Wednesday, 28 October 2015

இயற்கை இடர்கள் தொடர்பில் அலட்சிய போக்கு வேண்டாம்

இயற்கை இடர்கள் தொடர்பில் அலட்சிய போக்கு வேண்டாம்
இயற்கை இடர்கள் தொடர்பில் அலட்சிய போக்கு வேண்டாம்



இயற்கை இடர்கள் தொடர்பிலான முன்னெச்சரிக்கைகளைப் பொதுமக்கள் அலட்சியம் செய்யும் போக்குக் காணப்படுகின்றது. இதனால் உயிரிழப்புக்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. இயற்கை இடர்கள் தொடர்பில் முன்கூட்டியே வழங்கப் படுகின்ற தகவல்களைப் பொதுமக்கள் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும்.  இவ்வாறு யாழ்.மாவட்டச் செயலக இடர் முகாமைத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. 
யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அரச அதிபர் ந.வேதநாயகன் தலைமையில், வடகீழ்பருவப்பெயர்ச்சி மழை தொடர்பான முன் எச்சரிக்கை கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில், இடர்முகாமைத்துவ உறுப்பினர்கள் மற்றும் அதன் உபகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இந்தக் கலந்துரையாடலில், வெள்ளஇடர் - இடிமின்னல் தாக்கங்கள் தொடர்பில், பொது மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வூட்டுவது முன்னெச்சரிக்கை செய்வது என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. 
பொதுமக்களுக்கு இது தொடர்பிலான முன்னெச்சரிக்கைத் தகவல்கள், இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தினாலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினாலும் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் முன்னெச்சரிக்கைத் தகவல்களைப் பொதுமக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறுவதனால் உயிரிழப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே இந்த விடயங்களை அழுத்தம் திருத்தமாகப் பொதுமக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இடர்வேளைகளில் சகல திணைக்களங்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அத்துடன் பொதுமக்களின் பாதுகாப்புக்குரிய சகல நடவடிக்கைகளையும் எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது என்று இடர் முகாமைத்துவ வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.                          
Loading...