Monday, 19 December 2016

உலகை அச்சுறுத்தும் - உருவ மாற்றம்


                                                                ....கோவை நந்தன்

ஏகாதிபதியங்களின் தலைமையகம் எனப்படும் வெள்ளை மாளிகைக்குள் இருந்துRonald trumphகொண்டு அடுத்தபல  வருடத்திற்கு உலகை ஆட்டிப்படைக்க தயாராகிறார்  அரசியலில்  முன் அனுபவம்  எதுவும் அற்ற டொனால்ட்  டிரம்ப் என்னும் ஒரு வணிக விற்பன்னர். இன்றைய  உலகின்  பேசு பொருள் மட்டுமல்ல பல நாடுகளையும், உலகின் அதி பெரும் பான்மையானவர்களான சமாதான விரும்பிக்களையும் அச்சுறுத்திக் கொண்டிருப்பது இந்த வருகை மட்டுமே,.

அமெரிக்காவின் 46வீதமான மக்களினால் அந்த நாட்டின்  45ஆவது அதிபராக தெரிவாகி, வரும் ஜனவரி 20ம் திகதி (2017) பதவியேற்க  உள்ள இந்தப் பெருமகனின் தெரிவு கேட்டு ஆனந்தம் அடைந்தவர்களை விட அதிர்ச்சி அடைந்தவர்களே உலகில் அதிகம் எனலாம்.

இவரை விட 2.1%  வாக்குகள் கூடுதலாகப் பெற்ற, தேர்தலில் வெற்றி  பெறுவார்,பெறவேண்டும் என அதிகம் எதிர் பார்க்கப்பட்ட கிலாரி கிளின்டனின் தோல்விக்கு  காரணம் அமெரிக்க தேர்தல் முறைமை என்பதை விட அண்டம் அழிவதற்கான அடுத்த படிக்கல் என்றே சொல்ல வேண்டும்.டொனால்ட்  டிரம்ப்பின் வெற்றிக்கு அவரது உற்ற நண்பரான ரசிய அதிபர் விளாடிமிர் புட்டினும ரஸ்ய உளவுத் துறையும் கூட ஒரு கரணம் எனவும் சொல் லப்படுகிறது.


1946-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மிகப்பெரிய கோடீஸ்வர குடும்பம் ஒன்றின் வாரிசாகப் பிறந்த டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நுழையும் ,முதலாவது வயதில் மூத்தவர் என்கின்ற ஒற்றைப் பெருமையுடன் மட்டுமே அங்கே குடிபுக உள்ளார்.

ஒரு ஏகாதிபத்திய நாட்டில்,நாகரீகத்தில்,பண்பாட்டில்  உச்சமானவர்கள் எனப்படுபவர்கள் மத்தியில்  பணபலத்தையும்  வியாபார உத்திகளையும் மட்டும் முன்னிறுத்தி, உபயோகித்து ஒருவர் ஒரு உயர் பதவியை கைப்பற்றிவிட முடியும் என்பதற்கு இன்றய  உலகின் உதாரணம் டொனால்ட் டிரம்ப் என்றே சொல்லவேண்டும்.

இதுவரை அரசியலிலோ பொது வாழ்க்கையிலோ இல்லாத,இவை பற்றிய புரிதல் அதிகம் அற்ற ஒரு பச்சை வர்த்தகர், உலகின் அதிஉச்ச அரசியல் பதவியாக கருதப்படும் வெள்ளை மாளிகையின் வாடகையாளர்  ஆகிறார் என்றால் பணநாயகம்  தேர்தலில் எப்படி ஆளுமை செலுத்தியிருக்கிறது  என்பதை புரிந்து கொள்ள முடியும். விளம்பரப் பிரியரான  டொனால்ட் டிரம்பின் வெற்றிக்கு  அமெரிக்காவின் பல தொலைக் காட்சிகளும்  அவற்றில் அவர் நடாத்திய நிகழ்ச்சிகளும் கூட கை கொடுத்தன எனவும் சொல்லப்படுகின்றது.

அமெரிக்காவின் பொது வெளியல் பல விமர்சனங்களுக்கும், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளான ஒருவர் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதாக ஒரு வரலாறு இதுவரை இல்லை என்பதும் டொனால்ட் டிரம்ப் வகிக்க இருக்கும் முதலாவது அரசியல் பதவி இது என்பதும் குறிப்பிடத் தக்கது

