Thursday, 13 August 2015

பத்திரிகைகளா? பரதேசிக் கூட்டமா? விபச்சாரக் கும்பல்கள் -- தினச்செய்தி -

இலங்கையில் இருந்து வெளிவரும் தேசியப் பிராந்திய தினசரிகள், இலத்திரனியல் ஊடகங்கள், இலங்கையின் 15 ஆவது நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தோல் உரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றது.


தேசிய தினசரிகளையும், மற்றும் இலத்திரனியல் ஊடகங்களையும் பார்க்கும் போது தேர்தல் வேட்பாளர்களின் விளம்பரங்களே நிறைந்துள்ளன. இவை எல்லாம் பணம் செய்யும் தந்திர முயற்சிகள்.



நடுநிலைமை வகிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு எல்லாக் கட்சிகளின் வேட்பாளர்களையும், மற்றும் சுயேச்சையாக போட்டியிடுபவர்களின் படங்களையும் போட்டு, அவர்கள் இன்னது இன்னது செய்வோம் என்று அரசியல் பிரச்சார மேடைகளில் கூறுபவற்றையும் போட்டு வாசகர்களை குழப்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.



இவ்வாறு விளம்பரம் கொடுத்த வேட்பாளர்களின் மேடைப்பேச்சுக்களையும் பிரசுரிக்கின்றனர். இந்த மேடைப்பேச்சு அறிக்கைகளை நடுநிலைமையுடன் பிரசுரிக்கப்படுகின்றதா? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்புகின்றது.



கூழைக் கும்பிடு போட்டு, நமட்டுச் சிரிப்புச் சிரித்து, கை நீட்டி விளம்பரங்களுக்குப் பணம் வாங்கி பிரசுரித்த பின்னர், மேடைப்பேச்சுக்களையும், வேட்பாளர்களின் அறிக்கைகளையும், நாம் பக்கம் சாயாமல் நடுநிலைமையுடன் தான் பிரசுரிக்கின்றோம் என்றால், அது பொய்க்கு சீவிச் சிங்காரிச்சு பொட்டு வைப்பது போல் உள்ளது இல்லையா?



விளம்பரங்களைப் போலவே, இந்த அறிக்கைகளும், அவற்றில் தரப்படும் தகவல்களும், தரவுகளும் கூலிக்கு மாரடிக்கும் செயல் என்று தான் நம்பவேண்டியுள்ளது.



ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படும் பத்திரிகைகளும், ஊடகங்களும் எமது நாட்டில் மாத்திரம் சீவிச் சிங்காரித்து தாசி கோலம் பூண்டு வலம் வருகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து ஒலிபரப்பாகும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வேட்பாளர்களின் விளம்பரங்களை தமது தொலைக்காட்சியில் ஒலிபரப்ப பல அலகுகளை வெளியிட்டுள்ளது.



ரூபா 10 லட்சம், ரூபா 5 லட்சம், ரூபா 2 லட்சத்து 50 ஆயிரம் என்பன அவற்றுள் அடங்கும். பார்க்காத தொலைக்காட்சிக்கு இவ்வளவு பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் வேட்பாளர்களைத்தான் இந்த நாட்டு மக்கள், இந்த நாட்டின் தலைமைகளுக்காகத் தெரிவு செய்யவேண்டியுள்ள தலைவிதியில் உள்ளனர்.



தாய் தடுத்தாலும் தமிழைப் பழித்தவனை ஒருபோதும் ‘தினச்செய்தி’ விட்டுவைக்காது. தாசிக் கோலம் பூணாது. அரசியல் விபச்சாரியாக மாறாது. எமது இணையதளத்தில் பல வேட்பாளரும் விளம்பரம் செய்ய முன்வந்தார்கள். இவர்களது விளம்பரங்களை ஏற்றுக்கொண்டால், நாம் எமது ஜனநாயக் கடமையிலிருந்து வழிதவறிப் போவோராக மாறிவிடுவோம்.



எனவே, எந்த வேட்பாளர்களின் விளம்பரங்களையும், அவர்கள் எவ்வளவோ கொட்டிக்கொடுக்க தயாராக வந்த போதும் எமது ‘தினச்செய்தி’ அதனை ஏற்கவில்லை. நாம் எமது கடமைகளைச் செய்கின்றோம். ஆனால், ஏனைய ஊடகங்கள் ஏன் இதைச் செய்ய முன்வரவில்லை?



14 ஆம் திகதிக்கு பிற்பாடும் இவ்வாறான தறிகெட்ட, தரம்கெட்டு, தாழ்ந்து மக்களை ஏமாற்றும் பொய்யுரைகள் நிறைந்த விளம்பரங்களை பத்திரிகைகளில் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையகம் அனுமதிக்குமா?



இது சம்பந்தமாக ‘தினச்செய்தி’ சட்ட விவாகாரங்களுக்கும், விசாரனைகளுக்கும் பொறுப்பான மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முஹமட் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது – ‘‘இன்றுடன் பத்திரிகைகள், இணைய ஊடகங்கள், 



தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளில் வெளிவரும் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் முடிவுக்கு வரும். வாரப் பத்திரிகைகள் நாளையுடன் முடிவடைகின்றது,” என்று கூறினார். இதுவே முடிந்த முடிவு.



ஆனால், இந்தத் தேர்தலின் முடிவுகள் நாட்டுமக்களின் தலைவிதிக்கு ஏதாவது நல்ல முடிவைக் கொடுக்குமா? தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போல் இருக்கின்றது?
Loading...