Sunday, 12 June 2016

சிறிலங்காவின் காலம் கடத்தலுக்கு தமிழர் தரப்பின் பலவீனங்கள் மிக இலகுவாக வழி சமைத்திருக்கிறது.

sampanthan and maiththiri


























வன்னியில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட 2009 மே மாதத்தின் பின் ஈழத்தமிழர்களுக்கு இருந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஐக்கிய நாடுகள் சபைதான். தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் மறுக்கப்பட்ட உரிமைகளுக்கும் ஐ.நா.மனித உரிமை பேரவையின் மூலம் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை கடந்த 7 வருடங்களாக காணப்பட்டது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் ஐ.நா.மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகளை கையாள்வது பெரும் சவாலாக காணப்பட்டது.
வருடத்தில் மூன்று தடவைகள் ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடர்கள் நடைபெற்று வருகின்றன.

மகிந்த ராசபக்சவின் ஆட்சிக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஐ.நா.மனித உரிமை பேரவையின் ஊடாகவே அழுத்தங்களை பிரயோகித்து வந்தன. ஓவ்வொரு முறையும் வெளிவிவகார அமைச்சர், மனித உரிமைகள் அமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் என சராசரியாக ஒவ்வொரு முறையும் 50க்கு மேற்பட்டவர்கள் முகாமிட்டு தமக்கெதிராக கொண்டுவரப்படும் பிரேரணையை முறியடிப்பதற்கு பெரும் பிராயத்தனங்களை மேற்கொண்டு வந்தனர்.

ஆனாலும் 2013ஆம் ஆண்டிலும் 2014ஆம் ஆண்டிலும் இறுதிக்கட்ட போரில் நடந்தவைகளுக்கு சிறிலங்கா பொறுப்பு கூற வேண்டும் என்றும் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அறிக்கை ஒன்றை சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களை இலங்கையும் இலங்கைக்கு ஆதரவான நாடுகளும் எதிர்த்தன.

மகிந்த அரசு மீது ஒருவகையான அழுத்தங்களை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் மேற்கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.
கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின் புதிய அரசு மீது மேற்குலக நாடுகள் மேற்கொண்டு வந்த அழுத்தம் தளர்த்தப்பட்டது போலவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலும் சிறிலங்கா மீதான மென்போக்கையே அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது என்றால் மகிந்த அரசு பெரும் பதட்டத்துடன் இருந்த காலங்கள் மாறி இப்போது மனித உரிமை பேரவையையும் மேற்குலக நாடுகளையும் இலகுவாக கையாளலாம் என்ற எண்ணம் மைத்திரி தலைமையிலான புதிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கு யார் காரணம்? புதிய அரசின் இராஜதந்திர வெற்றியா? தமிழ் மக்களின் தலைமை என சொல்லப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலவீனமா? அல்லது புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் அமைப்புக்களுக்கிடையே உள்ள பிளவுகளும் ஒற்றுமையீனங்களுமா?

ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் நியமித்த விசாரணையாளர்களின் 260 பக்கங்களை கொண்ட அறிக்கையை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அல் ஹசன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற 30ஆவது கூட்டத்தொடரில் ஆரம்பத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கையில் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றது என்பதற்கு மிகத்தெளிவான சாட்சியங்கள் இருப்பதாகவும் சிறிலங்கா அரச படைகளும் விடுதலைப்புலிகளும் போர்க்குற்ற மீறல்களில் ஈடுபட்டனர் என்றும் யுத்த சூனியப்பிரதேசங்களில் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்;டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் செப்டம்பர் மாத கூட்டத்தொடரின் இறுதி நாளில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. வழமையாக இலங்கை தொடர்பான பிரேரணையை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் முன்வைத்தால் அதனை எதிர்க்கும் சிறிலங்கா வழமைக்கு மாறாக இந்த பிரேரணைக்கு இணைஅனுசரணை வழங்கியிருந்தது.

இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்பு கூறலையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்த பிரேரணையில் 20 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த பிரிந்துரைகளை நிறைவேற்றுவேன் என சிறிலங்கா தரப்பு உறுதி அளித்து அப்பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது.

இந்த பிரேரணையில் பின்வரும் விடயங்கள் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

• பொதுநலவாய மற்றும் சர்வதேச நீதிபதிகள் விசாரணையாளர்கள் சட்டத்தரணிகளுடன் உள்நாட்டு நீதித்துறை கட்டமைப்புடன் கூடிய விசாரணை பொறிமுறையை முன்னெடுக்கவேண்டும்.
• சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக தண்டனை விதிக்க உள்நாட்டு சட்டங்களை திருத்தி அமைக்க வேண்டும். குறிப்பாக உள்நாட்டு சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
• அரசாங்கப் படையினரால் பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கன. குறிப்பாக பொதுமக்களின் விவகாரங்களிலும் பொதுநிர்வாக விடயங்களிலும் இராணுவத்தின் தலையீடு முழுமையான அகற்றிக் கொள்ளப்பட வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும்

• ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிறுபான்மை மத இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பள்ளிவாசல்கள், கோயில்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டியதுடன் மீளவும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்க வேண்டும்.

• மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட அனைத்து ஆவணங்கள் அறிக்கைகளையும் பேணிப் பாதுகாக்கும் பொறிமுறைமை ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும். தனியார் அல்லது பொது நிறுவனங்களினால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் அனைத்து பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

• அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கக் கூடிய வகையில் அதிகாரப் பகிர்வு திட்டமொன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். அவ்வாறு அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பதன் மூலமே நாட்டின் அனைத்து சனத்தொகையினரும் மனித உரிமைகளை அனுபவிக்க முடியும். 13ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உள்ளிட்ட அனைத்து மாகாண சபைகளுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

• ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அலுவலகம், இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றதா என்பது மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

• கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 30ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தின் முன்னேற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32 அமர்வுகளின் போது வாய்மொழி மூல அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும். பரிந்துரைகள் எவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து 34 கூட்டத் தொடரில் முழு அளவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்

• ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் விசேட அறிக்கையாளர்கள் ஆணையாளர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கவேண்டும்.
இதன் படி நாளை திங்கட்கிழமை 13ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகும் 32ஆவது ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளரால் வாய் மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த வாய்மூல அறிக்கையை எதிர்வரும் 29ஆம் திகதி ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் சபையில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 9 மாதங்கள் கடந்த நிலையில் 20 பரிந்துரைகளில் சிறிலங்கா அரச தரப்பில் செய்யப்பட வேண்டிய விடயங்கள் எவையும் தொடக்கநிலையில் கூட இல்லை என்பதே யதார்த்தமாகும்.
இத்தீர்மானத்தின் முக்கிய பரிந்துரைகளில் ஒன்றாக பொதுநலவாய மற்றும் சர்வதேச நீதிபதிகள் விசாரணையாளர்கள் சட்டத்தரணிகளுடன் உள்நாட்டு நீதித்துறை கட்டமைப்புடன் கூடிய விசாரணை பொறிமுறையை முன்னெடுக்க வேண்டும் என்ற விடயம் பார்க்கப்படுகிறது.

மனித உரிமை சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அதனை ஏற்று இணை அனுசரணை வழங்கிய சிறிலங்கா அரசாங்கம் பின்னர் கலப்பு நீதிமன்றம் என்பதை நிராகரித்து உள்நாட்டு நீதிபதிகளை கொண்ட பொறிமுறையின் கீழ்தான் விசாரணை நடைபெறும் என அறிவித்திருக்கிறது. ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உள்நாட்டு பொறிமுறையின் கீழ்தான் விசாரணை என்பதை அறிவித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த செயிட் அல் ஹசைன் கடந்த மாதம் 10ஆம் திகதி வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் வருடாந்த அறிக்கையில் இலங்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த அறிக்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பில் முடிவெடுப்பது இலங்கையினுடைய தீர்மானமாகும் என்று அந்த அறிக்கையில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் கலப்பு நீதிமன்றம் என்ற விடயம் நிராகரிக்கப்பட்டு உள்நாட்டு பொறிமுறையின் கீழ்தான் விசாரணை என்ற முடிவே இறுதியாகியிருக்கிறது.
ஆனாலும் அந்த உள்ளக விசாரணை பொறிமுறையின் இறுதி வடிவம் பற்றிய விபரத்தை கூட நாளை ஆரம்பமாக உள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் முன்வைக்க முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது.

மாறாக 32 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் கலந்துகொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளக விசாரணை பொறிமுறையை நிறுவுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாகவே விளக்கமளிப்பார்கள் என்றும் இதற்கு தமக்கு கால அவகாசம் வேண்டும் என கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர் 29ஆம் திகதி வாய்மொழி மூல அறிக்கையை சபையில் சமர்ப்பித்த பின்னர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பதிலளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். அப்போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளக விசாரணை பொறிமுறையின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பார் என எதிர்பாரக்கப்படுகிறது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 9 மாதங்கள் கடந்த நிலையில் மிக அண்மையில் தான் நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணி ஒன்றையும் காணாமல் போனோர் தொடர்பாக செயலகம் ஒன்றையும் அமைக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

