Thursday, 22 December 2016

தெற்கில் எழுந்தால் வடக்கிலும் எழும்! இதுதான் இலங்கை.. விளையாட நினைக்க வேண்டாம்

இருபது இனங்களையும், நான்கு மதங்களையும், மூன்று மொழிகளையும் கொண்டதுதான் இலங்கை. இதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதை மறந்தால் ஒரே இலங்கை என்பதை மறந்துவிட வேண்டி வரும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிங்கள அரச ஊழியர்களுக்கான தமிழ் பேச்சு மொழி பயிற்சி வகுப்பு நிறைவு சான்றிதல் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட போததே இதை கூறியுள்ளார். தொடர்ந்து,

தெற்கிலே ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் என்று சொன்னால், அதற்கு பதிலடியாக வடக்கிலும் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் என்ற கோஷம் எழும். அதேபோல் வடக்கில் இந்த கோஷம் எழுந்தால், தெற்கிலும் இந்த கோஷம் எழும்.

எனவே இந்த நாட்டில் நிலவுகின்ற பன்மைத் தன்மையை புரிந்து ஏற்றுக்கொள்வதுதான், நாம் ஒரே நாட்டவராக வாழ எஞ்சியிருக்கும் ஒரேயொரு வழி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிங்களவர், ஈழத்தமிழர், முஸ்லிம்கள், மலையக தமிழர், மலாய், ஒல்லாந்து பறங்கியர், போர்த்துக்கல் பறங்கி, வேடர், பரதர், மலையாளிகள், கடல் வேடர், தெலுங்கர், இலங்கை சீனர், தாவூத் போரா, மேமன், கொழும்பு செட்டி, பார்சி, சிந்தி, ஆபிரிக்க வம்சாவளி கப்ரிஞா, கோஜா ஆகிய இருபது இனத்தவர்கள் இலங்கையில் வாழ்வதாக எனது அமைச்சில் பதிவாகியுள்ளது.

சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகள் ஆட்சி மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும், பெளத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம் ஆகிய நான்கு மதங்களும் இலங்கையில் நிலவுகின்றன.

இதுதான் இலங்கையின் யதார்த்தம். இதை மாற்ற முடியாது. உண்மையில் இந்த அடிப்படை உண்மைகள் இந்த நாட்டில் வாழும் நம்மில் பலருக்கே தெரியாது. அப்படியாயின் வெளிநாட்டவருக்கு இவை தெரியாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.

அடுத்த வருடம், ஒவ்வொரு இனத்தின் கலாச்சார வரலாற்று அடையாளங்களும் காட்சிப்படுத்தப்படுமுகமாக, எனது அமைச்சு நாடு முழுக்க நடத்த உள்ள இலங்கை பன்மைதன்மை ஊர்வல நிகழ்வில் இந்த உண்மைகளை நாம் வெளிப்படுத்துவோம்.

அதன்மூலம் இலங்கை என்றால் என்ன என்பதை முதலில் நம் நாட்டவரே தெரிந்துகொள்ள முடியும். பிறகு வெளிநாட்டவரும் அறிய முடியும்.

உலகத்துக்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரும், இலங்கை தமிழர்கள். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், உள்ளக ரீதியாக, ஈழத்தமிழர், மலையக தமிழர் என்ற அடையாளங்கள் இருக்கின்றன.

உலகத்துக்கு தமிழ் பேசும் மக்கள் என்ற அடையாளம் இருக்கின்றது. ஆனால், உள்ளக ரீதியாக தமிழர், முஸ்லிம் என்ற அடையாளங்கள் இருக்கின்றன. இந்த பரஸ்பர அடையாளங்களை அங்கீகரித்து அறிவுப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அதேவேளை ஒட்டுமொத்தமாக நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்துக்குள் வருகிறோம் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். இலங்கையர் எம் அடையாளம், பல இனங்கள் எம் சக்தி என்பது எம் பார்வையாக இருக்க வேண்டும்.

தமிழ் மொழி மட்டும் தெரிந்த ஒருவர் இலங்கையில் எந்த ஒரு பாகத்திலும் சென்று தனது தாய்மொழியில் கருமமாற்றிகொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும். அதேபோல் சிங்கள மொழி மட்டும் தெரிந்த ஒருவர் தனது தாய்மொழியில் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் எந்த ஒரு பாகத்துக்கும் சென்று தனது தாய்மொழியில் கருமமாற்றிகொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும்.

இதைப்பற்றி எழுதுவது, பேசுவதை போன்று செய்துகாட்டுவது இலேசான காரியமல்ல என்பது எனக்கு தெரியும். ஆனால், கஷ்டமான காரியங்களை செய்து பழக்கப்பட்ட எனக்கு இதை செய்து காட்ட முடியும் என நம்புவதாக அறிவித்துள்ளார்.

அடுத்த வருடம் எனது இந்த நோக்கத்துக்கு முக்கியமான வருடம். முதன்முதலாக இந்த மொழியுரிமையை உறுதிப்படுத்தும் பொறுப்பை, மூன்று மொழிகளையும் எழுத, படிக்க, வாசிக்க, புரிந்துக்கொள்ள கூடிய ஒரு அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இந்த மொழிப்பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால், அடுத்த கட்டத்துக்கு போக முடியாது.

ஒரே இரவில் அனைத்து மாற்றங்களையும் கொண்டு வந்துவிட முடியாது என்பது எனக்கு தெரியும். ஆகவே நான் கொஞ்சம் அவகாசம் கொடுத்துள்ளேன். அதனை புரிந்துகொண்டு அரசு ஊழியர்கள் மொழிப்பயிற்சி பெற வேண்டும்.

இந்த விடயத்தில் என்னுடன் விளையாட நினைக்க கூடாது. நான் இங்கே விளையாட வரவில்லை. அரசாங்கத்தின் மொழிக்கொள்கையை அறிந்து அதன்படி நடந்துக்கொள்ள வேண்டும்.

இங்கே எனது அமைச்சின் தேசிய மொழிக்கல்வி பயிற்சி நிறுவனம் இரத்தினபுரி மாவட்ட அரசு நிறுவன சிங்கள ஊழியர்களுக்கு பேச்சு தமிழ் மொழியை மட்டுமல்ல, தமிழ் கலாச்சார அடையாளங்களையும் கற்றுக்கொடுத்துள்ளது.

மேடையில் தமிழ் மொழியில் பேசி ஆடிப்பாடிய அரசு ஊழியர்களான சிங்களப்பெண்கள் அனைவரும் தமிழ் பெண்களை போலவே எனக்கு தோன்றினார்கள். பெருந்தொகையான அரசு ஊழியர்களுக்கு தமிழ் மொழிப்பயிற்சி சான்றிதல்களை இங்கே வழங்கினேன். இவை தொடர்பில் நான் அமைச்சர் என்ற முறையில் மகிழ்ச்சியடைகிறேன் என இதன்போது தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

Loading...