இவர்   முக்கியமாக முன்நிறுத்தும் கட்டட விற்பனை வியாபாரம் (real estate) உட்பட இவரது பல வர்த்தக  நடவடிக்கைகள் முறையான சட்ட திட்டங்களுக்கு  மாறானவை என தேர்தல் போட்டியின்போது வெளியிடப்பட்ட தகவல்கள் தெரிவித்திருந்தன.இதுவரை 72 முறை அமெரிக்க நீதிமன்றங்களில் இவருக்கு எதிராக பல வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் கூடுதலானவை சமாதானம் பேசப்பட்டு, முடித்துக் கொள்வதுதான் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரும் கூட இவரது நிறுவனம் தொடர்பான வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகி,நாட்டின்  அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் அந்த நாட்டின் நீதிமன்றத்தில் ஆஜராகும் அதிசயத்துக்கும் டொனால்ட் டிரம்ப் முன்னுதாரணமாகியுள்ளார்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான டொனால்ட் டிரம்ப்  தனது 59-ஆவது வயதில் 35 வயதான யுகோஸ்லாவியப் பெண்மணி மெலானியா என்பவரை  மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டார். மோட்டார் வாகனத் தரகரான மெலானியாவின் தந்தை, ஸ்லோவேனியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 1996-இல் நியூயார்க்கிற்குக் குடியேறிய மெலானியா ,ஒரு விளம்பர மாடல் என்பதும், 2000ம் ஆண்டில் நியூயோர்க்கின் பல பத்திரிகைகளின் அட்டைகள்  இவரது  நிர்வாணப் படங்களை அலங்கரித்தன என்பதும் தேர்தலின் போது பேசப்பட்ட சுவாரசிய விடயங்கள். வெளிநாட்டில் பிறந்த, கம்யூனிச பின்னணியுள்ள, நிர்வாணமாகப் பத்திரிகைகளில் தென்பட்ட ஒருவர், வரும் ஜனவரி 20ம் திகதி  முதல்  அமெரிக்காவின் முதல் பெண்மணியாக உலகம் பூராகவும் வலம் வரப்போகிறார் என்பதிலும், டொனால்ட் டிரம்ப் புதுமையைச் செய்திருக்கிறார்.

நடுத்தர, அடித்தட்டு அமெரிக்கர்கள் மத்தியில் தற்போதைய பரக் ஒபாமா அரசுக்கு எதிராகப் பரவலாகக் காணப்படும் விரக்தி மனநிலையும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மீதான நம்பிக்கையின்மையுமே உலகமே விரும்பாத,எதிர்பார்க்காத டொனால்ட் டிரம்பின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. டொனால்ட் டிரம்புக்கு ஆதரவான  வாக்குகளில் கூடுதலானவை  தற்போதைய அமெரிக்க நிர்வாகத்திற்கு எதிராகத் தங்களது வெறுப்பையும் கோபத்தையும் காட்டியிருக்கின்றன என்பதுதான் நிஜம்.பொறுப்பான முக்கிய பதவியில் இருந்த ஹிலாரி, தனது அறக்கட்டளைக்கு நன்கொடை பெற்றது, ரகசியமான  மின்னஞ்சல் ஒன்றின் மூலம் தகவல் பரிமாற்றங்கள் நடத்தியது, இளைய தலைமுறை வாக்காளர்களைக் கவர முடியாமல் போனது ஆகியவையும் டொனால்ட் டிரம்புக்கு சாதகமாக மாறிவிட்டன எனலாம்.

மாநிலங்களின் வாக்குகளில் அதிகமாகப் பெறுபவரே தேர்ந்தெடுக்கப்படுவார்  என்கின்ற அமெரிக்க தேர்தல் முறைமையின் பிரகாரம்  மொத்த வாக்குகளில் ஹிலாரியைவிட இரண்டு லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்ற டொனால்ட் டிரம்ப்  அதிபராக தெரிவாகியிருகிறார். எதிர்பார்த்ததற்கும் அதிகமாகப் பெண்கள் டொனால்ட் டிரம்புக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, அடித்தட்டு மக்களும், உழைக்கும் வர்க்கத்தினரும் அவருக்கே  ஆதரவளித்திருக்கிறார்கள் என்பதனையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான டொனால்ட் டிரம்புக்கு அமெரிக்காவின் உழைக்கும் வர்க்கமும் இணைந்து வாக்களித்து அதிபராக்கி இருப்பது  ஒரு அதிசயமே. இந்த மக்கள் முதல் முறையாக எந்தவித நிர்வாக அனுபவமோ, அரசியல் பின்னணியோ இல்லாத வர்த்தக சிந்தனையுடன் மட்டுமே உள்ள ஒரு வியாபாரியிடம் நம்பிக்கை வைத்துத் தங்கள் எதிர்காலத்தை ஒப்படைத்திருக்கிறார்கள்.

அனைத்தையும் தாண்டி டிரம்பின் வெற்றியுடன், 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றிருபதும்  உலக நாடுகளால் குறிப்பாக என்னை வள நாடுகளால் அச்சத்துடன் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் கரறுப்பு ஜனாதிபதி என வர்ணிக்கப்பட்ட பரக் ஒபமாவின் கடந்த ஆட்சி காலத்தில் எதிர்பார்கப்பட்ட எதுவும் இடம் பெறாமை பெருத்த ஏமாற்றமாக பார்க்கப்பட்டாலும் டிரம்ப்பின் ஆட்சிக் காலம் பற்பல சிக்கல்களை ஏற்படுத்தும் எனவே எதிர்வு கூறப்படுகிறது. அரசியல் அனுபவமற்ற டொனால்ட்  தனது குடியரசுக் கட்சியையே அரவணைத்துச் செல்வாரா என்கின்ற  சந்தேகம் பல அமெரிக்க ஆய்வாளர்களாலேயே எழுப்பப்படும் நிலையில் உலகயே ஆட்டம் காண வைக்கும் அமெரிக்க உளவுத் துறைக்குள் என்னென்ன நடக்கப் போகிறதோ...? அமெரிக்காவின் இந்த உருவ மாற்றம் உலகை உருக்குலைக்குமா,,,? என்கின்ற சந்தேகம் அப்படியே இருந்து விட்டுப் போனால் மகிழ்ச்சியே.
 

Loading...