11பேர் கொண்ட விசேட செயலணியின் தலைவராக மனோரி முத்தெட்டுவேகமவும் செயலாளராக பாக்கியசோதி சரவணமுத்துவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இச்செயலணியின் ஏனைய அங்கத்தவர்களாக காமினி வியங்கொட, சித்திரலேகா மௌனகுரு, விசாகா தர்மதாச, தர்மசிறி பண்டாரநாயக்க, பர்ஸானா ஹனிபா, சாந்தாதேவி அபிமனசிங்கம், விராக் ரஹீம், தயா சோமசுந்தரம், கமீலா சமரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செயலணி பாதிக்கப்பட்டோர் பற்றி ஆராய்ந்து மூன்று மாதங்களில் அரசாங்கத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் என இச்செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் வரலாற்றில் இவ்வாறான செயலணிகள், ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், விசாரணைகள் என்பன புதிய ஒன்றல்ல, காலத்திற்கு காலம் செயலணிகள் ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதும், அவர்கள் தயாரித்து அரசுக்கு வழங்கும் அறிக்கைகள் கிடப்பில் போடப்படுவதுமே வழமையானதாகும். இலங்கையின் வரலாற்றில் பிரமதாஸ காலம் தொடக்கம் இன்றுவரை பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் எதுவும் வெளிப்படுத்தப்பட்டதும் கிடையாது. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதும் கிடையாது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே ஐ.நா.மனித உரிமை பேரவையையும் சர்வதேசத்தையும் சமாளிப்பதற்காக அவசரஅவசரமாகவே நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணியும் காணாமல் போனோர் தொடர்பான செயலகமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அரசாங்கம் தாமதம் காட்டி வரும் அதேசமகாலத்தில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக தீவிரமான பிரசாரங்களில் ஈடுபட்டிருக்கிறது.

ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை பேரவை அதிகாரிகள் இராஜதந்திரிகளை சிறிலங்காவின் அமைச்சர்கள் அதிகாரிகள் மாதாந்தம் சந்தித்து வருகின்றனர். இந்த சந்திப்புக்களின் பிரதிபலிப்பாக அண்மைக்காலத்தில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளரும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளும் சிறிலங்கா அரசுக்கு சார்பான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் தமிழர் தரப்பில் ஜெனிவாவில் எந்த செயற்பாட்டையும் காணமுடியவில்லை. இந்த ஆண்டுக்குள் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிமன்றம் அமைக்கப்படும் என்று மேடைப்பேச்சுக்களுடன் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நின்று கொள்கின்றனர்.

ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதை இலங்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராஜதந்திரிகளுக்கு எடுத்து கூற தவறிவிட்டனர்.

சிறிலங்கா தரப்பு ஐ.நா.மனித உரிமை ஆணையாளரையும் ஜெனிவாவில் இருக்கும் இராஜதந்திரிகளையும் அடிக்கடி சந்திப்பதை போல பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த செப்டம்பர் மாதத்தின் பின் ஜெனிவா பக்கம் வரவே இல்லை. இந்நிலையில் தாமும் ஐ.நா.மனித உரிமை ஆணையாளரை சந்திக்கப் போவதாக அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. ஆனால் நாளை கூட்டத்தொடர் ஆரம்பமாக உள்ளது. இதுவரை அப்படியான சந்திப்பு நடந்ததாக தகவல் இல்லை.

அதேபோல புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர் அமைப்புக்களும் பலமான நிலையில் இல்லை. அவர்களை பலமான சக்திகளாக சர்வதேச நாடுகளும் பார்க்கவில்லை. தங்களுக்குள் முட்டி மோதிக்கொள்வதிலேயே அவர்கள் காலம் கழிகிறது.

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பலவீனமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலட்சியப்போக்குகளும் சிறிலங்கா அரசுக்கு மிக சாதகமாகவே அமைந்துள்ளது. கடந்த காலங்களில் ஐ.நா.மனித உரிமை பேரவையை கையாள்வதில் எதிர்கொண்ட நெருக்கடிகள் அனைத்தும் நீங்கி தாம் மிக இலகுவாக வெற்றி கொள்வோம் என்ற இறுமாப்புடனேயே சிறிலங்கா அரசதரப்பு பிரதிநிதிகள் ஜெனிவாவில் கால் வைக்க உள்ளனர்.
நல்லிணக்கம், பொறுப்பு கூறல், மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு, இவை அனைத்திற்கும் கால அவகாசம் தேவை என்ற சிறிலங்காவின் காலம் கடத்தலுக்கு தமிழர் தரப்பின் பலவீனங்கள் மிக இலகுவாக வழி சமைத்திருக்கிறது.
இரா.துரைரத்தினம்
Loading...