Tuesday, 28 June 2016

வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் வடக்கு நோக்கியே நகர வேண்டும்: சிறீதரன் எம்.பி


வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் வடக்கு நோக்கியே நகர வேண்டும்: சிறீதரன் எம்.பி inShare வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் வடக்கு நோக்கி நகர்ந்து மாங்குளம் அல்லது ஓமந்தைப் பகுதியிலேயே அமைக்கப்படவேண்டும். அதற்காக நாம் முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடமாகாணத்திற்கென அமைக்கப்படும் பொருளாதார மத்திய நிலையம் வடக்கு நோக்கியே நகர்த்தப்பட வேண்டும். அதுவே எமது இருப்பையும் தக்க வைக்க உதவும். இன்று தென் பகுதியில் தம்புள்ள பகுதியில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் காரணமாக எமது வடபகுதி வளங்கள் தென் பகுதி நோக்கி நகர்ந்து சென்றுள்ளது. எமது மக்கள் தம்புள்ளைக்குச் சென்று தமது உற்பத்திகளைச் சந்தைப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டது. இந்நிலையில், வடபகுதிக்கு ஒரு பொருளாதார மத்திய நிலையமொன்று அமைக்கப்படவுள்ள நிலையில், அது வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் மையப்படுத்தியதாக மாங்குளம் பகுதியிலேயே அமையப்பெறுவது சிறந்ததாகும். அதுவே வடக்கு- கிழக்கின் மையம். வடபகுதியின் ஐந்து மாவட்டங்களிலுமிருந்து எமது விவசாயிகள், உற்பத்தியாளர்கள், மீன்பிடிப்பாளர்கள், வர்த்தகர்கள் எனப்பலரும் வந்து செல்ல இலகுவான பகுதியகும். வடமாகாண சபையின் செயற்பாடுகள் கூட எதிர்காலத்தில் மாங்குளத்தை மையமாகக் கொண்டே அமையப்பெறவுள்ளது. முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் காலப்பகுதியில் கூட மாங்குளமே வடக்கு, கிழக்கின் மையமாக விளங்கியிருந்தது. வடக்கிற்கான பொருளாதார மையம் இது என்பதை எல்லோரும் கவனத்திற்கொள்ள வேண்டும். ஆனால், வவுனியா மக்கள் அதனை தமது பகுதிக்கு வரவேண்டுமென விரும்புவது தவறல்ல. அது தான் அவர்களது விருப்பமாக இருந்தால், இந்த மையத்தை வடக்கு நோக்கி நகர்த்தி ஓமந்தையில் அமைப்பது தான் சிறந்தது. அதன் மூலம் ஓமந்தைப் பகுதியை உப நகரமாக அபிவிருத்தியடையச் செய்ய முடியும். எமது நிலங்களையும் பாதுகாக்க அது உதவும். எமது எதிர்கால இருப்பையும், அபிவிருத்தியையும், மண்ணையும் பாதுகாக்கும் வகையில் அபிவிருத்திகள் அமைய வேண்டும். அதற்கேற்ப நாங்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும். வடக்கின் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் வடக்கு முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும். வடக்குக்கான திட்டத்தை அவரது விருப்பத்தின் படி அமைக்க வேண்டும். அதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே, வடக்கு மாகாண முதல்வருக்கு பொருளாதார மத்திய நிலைய விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கி, எமது மக்களுக்கான பொருளாதார வளத்தைப்பெற்று அபிவிருத்தி நோக்கி நகர அனைவரும் உதவ வேண்டுமெனத் தெரிவித்தார்.



Loading...