Thursday, 22 December 2016

மேற்பரப்புக்கு அடியில் மறைந்துள்ள இனங்களுக்கு இடையிலான பதட்டத்தை கடப்பதற்கு


                                                      ஜெகான் பெரேரா

தேசியவாத பௌத்த குழுக்கள், பௌத்தர்கள் அபூர்வமாக உள்ள இடங்கள் அல்லது பௌத்தர்கள் முற்றிலும் இல்லாத இடங்களில் பௌத்த கோவில்கள் மற்றும் சிலைகளை நிறுவுவது இனங்களுக்கு இடையே மோதல்களை கிளறுவதற்கான கண்ணுக்கு புலப்படும் ஆதாரமாக மாறியுள்ளன. வட மாகாணசபை வடக்கில் புத்த கAnti-Muslimோவில்கள் அமைக்கப்படக் கூடாது என்கிற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. புத்த சிலைகளை நிறுவுவது மற்றும் கோவில்களை கட்டுவது எல்.ரீ.ரீ.ஈயின் தோல்விக்குப் பின்பு வடக்கில் சிங்கள ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு திட்டம் என அநேகமான தமிழர்கள் கருதுகிறார்கள். பௌத்தர்களே இல்லாத இடங்களில்; பௌத்த கோவில்கள் ஏன் கட்டப்பட்டு வருகின்றன என அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அவற்றில் சில ஆயுதப்படைகளினால் கட்டப்பட்டுள்ளன. எனினும் பௌத்த குழுக்கள் மட்டும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. வடக்கிலுள்ள கிறீஸ்தவர்கள், இந்துக்களும் இதே போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான இந்துக் கோவில்கள் புலம் பெயர்ந்தவர்களின் பணத்தைப் பயன்படுத்தி அரச மற்றும் தனியார் காணிகளில் அத்துமீறி அமைக்கப்பட்டு வருகின்றன என புகார் தெரிவிக்கிறார்கள்.

தேர்தல் நடவடிக்கை மூலம் முந்தைய ஆட்சியை இடம்மாற்றி இரண்டு வருடங்கள் கடந்த பிறகு சமூகங்களுக்கு இடையேயான முறுகல் நிலையின் பொது வெளிப்பாடும் ஊடகங்கள் அதற்கு வழங்கும் பிரபலமும் அதிகரித்து வருகின்றன. நாட்டில் நிலவும் அமைதியை குலைத்து இன – மத தேசியவாதத்தை முன்னுக்கு கொண்டு வரும் முயற்சிக்குப் பின்னால் அரசியல் சூழ்ச்சி நடவடிக்கைகள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மத குருமார்  ஏனைய  இன மற்றும் மத குழுக்களை மோசமாகத் தாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது பற்றிய காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது. மிகவும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் மதங்களுக்கு இடையேயான மோதல்கள் நடந்திருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளன. மத குருமார் மத மாற்றம் செய்வது, புராதன இடங்களை அழிப்பது அல்லது அவர்கள் குறைவான எண்ணிக்கையாக உள்ள இடங்களில் வழிபாட்டுத் தலங்களை அமைப்பது போன்ற விரிவாக்கும் திட்டங்களில் ஈடுபடுவது பற்றிய அநேக சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக மதங்களுக்கு இடையேயான பதற்றம் ஏற்படுவதற்கான முக்கிய காரணகர்த்தாக்கள், மதத்தின் பெயரால் தங்களை குழுக்களாக அமைத்துக்கொண்டு தொடர்ச்சியாக வெறுப்பு பேச்சுக்களைப் பயன்படுத்தி ஏனைய மதக்குழுக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள்தான். மிகவும் வெளிப்படையாக தேசியவாத பௌத்த குழுக்கள் இது சம்பந்தமாக முஸ்லிம் சமூகத்தினரை இலக்கு வைக்கிறார்கள். இன தேசியவாத அமைப்புகள் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளதுடன் உள்ளுர் மட்டத்தில் ஏனைய சமூகத்தினரை மிரட்டியும் வருகின்றன. முஸ்லிம் சனத்தொகையின் விரிவாக்கம், அதன் வெளிப்படையான பொருளாதார அதிகரிப்பு, சர்வதேச இஸ்லாமிய போராளிக் குழுக்களுடன் தொடர்பிருப்பதாகச் சொல்லப்படுவது மற்றும் ஹலால் போன்ற மத நடவடிக்கைகள் என்பன அவர்கள் பிரச்சாரத்தில் பிரதான கவனம் செலுத்தப்படும் விடயங்களாகும். இந்த நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தினரிடையே குறிப்பாக அவர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில், அதாவது நாடு முழுவதிலும் தொடர்ந்து நீடிக்கும் ஒரு கவலையையும் மற்றும் ஒரு பாதுகாப்பற்ற உணர்வையும் உருவாக்கியுள்ளது.

