Monday, 24 August 2015

முஸ்லிம்களுக்கு தனியான அலகு வழங்கப்படுமா? இல்லையா? தெளிவுபடுத்த வேண்டும்—பொதுபலசேனா

முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக அலகுகள் வழங்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக தேசிய அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனத்-தெரிவித்த பொதுபலசேனா சிங்கள மக்களுக்கு அநீதி இழைக்கும் தேர்தல் முறைமையில் உடனடி மாற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தது. 

இது தொடர்பாக பொதுபல சேனாவின் நிர்வாக பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் தொடர்பாக தற்போது உடனடியாக கருத்து கூற முடியாது. ஆனால் நாட்டில் ஸ்திரமான ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்.

மேலும் ஆட்சியில் சிங்கள பௌத்தர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது நடந்து முடிந்த பொதுத்தேர்தலிலும் சிங்கள பௌத்தர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சிங்கள பௌத்தர்களின் மக்கள் பிரதி நிதித்துவம் பாராளுமன்றத்தில் குறைந்துள்ளது.

அத்தோடு இத்தேர்தல் முறைமையிலும் சிங்கள பௌத்தர்களின் மக்கள் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படவில்லை. எனவே உடனடியாக தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். பாராளுமன்றத்திற்குள் எமது மக்களுக்காக குரல் ஒலிக்கப்படா விட்டாலும் வெளியே எமது உரிமைக்குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கும் தகவல் அறியும் சட்ட மூலம் தொடர்பாக பேசப்படுகிறது.

ஆனால் தற்போதைய தலைவர்கள் முஸ்லிம்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை என்ன என்பதை வெளியிட வேண்டும். முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக அலகு வழங்கப்படுமா ? இல்லையா ? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இவர்களோடு இரகசிய ஒப்பந்தங்கள் உள்ளனவா என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைப்பதில் எந்தவிதமான தவறும் இல்லை. ஆனால் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்தான் பிரச்சினைகள் உள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்னமும் மக்கள் ஆதரவு உள்ளது என்பது இல் பொதுத்தேர்தலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே மஹிந்த ராஜபக்ஷ பின்னடைவு காணவில்லை என்றும் கலாநிதி டிலந்த விதானகே தெரிவித்தார்.
Loading...