஷா ஒரு சிறு சிரிப்புடன் கொல்கிறாள். "எங்கள் அப்பா ஒரு நல்ல மனிதர் என்று அம்மா என்னிடம் சொல்வார், அவர் நிச்சயம் திரும்பி வருவார்" என்று ஜூட் சொல்கிறான்.

ஹிட்லர் காணாமற்போவதற்கு முன்னர் அந்த தம்பதியினர் அந்த வீட்டைக் கட்ட ஆரம்பித்தார்கள்."அது முற்றுப் பெறாததால் வீடு முழுவதும் இப்போது விரிசல் ஏற்பட்டுள்ளது, ஒரு சிறிய கடனை பெற்றுக்கொண்டதும், வீட்டை முழு அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த வருட மழைக்காலத்துக்கு முன்பே குறைந்தபட்சம் அதன் கூரையையாவது பொருத்திவிட நான் முயற்சித்தேன், ஆனால் பணம் செலவாகி விட்டதால் என்னால் அதை முடிக்க முடியவில்லை" என்று ஜெயகவிதா சொல்கிறார்.

தனது கணவருக்கு ஏதாவது நடந்திருந்தால் தனது குடும்பம் அதை அறிந்திருக்கும் என தான் நம்பவதாக ஜெயகவிதா சொல்கிறார், "அந்த நேரத்தில் மக்களை அந்த இடத்திலேயே வெட்டியும் சுட்டும் கொன்றார்கள். ஆனால் நாங்கள் ஒருபோதும் அப்படியான எதையும் காணவில்லை. அதன்படி அவர் எங்கிருந்தாவது வருவார் என நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்".

அவரது நம்பிக்கை வருவதற்கு காரணம் ஸ்ரீலங்காவின் வடபகுதி யாழ்ப்பாணத்தில் காணமற்போனதாக கருதப்பட்ட ஒருவர் 23 வருடங்களின்பின் தனது குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்ததைப் பற்றிய ஒரு அறிவிப்பைக் கேட்டதுதான். 1989 முதல் காணாமற்போனவர்களின் குடும்பங்களுடன் பணியாற்றி வருகிறார், காணாமற்போனவர்கள் குடும்பங்கள் பற்றிய அமைப்பின் தலைவர் பிறிற்றோ பெர்ணாண்டோ. அவர் சொன்னது "எனது வாழ்நாளில் காணாமற்போனதாக அறிவிக்கப்பட்ட எவரும் திரும்பி வந்ததை நான் காணவில்லை" என்று.

காணாமற்போனவர்கள் பற்றி திகைக்க வைக்கும் எண்ணிக்கை

யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது முதல் காணாமற்போனவாகள் எண்ணிக்கை இருந்து வருகிறது. காணாமற் போனவாகள் பற்றிய ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு, 2013 - 2015 காலப்பகுதியில் காணாமற்போன 5,000 அரசாங்கப் படைகள் உட்பட கிட்டத்தட்ட 25,000 காணாமற் போனவர்கள்  பற்றிய முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 1989ல் இருந்து இதுவரை காணாமற்போனவர்கள் பற்றிய 16,000 முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளது. ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் பற்றிய ஐநா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் 2011ம் ஆண்டு அறிக்கையில் காணாமற்போனவர்கள் எண்ணிக்கை 40,000 மேல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2015ல் வடக்கிலுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில், தற்போது கிடைக்கக்கூடிய சனத்தொகை எண்ணிக்கையுடன் ஒப்பீடு செய்து பார்த்ததில் காணாமற்போனவர்கள் எண்ணிக்கை 90,000 தாண்டக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜனவரி 2016ல் தற்போதைய  ஸ்ரீலங்கா அரசாங்கம், காணாமற்போனவர்கள் பற்றிய 65,000 முறைப்பாடுகள் அரசாங்க ஆணைக்குழுக்களுக்கு கிடைத்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது. உலகத்திலேயே காணாமற் போனவர்கள் பற்றிய மிகப்பெரிய வழக்குகள் தொகையை கொண்டுள்ளவற்றில் ஒன்றான இந்த விடயத்தை கையாள்வதற்கு தற்போதைய அரசாங்கம் காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கு காணாமற்போனதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் காணாமற்போனவர்களின் உறவினர்கள் அதன் நோக்கம் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள்.