சமூக சகிப்புத்தன்மை

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இந்த வெறுப்பு பேச்சு சம்பவங்கள் மற்றும் வன்முறைகள் போன்றவை அரசாங்கத்தால் அலட்சியப் படுத்தப்பட்டன. மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரது மத்தியில், முந்திய அரசாங்கத்தின் ஒரு பிரிவினர்கூட இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறைமுகமான முறையில் ஆதரவு வழங்கியதாக பரவலான நம்பிக்கை நிலவியது. மறு பக்கத்தில் தற்போதைய அரசாங்கத் தலைவர்கள் இனங்களிடையேயும் மற்றும் மதங்களிடையேயுமான நல்லிணக்கத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவை வழங்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் இந்த சம்பவங்கள் நிறுத்தப்பட்டு சட்டம் நிலவவேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்கள். ஜனாதிபதியின் அறிவுறுத்தல் என்னவென்றால் சட்டத்தை மீறுபவர்கள் எவராயினும் அவர்கள் சட்ட அமலாக்கல் முகவர்களால் கையாளப்பட வேண்டும்,காவல்துறையினர் 2014 அழுத்கம முஸ்லிம் விரோத கலவரத்தின்போது அதை தடுக்காது வெறுமே பார்த்து நின்றது போலில்லாமல் துணிச்சலுடன் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எMonks abuseன்பதாகும்.

அரசாங்கத்தின் கொள்கை, சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல, ஆனால் சமூகங்களுக்கு இடையேயான உறவுகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது, அதன் விளைவாக இன மோதல்களுக்கு ஆதரவான வெகுஜன உணர்வு நாட்டின் எந்தப்பகுதியிலும் வெளிப்படையாகத் தோன்றவில்லை. தேசிய சமாதானப் பேரவை சமூக மட்டத்தில் சமயக்கூட்டங்களை நடத்தி வருகின்றது. இந்த மாத முற்பகுதியில் திருகோணமலையில் ஒரு ஒன்றுகூடல் நடைபெற்றது, அதில் அனைத்து மதங்களின் அங்கத்தவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டார்கள். தோன்றியுள்ள இன முறுகல் நிலைகளுக்கு மாறாக அங்கு நல்லெண்ணத்துக்கான பெரிய நம்பிக்கை வெளிப்பட்டது. இன ரீதியான ஒற்றுமை மேற்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள உள்ள காவல்துறை அதிகாரி, வெறுப்புச் செய்திகள் அடங்கிய பிரசுரங்களை சில இளைஞர்கள் ஒட்டிக்கொண்டு சென்றார்கள். ஆனால் அவர்கள் அந்த பிரசுரங்களை ஒட்டியதைத் தவிர அதிகமாக வேறு எதுவும் செய்யவில்லை, மற்றும் பொதுமக்கள் அவர்களுக்கு ஆதரவு வழங்கவில்லை, எனத் தெரிவித்தார்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் சாதாரணமாக பொதுமக்கள் மட்டத்தில் சிறிதளவோ அல்லது தனிப்பட்ட விரோதங்களோ எதுவும் கிடையாது என்பதையே. இதற்கு மாறாக சமூக உறவுகள் மற்றும் கலாச்சார ஒற்றுமைகள் மக்களை ஒருவர் பக்கத்தில் மற்றவர் அமர்ந்து இனங்களுக்கு மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தின் பெயரால் எற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் கலந்து கொள்ள உதவுகிறது.

மன்னர்கள் காலந்தொட்டு உள்ள பதிவுகளின்படி கடந்த கால மரபுகளின் வழி தோன்றியுள்ள இனங்களுக்கு மற்றும் மதங்களுக்கு இடையேயான சகிப்புத்தன்மை தொடர்ந்து சமூக மற்றும் தனிப்பட்ட மட்டத்தில் நிலவிவருவது ஸ்ரீலங்காவின் அதிர்ஷ்டமே. மறுபுறத்தில் வெளிப்படையாக கிளம்பும் ஆக்கிரமிப்புகள் மற்றும் சகிப்பின்மை என்பன அரசியல் ரீதியாக உருவாக்கப் பட்டவைகள். அத்தகைய அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடுகள் இடம்பெறும்போது அவை அதிகம்  வெளிப்படையாகத் தெரியும், அத்துடன் அவற்றுக்கு உடனடி ஊடக கவனமும் வழங்கப்படும். இது நெருக்கடியான ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. ஆனால் மத வைராக்கியம் மற்றும் மத ஆதிக்க நோக்கங்கள் என்பனவற்றை காரணமாகக் கொண்டு ஏனைய மதங்களை தாக்குவதற்கு வழி தேடுபவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. ஆகவே அப்படியான போராட்டக்காரர்களை சட்ட அமலாக்க முகவர்கள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.

