Thursday, 30 June 2016

வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றும் நடவடிக்கை அடுத்த ஆண்டில் பூர்த்தியாகும் : ஜெனிவாவில் மங்கள

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தை அகற்றும் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் பூர்த்தியாகும். நல்லாட்சி அமைந்து ஒன்றரை வருட குறுகிய காலப்பகுதியில் பல இலக்குகளை அடைந்துள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
mangala samaraweera

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் ஜெனிவா கட்டடத்தொகுதியில்  இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் இடம்பெற்றதன் பின்னர் இடம்பெறும் முதலாவது கூட்டத்தொடர் இதுவாகும்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம்  முதலாம் திகதி ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக  இலங்கை அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்பதை ஜெனிவாவில் தெரிவிக்கவுள்ளோம்.

உங்களில் பலருக்கு கடந்த கால அரசாங்கத்துடன் வெவ்வேறான அனுபவங்கள் இருந்திருக்கும்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற தேர்தல் காலத்தில் பல இக்கட்டான சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் மனித உரிமைகள் மற்றும் நீதியை நிலைநாட்டுவது தொடர்பில் எமது பிரசாரங்களை முன்னெடுத்தோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தை அகற்றும் பணிகள் அடுத்த ஆண்டில் முழுமையாக பூர்த்தியாக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு கால அவகாசத்தை வழங்கவும்.

குறிப்பாக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர், இலங்கை உலக நாடுகளிலிருந்து சுயமாகவே விலகியிருந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

புலம்பெயர் சமூகம் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாகவே புலம்பெயர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

இக்காலப் பகுதியில் எமக்கு பல ஒத்துழைப்பு வழங்கி அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஏற்படுத்தினோம்.

இதன் பின்னர் நாட்டில் ஜனநாயகம், சட்டம் மற்றும் ஒழுங்குகள்  முன்னெடுக்கப்பட்டதோடு சர்வதேசத்துடன் இணைந்து பல மனித உரிமை தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.

மேலும் தேர்தலில் வென்றதன் பின்னர் இலங்கையின் சுயாதீனத் தன்மையை பாதுகாக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தோம். இதற்கான நடவடிக்கைகளையும் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தோம்.

இதன்பின்னர் ஐக்கிய நாடுகள் மற்றும் உலக நாடுகளின் உயர்ஸ்தானிகர்களுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டோம்.

இதன் ஒரு கட்டமாக இவ்வருடத்தின் ஆரம்பத்தில் பல முக்கியஸ்தர்கள் நாட்டிற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நாம் கடந்த ஒன்றரை வருடத்தில் நாம் அடைந்த முக்கிய இலக்குகளில் சிலவற்றை சாரம்சமாக இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

19 ஆவது திருத்தச்சட்டம் மூலம் ஆணைக்குழு உருவாக்கப்பட்டு சில சரத்துக்களில் திருத்தம் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

அதில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையிலுள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர்  தகவலறியும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

வீசா நடைமுறையில் தளர்வுகள் முன்னெடுக்கப்பட்டு இலங்கையர்கள் சுதந்திரமாக நாட்டுக்கு வந்து செல்லவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

காணாமல்போனோருக்கான நிரந்தர அலுவலகம் திறப்பதற்கான நடவடிக்கைளை எடுத்து வருகின்றோம்.

அதனை நிறுவுவதற்கான ஒழுங்குப்பத்திரம் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு பாராளுமன்றத்தால் அடுத்த மாதம் அனுமதி வழங்கப்படவுள்ளது.

போரின் போது காணாமல்போனோர், இறந்தவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கு எதிர்வரும் மாதம் பாராளுமன்ற அங்கீகாரம் கிடைக்கவுள்ளது.

இலங்கையில் உருவாகவுள்ள புதிய அரசியலமைப்பு இலங்கை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். இலங்கை பல்லின சமூகத்தைக் கொண்ட நாடாகும். புதிதாக அமையவுள்ள அரசியலமைப்பில் சகல இனத்தினருடைய கருத்துக்களும் உள்ளவாங்கப்பட்டள்ளது.

ஆனால் 72 மற்றும் 78 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புகளில் இவ்வாறான விடயம் இருக்கவில்லை.

 மேலும் பொதுமக்கள் தொடர்பான விடயங்களில் அரசாங்கம் சில விடயங்களை மெதுவாக முன்னெடுத்து வருகின்றது.  இதனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் செயற்படுவோம்.

எமது பயணத்தை முன்னெடுக்க அனைவரும் எம்முடன் இணையவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் .
Loading...