Wednesday, 28 October 2015

குடாநாட்டுச் சந்தைகளில் மரக்கறி விலைகள் உயர்வு

குடாநாட்டுச் சந்தைகளில் மரக்கறி விலைகள் உயர்வு
குடாநாட்டுச் சந்தைகளில் மரக்கறி விலைகள் உயர்வு
குடாநாட்டுச் சந்தைகளில் மரக்கறி விலை நேற்று சடுதியாக அதிகரித்தது. அதனால் மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் பெரும் இடர்களை எதிர்நோக் கினர். இந்துக்களின் விரதங்களில் ஒன்றான கேதாரகெளரி விரதம் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.
குடாநாட்டின் பல பாகங்களிலும் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது. அதனால் குடாநாட்டு சந்தைகளிலும் நேற்று மரக்கறி வகைகளின் வரவு மிகக் குறைவாக இருந்தது. அவற்றின் விலைகளும் சற்று அதிகரித்துக் காணப்பட்டது. யாழ். குடாநாட்டுச் சந்தைகளில் பச்சைமிளகாய், தேசிக்காய் போன்றவற்றின் விலை நேற்றைய தினம் 400 ரூபாவைத் தொட்டிருந்தது. அதேவேளை சில மரக்கறி வகைகள் அறவே இல்லாமல் இருந்தன.
இந்துக்களின் விரதங்களில் ஒன்றான கேதாரகெளரி விரதம் ஆரம்பித்துள்ள  நிலையில் தாங்கள் விரும்பிய மரக்கறிகளைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர் கொள்வதோடு, மரக்கறிகளின் விலை ஏற்றத்தால் குறைந்தளவிலேயே அவற்றைக் கொள்வனவு செய்வதிலும் ஈடுபடுகின்றனர்.
இது தொடர்பாக மரக்கறி வியாபாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது தற்போது மழை அதிகரித்ததன் காரணமாக சந்தைக்கு மரக்கறிகள் குறைவாகவே கொண்டு வரப்படுகின்றன. தம்புள்ள மற்றும் கொழும்பில் இருந்து கொண்டு வரப்படும் மரக்கறிகளும் வருவது குறைவாகவே உள்ளன. அதனாலேயே இந்த விலையேற்றம். தற்போது பூப்பருவத்தில், பிஞ்சுப்பருவத்தில் இருக்கும் மரக்கறிகள்  மழையால் பாதிப்புக்களை எதிர்கொள்ளும். எனவே அவற்றிலும் இந்த விலை ஏற்றம் தங்கியிருக்கும் என்றனர்.     
Loading...