Tuesday, 5 May 2015

விவசாயி..!!


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்


வாய் வயிறு கட்டி
வெயிலில் வாடி
வியர்வை சிந்தி
விலையுயர்வு கண்டு அஞ்சி
வெறும் சோறும்
வெங்காயமும் உண்டது போக
சேமித்த செல்வத்தினையும் 
மிச்சம் சொச்சத்திற்கு
மனைவி மக்கள் காது கழுத்தில் கை வைத்து
குத்தகைக்கு வயல் எடுத்து
குரல் கொடுக்க யாருமின்றி
குடிசையில் குமருடனும் கரையானுடனும் வாழ்ந்து
ஒட்டு அவியத் தண்ணி கட்டி
ஓரமெல்லாம் கொத்தி
வாய்க்கால் வெட்டி
வக்கடை கட்டி
வரப்பில் வெயிலின் தாலாட்டில் படுத்துறங்கி
உழுதரவடித்து பதப்படுத்தி


விதை விசிறி

நீர் பாச்சி
நட்டுமை அடைத்து
உரம் எறிந்து
அரவம் எடுத்து
எண்ணை அடித்து
களை பிடிங்கி
கலப்பு எடுத்து
காவல் காத்து
குப்பை கூட்டி
நெருப்பு மூட்டி
நுளம்பினை விரட்டி
படை நடுங்கும் பாம்புடன் படுத்துறங்கி
யானையினை பூனையாய் விரட்டி
குறட்டை விரால் பிடித்து கறியாக்கி
வள்ளல் ஆய்ந்து வறுத்தெடுத்து
பொன்னாங்கனி கிள்ளி ஆணம் காய்ச்சி
திராய் பிடுங்கி சுண்டல் போட்டு
வயிறு புடைக்க உண்டு
விசிறிய விதையில் விளைந்த விதையில்
ஆடு மாடு குருவி கொக்கிற்கு உணவளித்து
அறுவடை செய்து
களவெட்டிப் பிச்சை கொடுத்து
புண்ணியம் தேடி
கண்ணியமாய் அறுவடை செய்து
முதுகெலும்பினை வளைத்து மூட்டை தூக்கி
பெயர் பெற்றிடுவான் விவசாயியாய்

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை

Loading...