"நாங்கள் அந்த சான்றிதழை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு (அரசாங்கத்துக்கு) எதையும்  செய்யாமல் விட்டுவிடுவது சுலபம்" என்கிறார் ஜெயகவிதா. ஏற்கனவே தனது வழக்கு புறக்கணிக்கப் பட்டுவிட்டது என்ற உணர்வில் அவர் இருக்கிறார். உள்ளுர் காவல் நிலையம், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் காணாமற்போனோர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்கு என்பனவற்றுக்கு அவர் வழங்கிய முறைப்படியான புகார்களுக்கு எந்த பதிலும் அவருக்கு கிடைக்கவில்லை.

சர்வதேச செஞ்சிலவைச் சங்கத்தின் கூற்றுப்படி, காணாமற்போன தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அவர்களின் குடும்பங்கள் அறியவேண்டும். அவர்களைக் கண்டுபிடிக்கும் வரை, அந்த குடும்பங்கள் தொடர்ந்து உணர்வுகரமான, பொருளாதார ரீதியான சட்ட மற்றும் நிருவாக ரீதியான கஷ்டங்களுக்கு தங்கள் நாளாந்தா வாழ்வில் முகம் கொடுக்க நேரிடும். பல வழக்குகளில் காணாமற் போனவாகளின் குடும்ப அங்கத்தவர்கள் காணாமற்போன தங்கள் பிரியப்பட்டவரை கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் அல்லது குறைந்தபட்சம் அவரைப்பற்றிய பதிலைப் பெறும் நோக்கில் ஒரு விசாரணையில் இருந்து மற்றொரு விசாரணைக்கு பாய்ந்து கொண்டிருப்பார்கள்.

காணாமற்போனோர் அலுவலகம(ஓ.எம்.பி) பதில் வழங்குமா?

2016 ஆகஸ்ட்டில், ஸ்ரீலங்கா பாராளுமன்றம், 2017 ஜனவரி முதல் ஆரம்பமாகும் வகையில் கட்டாயமாக மற்றும் தன்னிச்சையற்ற காணாமற் போதல்கள்; மற்றும் காணாமற் போனவர்கள் பற்றி விசாரிக்க முதல் நிரந்தர அமைப்பாக காணாமற் போனவர்கள் அலுவலகம் (ஓ.எம்.பி) ஒன்றை நிறுவுவதற்கான சட்டம் ஒன்றை இயற்றியது. இந்த காணாமற்போனோர் அலுவலகம் இறுதியாக பதில்களை வழங்கி மௌனத்தை முடித்துவைக்கும் என்று உறவினர்கள் நம்புகிறார்கள். |ஆனால் எண்ணற்ற விசாரணைகளுக்கு முகம் கொடுத்தும் அதை யாரும் பின்தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத அனுபவங்களை கொண்டுள்ள அநேகர், இந்த காணாமற்போனோர் அலுவலகம்கூட மார்ச் 2017ல் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐநா மனித உரிமைகள் சபையில் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினையை சமாளிப்பதற்காக சர்வதேச சமூகத்தின் கண்களை கட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சிதான் எனக் கவலைப்படுகிறார்கள்.

"நாங்கள் அல்லது வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் இந்த காணாமற்போனோர் அலுவலகத்திலோ அல்லது அரசாங்கத்திலோ நம்பிக்கை கொள்ளவில்லை" என்கிறார், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரான பிதா இமானுவல் செபமாலை. அவரது அனுபவத்தின்படி இந்த பிரச்சினையை நேர்மையாக தீர்க்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை என்பதாகும். இந்த உள்ளுர் பொறிமுறை காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்கு நீதியை அறுவடை செய்யாது என அவர் தெரிவித்தார்.
"வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்கள் ஏகமனதாக ஒரு சர்வதேச விசாரணைப் பொறிமுறை அல்லது குறைந்தது கலப்பு பொறிமுறையாவது வேண்டும் எனக் கோரி வருகிறார்கள்: என செபமாலை தெரிவித்தார். இதற்கிடையில் அரசாங்கம் காணாமற்போனோர் அலுவலகத்தை அமைப்பதற்கு காரணமான வெற்றிவீரரான வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதை நிராகரிக்கிறார். சர்வதேச சமூகம், காணாமற்போனோர் அலுவலகம் பற்றிய இந்த சட்ட வரைவை உலகெங்கிலுமுள்ள காணாமற்போனோர் அலுவலகங்களில் மிகச்சிறந்த ஒன்று என்று பாராட்டியுள்ளது என அவர் கூறுகிறார்.

