Wednesday, 30 March 2016

எட்டாக்கனியாக மாறிவரும் அம்பாறையின் அபிவிருத்தி

எட்டாக்கனியாக மாறிவரும் அம்பாறையின்  அபிவிருத்தியும் உரிமைகளும் என ஒரே சொல்லில்  சொல்லிவிட்டுப் போனாலும் அதன் பின்னால் இருக்கும் துன்ப துயரங்களை இந்த வங்கரோத்து அரசியல்வாதிகள்  அறிவார்களா என்றால்  இல்லை என்றே பதில் வரும். 

ஒவ்வொரு தேர்தலின் போதும் பிஸ்மி சொல்லி ஆரம்பித்துவிட்டு செய்த்தானின் வேத வசனமும் வீர முழக்கமும் இட்டு அம்பாறை  மண்ணின் வாக்குகளை அபகரித்துவிட்டு கண்டியிலும்,கொழும்பிலும்  படுத்துறங்கும் திருடர்களுக்கு மக்களின் பிரச்சினைகளை பார்பதற்க்கு நேரமிருக்காது போனதுதான் இங்கு ஆச்சரியம். சொந்த முகவரியில்லாது மறைந்த தலைவரின் புகைப்படத்துடனும் அவரது கவிதைகளினதும் உதவியுடன் எங்கள் மண்ணில் உள்ள கலாநிதிகள் தொடக்கம் பாமரன் வரை  காலில் விழுந்து வாக்கு பிச்சைஎடுத்துவிட்டு மக்களை திரும்பிக்கூட பார்க்க மறுக்கும் அரசியல் தலைமைகளுக்கு பாடம் புகட்டும் காலம் கனிந்து வருகிறது என்பதை எச்சரிக்கையாக இங்கு கூறி வைக்க விரும்புகிறேன். 

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கீழே தரப்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது யார் ?? 

01. சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு மக்கள் கொடுத்த உதவியினால் கட்டி முடிக்கப்பட்ட  வீட்டு திட்டங்களை  எப்போது ? யார் வழங்குவது ?? (முதிர்கன்னிகளின் சாபத்திலிருந்து தப்பி கொள்ளவாவது சாணக்கியம் செய்யுமா?)

02. சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை தருவதாக கூறி மக்களின் ஆணையை பெற்று பம்மாத்து அரசியல் செய்யும் நீங்கள் ஏன் சாய்ந்தமருதை கணக்கில் எடுப்பதை தவிர்த்து வருகிறீர்கள் (முதலமைச்சர் பதவி,மேயர் பதவி பறிப்பு,இப்படி பல.....) 

03. ஒலுவில்,மக்களின் காணிப் பிரச்சினைக்கு நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கை  என்ன? (போட்டியான கட்சித்தலைவர் வந்தால் நீங்களும் வந்து கண்காட்சி பாத்து விட்டு பந்தா காட்டிவிட்டு போனதா??) 

04. உங்களை நம்பி மண்ணில் இருந்த மன்னனை இழந்து நிற்க்கும் அக்கரைபற்றுக்கு செய்த கைமாறு என்ன? மக்கள் தலைவன் அதாவுல்லாஹ் கொண்டுவந்த சேவைகளையும்,நியமித்த உத்தியோகத்தர்களையும் இடம் மாற்றியதை தவிர......

05. நீங்களே சாரதியாகவும்,நடத்துனராகவும் இருக்கும் அம்பாறை மாவட்டம் குப்பைகளால் நிரம்பி வழிகிறது. அதிலும் கல்முனை படு மோசம் ... இதற்கான தீர்வுதான் என்ன? 

06.  உங்கள் கட்சிக்காக போஸ்டர் ஒட்டிவிட்டு பொலிஸும் , கோட்டுமாக அலைந்து விட்டு அரபு தேசம் சென்று சாறாக தனது இரத்தத்தை சிந்தி உழைத்து விட்டு தொழில்  இழந்து நாடு திரும்பும் உமது போராளிகளுக்கு நீங்கள் செய்யப்போகும் கைமாறு என்ன? 

இப்படி அடுக்கப்போனால் பட்டியல் நீண்டு கொண்டே போகுமே தவிர ஆனபலன் எதுவுமில்லை. ஆகவே சிந்தித்து செயலாற்ற வேண்டிய கடமைப்பாட்டில் இருக்கும் இளம் சமுதாய தோழர்களே !! புத்தி ஜீவிகளே !! உங்கள் அறியாமை கண்ணாடியை கலட்டி விட்டு புத்தியுடன் செயலாற்றக்கூடிய இளம் தலைமுறையின் கரங்களில் இந்த தேசத்தை கையளிக்க முன்வாருங்கள்.  

மூத்த பிரஜைகளை  ஆலோசகர்களாக கொண்டு புதிய திருப்பு முனையாக நமது தேசத்தை கட்டியெழுப்ப சரியான தலைமையின் கீழே சகல இளம் சமுதாயத்தினரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என்பதை சகலரும் நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும்,அல் -மீஸான் அறக்கட்டளை தலைவருமான அல் -ஹாஜ் நூருல் ஹுதா தமது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Loading...