Saturday, 2 July 2016

இலங்கை மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் நியமனம்

இலங்கை மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் நியமனம்
இலங்கை மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் நியமனம்

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்படவுள்ளார்.
பிரதமர் உட்பட அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னரே இந்த நியமனத்தை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி எதிர்வரும் திங்கட்கிழமை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படுவார்.

1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் திகதி பிறந்த இந்திரஜித் குமாரசாமி, கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் இங்கிலாந்தின் ஹரோ கல்லூரி ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியை பயின்றதுடன், பிரித்தானியாவின் கேம்பிரிஜ் பல்கலைகழகத்தில் இளமானிப் பட்டத்தை முடித்துள்ளார்.
 
பின்னர் சசெக்ஸ் பல்கலைகழகத்தில் முதுகலைமானி பட்டத்தை பெற்ற இந்திரஜித் குமாரசாமி, 1973 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா மத்திய வங்கியில் இணைந்துள்ளார்.
 
அன்று முதல் இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி, புள்ளிவிபரவியல் மற்றும் வங்கி கண்காணிப்பு பிரிவின் உத்தியோகத்தராக 1989 ஆம் ஆண்டு வரை அவர் பணியாற்றியிருந்தார்.
 
1981 ஆம் ஆண்டு தொடக்கம் 1989 ஆம் ஆண்டு வரை  நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சிலும் இந்திரஜித் குமாரசாமி பணியாற்றியுள்ளார்.
 
இதன்பின்னர் 1990 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலகத்தில் அவர் பணியாற்றினார்.
 
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலகத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளராகவும், பொதுநலவாய செயலாளர் நாயக அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளராகவும் இந்திரஜித் குமாரசாமி செயற்பட்டிருந்தார்.

மீண்டும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட அவர், சமூக மாற்றத்திற்கான திட்டப் பிரிவின் இடைக்கால பணிப்பாளராக பணியாற்றியிருந்த நிலையிலேயே இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக   நியமிக்கப்பட்டிருக்கின்றார். 
Loading...