Thursday, 5 November 2015

வாக்குறுதிகள் நிறைவேறாவிடில் ஆட்சி நீடிக்காது : சுமந்திரன் எம்.பி

வாக்குறுதிகள் நிறைவேறாவிடில் ஆட்சி நீடிக்காது : சுமந்திரன் எம்.பி
வாக்குறுதிகள்   நிறைவேறாவிடில் ஆட்சி நீடிக்காது : சுமந்திரன் எம்.பி
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் ஊழல் மோசடி ஒழிப்பு குறித்து அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், இன்னும் ஒருவருடத்திற்கும் ஆட்சி நீடிக்காதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவால் நேற்றை தினம் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது-
‘தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட நாட்களாக விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஏழு வருடங்களுக்கு மேல் இவ்வாறு தடுத்துவைக்க முடியாது. ஆகவே இதில் அரசியல் தலையீடுகள் உள்ளன. 

அவன்கார்ட் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு பிணை வழங்கப்படும்போது, நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கப்படாத காரணம் என்ன? தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு அணுகுமுறையும் மற்றையவர்களுக்கு வேறு அணுமுறையும் பின்பற்றப்படுவது ஏன்? தமிழர்கள் என்பதனாலா? அவர்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நடவடிக்கை ஒக்டோபர் 31ஆம் திகதியிலிருந்து நவம்பர் 7ஆம் திகதிக்குள் இடம்பெறுமென வாக்குறுதியளிக்கப்பட்டது. அதற்கு இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், வெளிப்படையான நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. எனவே, அரசின் உறுதிமொழி நிறைவேற்றப்படுமா?
நாம் மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதோடு, ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கும் குரல் கொடுத்தோம். இந்நிலையில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை உட்பட அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும். நிறைவேற்றப்படாவிட்டால் அரசாட்சி நீடிக்குமா என்பது சந்தேகத்திற்குரியது என கூறியுள்ளார்.
Loading...