சமூக பதற்றங்கள்

எனினும் அரசியல் ரீதியான மதங்களுக்கு இடையேயான பதற்றத்துக்கு மாறாக வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் வெவ்வேறு இனச் சமூகங்கள் இடையே சமூக மட்டத்தில் தோன்றியுள்ள ஒரு அளவிலான பதற்றம் அவர்கள் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவில் மதங்களுக்கு இடையே நடைபெற்ற ஒரு கூட்டம், காணி தொடர்பாக நிலவும் முரண்பட்ட கருத்துக்களை விபரிக்கும் ஒரு மன்றமாக மாறியது. அதில் பங்கு பற்றிய ஒரு முஸ்லிம் விபரிக்கையில், 1990ல் எல்.ரீ.ரீ.ஈ வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியபோது, சுமார் 1500 முஸ்லிம் குடும்பங்கள் முல்லைத்தீவை விட்டு வெளியேறின, ஆனால் இப்போது 26 வருடங்களுக்குப் பின்னர், அவர்களது குடும்பங்களின் சனத்தொகையில் இயற்கையாகவே ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக சுமார் 4500 குடும்பங்கள் அங்கு திரும்பி வநதுள்ளன. இந்த மேலதிக குடும்பங்களுக்கு காணிகளைப் பெற்று வழங்குவது அங்கு வாழும் தமிழ் சமூகத்தினர் மற்றும் அந்தப் பகுதியில் பணியாற்றும் அரசாங்க நிருவாகத்தினரது எதிர்ப்பு காரணமாக கடினமாக உள்ளது எனத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இது போன்ற ஒரு காணிப் பிரச்சினையில் அங்குள்ள பௌத்த பிக்கு ஒருவர் அரசாங்க ஊழியருக்கு எதிராக சரமாரியாக வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியுள்ளது. அந்த பிக்கு கோபமடைந்ததுக்கு காரணம் அவர் சொல்வதின்படி, சிங்களவர்கள் அந்த காணிகளுக்கு உரிமை கோரியிருந்தபோதும் அவர்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் மறுக்கப்பட்டதுதான் என்று. மறுபுறத்தில் அந்தப் பகுதியில் உள்ள தமிழர்கள் தாங்கள்தான் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாக நினைக்கிறார்கள், மற்றும் இப்போது கிழக்கு மாகாணசபை ஒரு முஸ்லிம் முதலமைச்சரைக் கொண்டுள்ளது. அவர்கள் சொல்வதின்படி பெரும்பான்மையான மாகாணசபை நியமனங்கள் தமிழ் பாடசாலைகளுக்கான பாதுகாப்பு ஊழியர் நியமனங்கள் உட்பட அனைத்தும் முஸ்லிம்களுக்கே வழங்கப் படுகிறதாம். அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுவது கிழக்கிலுள்ள முஸ்லிம் நகரங்கள் செழிப்பில் திளைப்பதாகவும் அவற்றின் அருகிலுள்ள தமிழ் நகரங்கள் ஒப்பீட்டளவில் வறுமையில் வாடுகிறது என்று.

சமூகங்களுக்க இடையில் அரசியல் அவநம்பிக்கை மற்றும் மோதல் வரலாறுகள் உள்ள நிலமையில் அரசாங்க மற்றும் மாகாணசபை அதிகாரிகள்  நியாயமான முறையில் மற்றும்  அந்த முறையானது இனங்களுக்கு இடையில் மேலும் மோதல்களை வளர்க்காத வகையில் முடிவுகளை எடுக்கவேண்டும். அரசியல்வாதிகள்; அந்த பிராந்தியத்தில் பெரும்பான்மையாகவுள்ள தங்கள் சொந்த சமூகத்துக்கு  சாதகமான முறையில் பேரினவாத மனப்போக்கினைப் பயன்படுத்துவது மோதல் உணர்திறனுடையதோ அல்லது ஏற்றுக்கொள்ளத் தக்கதோ அல்ல. எடுக்கப்படும் முடிவுகள் அனைத்து சமூகங்களுக்கும் நியாயமானதா என்று பார்க்கவேண்டியது அவசியம். இதை நடைமுறைப் படுத்தாவிட்டால் இனங்களுக்கு இடையில் மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை அணுகுவது கடினம், மற்றும் நிகழ்காலத்தில் அடையும் வெற்றிகள் எதிர்காலத்தில் உருவாகும் புதிய மோதல்களால் விரயமாகிப் போய்விடும். சிவில் சமூகங்களின் பங்கு, சமூகத்தினரோடு உரையாடுவதின் மூலம் இந்த மோதல்களை அடையாளம் கண்டு அவற்றை முடிவுகளை மேற்கொள்பவர்களிடம் எடுத்துச் செல்ல வழி காணவேண்டும், முடிவுகளை மேற்கொள்பவர்கள் ஒவ்வொரு சமூகத்தின் கவலைகளையும் கருத்தில் கொண்டு ஒரு மோதல் - உணர்திறன் முறையில் நியாயப்படி முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 

Loading...