"அவர்களுடைய கடந்தகால அனுபவங்களைக்கொண்டு நாங்கள் முன்மொழிவதை இப்பொழுதே விமர்சிப்பது மிகவும் முன்கூட்டியே மேற்கொள்ளப்படுவதாகும், ஏனெனில் கடந்த காலத்தில் நாங்கள் வழங்கியதைப் போன்ற ஒன்றல்ல இது, எனவே காணாமற்போனோர் அலுவலகம் செயற்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து பின்னர் எதையும் கூறவும்".

இடம்பெயர்ந்தவர்கள் குடும்பங்களைச் சேர்ந்த பெர்ணாண்டோ, உண்மையை கண்டறிவதற்கு இந்த காணாமற்போனோர் அலுவலகம் உதவுகிறதா என்பதை தான் காத்திருந்து காணப்போவதாக கூறுகிறார்." காணாமற் போனவர்களை தேடுவதற்கு அரசியல் விருப்பம் முக்கியமானது, காணாமற்போனவர்கள் பற்றி இந்த அரசாங்கம் அர்ப்பணிப்பு காண்பிப்பதாக நான் எண்ணுகிறேன்".

பரிசில் பிறந்தவரான மனித உரிமைகள் வழக்கறிஞர் கலாநிதி.இசபெல்லா லஸ்ஸியின் ஆதரவு அவருக்கு உள்ளது. கொழும்பிலுள்ள தெற்காசிய சட்டக் கற்கைகள் மையத்தின் ஊடாக இடைநிலை நீதி பிரச்சினைகள் பற்றி  தனது கணவருடன் இணைந்து பணியாற்றி வரும் லஸ்ஸி கூறுவது ஒரு நல்ல சட்ட விசாரணைதான் முதல்படி என்று.

"ஆறுதல் வழங்குவது அளவுக்கு அதிகம் சவாலான ஒரு விடயம், ஆனால் காணாமற் போனோர் விடயத்தில் உங்களிடம் பதில் எதுவும் இல்லை. என்ன நடந்தது என்பது பற்றி உங்களிடம் திட்டவட்டமான அறிவு எதுவும் இல்லை". காணாமற்போனோர் அலுவலகம் பற்றிய சிறந்த நடவடிக்கைகளுக்கான கையேட்டின் துணை எழுத்தாளரான லஸ்ஸி, ஜெயகவிதா போன்றவர்களின் மனவேதனையை புரிந்துகொண்டுள்ளார். "உங்களுக்கு விவரம் எதுவும் தெரியாதவரை துயரத்தின் தீவிரம் மிகவும் அதிகமாகவே இருக்கும். உங்களால் முன்கூட்டி நகர முடியாது, எதிர்காலத்தை எண்ணி முன்னோக்கி அடியெடுத்து வைக்க முடியாது மற்றும் அது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம்".

தரப்பட்டுள்ள காணாமற் போனவர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது, இவர்களை கண்டு பிடிப்பதில் புலானாய்வாளர் தீவிர சவாலை எதிர்கொள்ளவேண்டி இருக்கும், ஆனால் அதனால் சிடைக்கும் வெகுமதி மிகவும் உயர்ந்ததாக இருக்கும்இ என அவர் சொல்கிறார்."நான் நினைக்கிறேன் ஒரு குடும்ப அங்கத்தவர் பெறும் ஒவ்வொரு பதிலும் அந்த சாதனைக்காக சிறிதளவேனும் பங்களிப்பு செய்தவர் யாராக இருந்தாலும் அவருக்கு கிடைக்கும் மகத்தான வெகுமதியாகும் மற்றும் எனக்கு அது செழிப்புத் தரும் ஒன்று".

ஜெயகவிதாவுக்கு வேண்டியது ஒன்று மட்டுமே " எனது இறுதி விருப்பம் அவரைத் திரும்பவும் காண்பது ஒன்றே. எப்படியாவது அவர் திரும்பவும் வரவேண்டும். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் பிள்ளைகள் வேகமாக வளாந்துகொண்டே வருகிறார்கள்".

 மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 

Loading...