Thursday, 22 December 2016

கேவலம்கெட்ட அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் செய்ததுமில்லை, விமர்சனத்துக்கு அஞ்சியதுமில்லை.

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது

 

கேவலம்கெட்ட அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் செய்ததுமில்லை, வி மர்சனத்துக்கு அஞ்சியதுமில்லை.

கடந்த வாரம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் தொலைகாட்சி ஒன்றின் அதிர்வு நிகழ்ச்சியில் நேரடி கலந்துரையாடலில் பங்குபற்றி இருந்தார்.


அந்த கலந்துரையாடல் பற்றிய முன்னுக்கு பின் முரணான விமர்சனங்கள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை. தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளையும் வரி வரியாகவும், அணு அணுவாகவும் சிலர் ஆராய்ச்சி செய்து  வருகின்றனர்.


ரவுப் ஹக்கீம் அவர்கள் மனதில் நினைக்காத பல விடயங்களை ஆராய்ச்சியாளர்கள் காழ்ப்புணர்ச்சியுடனும், வெகுமதிகளை எதிர்பார்த்தும் கண்டுபிடித்துள்ளனர். தலைவருக்கு எதிராக கட்சிக்காரர்களை மூட்டி விடுவதாக எண்ணி முகநூல் வாயிலாக அறிவுடன் சம்மந்தமில்லாமல் உளறுகின்றார்கள்.

அந்தவகையில் இவர்களது கண்டுபிடிப்புத்தான் பிரதி அமைச்சர் ஹரீஸ் ஒன்றும் செய்யவில்லை என்றும், பொத்துவில் அமைப்பாளர் இயங்கவில்லை என்றும், அட்டாளைச்சேனைக்கு பாராளுமன்ற பதவி வழங்கப்பட மாட்டாது  என்றெல்லாம் தலைவர் கூறியதாக இவர்களையும், அட்டளைச்சேனை மக்களையும் தலைவருடன் மூட்டிவிடலாம் என்ற அதீத கற்பனையில் கதை பரப்பி வருகின்றார்கள். இவர்கள் என்ன நோக்கத்துக்காக இவ்வாறு கதை பரப்புகின்றார்கள் என்பதனை யாரும் அறியாமளல்ல.  


ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் ஒருபொழுதும் கேவலம்கெட்டதும், கீழ்த்தரமானதுமான அரசியல் செய்ததில்லை. தனது கட்சிக்காரர்களுக்கு எதிராக மக்கள் முன்பாக அவர்களது குறைபாடுகளை கூறுவதென்றால் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றது. 


தனக்கு இந்த பதவிதான் தரவேண்டும் என்றும், இவ்வளவு பணம் தர வேண்டும், தனது கடனை அடைக்க பணம் தர வேண்டும், தனக்கு வீடுகட்ட இடம் வாங்கித்தர வேண்டும், கொழும்பிலே வீடு வாங்கித்தர வேண்டும், தேர்தலில் போட்டியிடச்செய்து அதன் செலவுக்குரிய முழுவதுமான பணமும் தரவேண்டும், வாகனம் வாங்கித்தர வேண்டுமென்றெல்லாம் தலைவர் ஹக்கீமிடம் பலர் அழுத்தங்களை பிரயோகித்தார்கள்.  


அவ்வாறு சண்டைகள் செய்து தனது சுயநலத்துக்கான தனிப்பட்ட தேவைகள் தலைவரிடமிருந்து கிடைக்காதபோது கட்சியை விட்டு வெளியேறி தலைவருக்கு எதிராக இல்லாத பொல்லாத கதையெல்லாம் கூறி எத்தனையோ பேர்கள் வசைபாடினார்கள். ஆனால் இவ்வாறு வசைபாடிய பலரது அசிங்கங்கள் தன்னிடம் இருந்தும் அவைகளை ஒருபோதும் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் இதுவரையில் வெளியிட்டதில்லை.     

விடயம் அப்படி இருக்கும்போது தனது கட்சிக்காரர்களை மக்கள்முன்பாக தலைகுனிய வைக்கும் எந்த தேவைகளும் தலைவரிடமில்லை. கட்சிக்குள் இருந்துகொண்டு தலைவருக்கு எதிராக குழிபறிக்கின்றவர்கள் யாரென்று தெரிந்திருந்தும் அவர்கள் பற்றிய எந்தவொரு அதிருப்தியும் தலைவர் இதுவரையில் வெளிப்படுத்தியதுமில்லை.

அதிர்வு நிகழ்ச்சி தொகுப்பாளர் தன்னை ஒரு கதாநாயகனாக உயர்த்திக்கொள்ளும் பொருட்டு நினைத்தாவாரெல்லாம் தலைவரிடம் கேள்வி கேட்டு சங்கடப்படுத்தியுள்ளார். அந்த நிலைமையில் மிகவும் நுணுக்கமாக அத்தனை கேள்விகளுக்கும் புத்திசாலித்தனமான முறையில் தகுந்த பதிலை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வழங்கியிருந்தார். அவரது பதிலில் உள்ள ஆழமான விடயங்கள் புத்தியுள்ளவர்களுக்கு மட்டுமே விளங்கும். இதயத்தில் பொறாமை இருந்தால் அது அவர்களது அறிவுக்கண்ணை மறைத்துவிடும்.


எனவே நிகழ்ச்சியை பார்த்த கல்விமான்களும், அறிவு ஜீவிகளும், நடுநிலையாளர்களும் தலைவரது ஒவ்வொரு வார்த்தைகளையும் பாராட்டி புகழ்ந்து கருத்து தெரிவித்துள்ள அதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் மீதும், தலைவர் மீதும் காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களும், சில அரசியல்வாதிகளின் சலுகைகளில் மயங்கிக் கிடக்கின்றவர்களும் தலைவரது உரையை உண்மைக்கு புறம்பாக தூற்றுவதானது எதிர்பாராத விடயமல்ல.  

Loading...