Wednesday, 28 October 2015

போர்க்குற்றத்தை ஆராய்ந்தால் நம்பிக்கையின்மை அதிகரிக்கும்

போர்க்குற்றத்தை ஆராய்ந்தால் நம்பிக்கையின்மை அதிகரிக்கும்
போர்க்குற்றத்தை ஆராய்ந்தால் நம்பிக்கையின்மை அதிகரிக்கும்
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நியமித்து போர்க்குற்றங்கள் குறித்து ஆராய்ந்தால் நாட்டில் இனங்களுக்கு இடையில் நம்பிக்கையின்மை மேலும் அதிகரிக்கும் என்பதுடன், தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியமும் உள்ளது என்று மகிந்த ஆதரவு அணியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசு கூறுகின்ற உள்ளக விசாரணைப் பொறிமுறைச் செயற்பாட்டில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டுமாயின், அதற்கு அரசமைப்பை மாற்றியமைக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பையும் நடத்த வேண்டும். இல்லாவிடின் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டுவர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். உள்ளக விசாரணைப் பொறிமுறை மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
எமது அணியே உண்மையான எதிர்க்கட்சியாகச் செயற்படுகின்றது. எதிர்க்கட்சியின் உண்மையான வகிபாகத்தை நாங்களே  மேற்கொண்டு வருகின்றோம். நாட்டுக்கு நலன் சேர்க்காத வகையில் அரசு மேற்கொண்டுவரும் செயற்பாடுகளை நாங்கள் எதிர்ப்பதுடன், அவை தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தல்களையும் முன்னெடுத்து வருகின்றோம். மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தல்களை முன்னெடுப்பதே மிகப்பிரதான விடயமாகும். அதனையே நாங்கள் தற்போது முன்னெடுத்து வருகின்றோம்.
இந்நிலையில் அரசு உள்ளக விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டுவர வேண்டுமானால், அதற்கு அரசமைப்பை மாற்றியமைக்க வேண்டும். அவ்வாறு அரசமைப்பை மாற்றியமைக்க வேண்டுமாயின் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டுவர முடியாது. எமது நாட்டின் சட்டக்கட்டமைப்புக்கு ஏற்ப எவரும் எவருக்கும் எதிராகவும் நீதிமன்றத்தை நாடலாம். நீதியை எதிர்பார்த்து நீதிமன்றம் போகலாம்.
ஆனால், அரசு தற்போது கூறுவதைப்போன்று உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நியமித்து, போர்க்குற்றங்கள் குறித்து ஆராய்ந்தால் இனங்களுக்கு இடையில் நம்பிக்கையின்மை மேலும் அதிகரிக்கும் என்பதுடன், தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் உள்ளது. பொதுவான அடிப்படையில் ஆணைக்குழுவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும்போது அவை மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது என்றார்.       
Loading...